Published : 26 Sep 2018 12:19 PM
Last Updated : 26 Sep 2018 12:19 PM

நான் ஏன் மாயாபஜார் படிக்கிறேன்?

abinayajpg

நூறு சதவீத மகிழ்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கும் மருதனின் சுவாரசியமான கட்டுரைகள்,  நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கும் கதைகள், பொது அறிவை மேம்படுத்த உதவும் டிங்குவின் பதில்கள் என அனைத்தும் படிக்க படிக்கத் தேன்! ’கண்டுபிடிப்புகளின் கதை’, ’படமும் கதையும்’, ‘படக்கதை’ என்று சிறுவர் முதல் பெரியவர்வரை அனைவரையும் ஈர்ப்பதால் புதன்கிழமையை ஆவலுடன் எதிர்பார்த்து, காத்திருக்கிறேன்.

- ச.அபிநயா, எழுத்தாளர், 10-ம் வகுப்பு, கே.எஸ்.ஆர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, தேவனாங்குறிச்சி, நாமக்கல்.

 

 

rajajpgright

குழந்தைகளை மட்டுமல்ல, பெரியவர்களையும் வண்ண மயமான மாய உலகத்துக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது மாயாபஜார்.  ’கதை’, ’படமும் கதையும்’, ’மாயத்தோற்றம்’ போன்ற பகுதிகள் குழந்தைகளை வெகுவாகக் கவர்கின்றன. ’படம் நீங்க… வசனம்  நாங்க…’ பகுதி மாணவர்களின் விருப்பத்துக்குரியதாகவும் நகைச்சுவை உணர்வைத் தூண்டுவதாகவும் இருக்கிறது. ’டிங்குவிடம் கேளுங்கள்’, ’இது எந்த நாடு?’ போன்றவை மாணவர்களைச் சிந்திக்க வைக்கின்றன. என்னைப் போன்ற ஆசிரியர்களுக்குப் புதிய தகவல்களை அள்ளித்தரும் அட்சயப் பாத்திரம் இது. தொடர்ந்து மாயாபஜாரைப் படித்தால், கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்க முடியும்!

-ராஜபுஷ்பா, ஆசிரியர், அரசு உயர்நிலைப் பள்ளி, திருமலைராஜபுரம், கும்பகோணம்.

 

மாயாபஜாரிடம் மாணவர்களை வசப்படுத்தும் மாயாஜாலம் இருக்கிறது. எவ்வளவு வயதானாலும் படக்கதையும் புதிர்களும் சுவாரசியப் படுத்துகின்றன. ’இடம் பொருள் மனிதர் விலங்கு’, ’கண்டுபிடிப்புகளின் கதை’, ’இது எந்த நாடு?’, ’கதைகள்’ போன்றவை சிந்திக்க வைக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்தது ‘டிங்குவிடம் கேளுங்கள்’. கேள்வி கேட்பது மாணவர்களுக்கே உரிய பண்பு. அந்தக் கேள்வி கேட்கும் திறனை மேம்படுத்த உதவுகிறது இது. கதைகளையும் கட்டுரைகளையும் எங்களுக்கு அழகாகச்  சொல்வார் தமிழாசிரியர். அதைக் கேட்கும்போது மகிழ்ச்சியும் புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டோம் என்ற மனநிறைவும் வரும். என் அறிவு வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கிறது மாயாபஜார்.

-அ. சுபிக்‌ஷா, 9-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

 

பாமரனுக்குச் சொன்னால் பண்டிதரும் புரிந்துகொள்வார் என்பதுபோல குழந்தைகளுக்குச் சொல்லும்போது பெரியவர்களும் புரிந்துகொள்கிறோம். குழந்தைகளுக்கான அறிவுத் தேடலை மையப்படுத்தி மாயாபஜார் வருவது பாராட்டுக்குரியது. மருதனின் தொடர், டிங்குவிடம் கேளுங்கள், அறிவியல் கட்டுரைகள், உலக நாடுகளின் அறிமுகம் போன்றவை சிறப்பாக இருக்கின்றன. எங்கள் பள்ளி மாணவர்களின் படைப்புகளும் மாயாபஜாரில் வருவதால், எதிர்பார்ப்பு அதிகரித்துவருகிறது. மாயாபஜாரை அறிவுப் பொக்கிஷமாகக் கருதுவதால், இனி வரக்கூடிய குழந்தைகளுக்கும் பயன்படும் விதத்தில் சேமித்து வைக்கிறேன்.

- ப. மணிகண்டபிரபு, ஆசிரியர், மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பூலுவப்பட்டி, திருப்பூர்.

 

pandiarajanjpg

குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி வருகிறது மாயாபஜார். கதை, கட்டுரை, கேள்வி-பதில், செயல்பாடுகளில் புதிய வடிவங்களைக் கட்டமைத்து, குழந்தைகளை ஈர்க்கிறது. கொ.மா.கோ. இளங்கோ, மருதன்  போன்றோரின் படைப்புகளை ரசித்துப் படிப்பேன். டாக்டர் கு. கணேசனின் ‘உடல் எனும் இயந்திரம்’ தொடரை மாணவர்களிடம் வாசித்துக் காட்டுவேன். ’டிங்குவிடம் கேளுங்கள்’, ‘படக்கதை’, ’இது எந்த நாடு?’, ’ஓவியங்கள்’,  ’புதிர்கள்’  என எல்லாமே நன்றாக இருக்கின்றன. தற்போது மாணவர்களும் எழுதுவது மகிழ்ச்சியளிக்கிறது.

- மொ. பாண்டியராஜன், ஆசிரியர், சம்பக் மழலையர் மற்றும் ஆரம்பப் பள்ளி, மதுரை.

 


 

 

suryajpgright

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு துறையில் எழுதப்படும் ’இடம் பொருள் மனிதர் விலங்கு’ எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. டிங்குவின் பதில்கள் என் பள்ளிப் படிப்புக்கு உதவியாக இருக்கின்றன. ’படம் நீங்க… வசனம் நாங்க…’  நகைச்சுவை விருந்து. மனித உடலைப் பற்றிய அறிவியல் உண்மைகளை எளிமையாகப் புரிய வைத்தது டாக்டரின் தொடர். ’படமும் கதையும்’,  ’புதிர்கள்’, ‘கண்டுபிடிப்புகளின் கதை’ ’இது எந்த நாடு?’ போன்றவை சுவாரசியமாக இருக்கின்றன. எங்களின் திறமைகளை உலகறியச் செய்கிறது ‘சித்திரமும் கைப்பழக்கம்’.

- எஸ். சூர்யா, 8-ம் வகுப்பு, சாய்ராம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, மேற்கு தாம்பரம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x