Last Updated : 03 Sep, 2018 11:41 AM

 

Published : 03 Sep 2018 11:41 AM
Last Updated : 03 Sep 2018 11:41 AM

சபாஷ் சாணக்கியா: இதனை இதனால் இவன்...

உங்களுக்கு துப்பறியும் புதினங்கள் படிப்பது பிடிக்குமா? Frederick Forsyth ன் 'The day of the Jackal' , 'Odessa File' நாவல்கள்  படித்து ரசித்திருக்கிறீர்களா?  அவரது சிறுகதைத் தொகுப்பின் பெயர் 'No Comebacks' அதே தலைப்பிலான இந்தக் கதையைக் கேளுங்கள்.

இங்கிலாந்தில் சாண்டர்ஸன் எனும்  ஒரு கொழுத்த பணக்காரர்.விரும்பியது எதையும் வாங்கக் கூடியவர். அப்படி வாங்கி வாங்கியே பழகி விட்டவர். ஒரு நாள் அவர் ஸ்பெயின் நாட்டு இளம் அழகி ஒருத்தியைப் பார்க்க நேரிடுகிறது. உடனேயே அவளை மணம் புரிய, ஆமாம், அதாவது   வாங்கிவிட நினைக்கிறார்!

ஆனால், அவள்  ஒரு  முன்னாள் இராணுவ வீரரின் மனைவி என்பதும்,  அந்த நலிந்த கணவனுக்கு உண்மையான பாசத்துடன் பணிவிடை செய்து வருகிறாள் என்பதும் தெரிய வருகிறது. அவர் செத்த  பிறகுதான் தனக்கு அவள் கிடைக்க வாய்ப்பு எனப் புரிந்ததும், அந்தப் பரிதாபப் பெரியவரைப் போட்டுத் தள்ளி விட முடிவெடுக்கிறார் அந்த பணத் திமிங்கிலம்.

எனவே கால்வி   எனும் ஒரு கூலிக் கொலைகாரனைப் பிடித்துப் பேசி,  அவர்கள் ஓய்வெடுக்கும் உல்லாசத் தீவிற்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் அந்தப் பெண்ணிற்கு இந்த ஏற்பாடு தெரிந்து விட்டால் காரியம் கெட்டு விடும் இல்லையா? எனவே, விஷயத்தைக் காதும் காதும் வைத்தது போல் முடிக்க வேண்டும். யாருக்கும் எந்த சந்தேகமும் வரக்கூடாது, பின்னால் எந்தப் பிரச்சினையும் கிளம்பா

மல் பார்த்துக்கணும் என்றெல்லாம் விபரமாகச் சொல்லி அனுப்புகிறார். கால்வி இந்த மாதிரி வேலைகளில் கை தேர்ந்தவன் ஆயிற்றே. மிகச் சாமர்த்தியமாக  துப்பாக்கியை ஒரு புத்தகத்தினுள்ளே மறைத்து வைத்து, எடுத்துச் சென்று விடுகிறான்.

சில நாட்களில் திரும்பிய அந்த மகா கெட்டிக்காரன் கால்வி,  அந்தக் கணவன் கதையை தான் முடித்து விட்டதாகப் பெருமையுடன் கூறுகிறான். பெருமகிழ்ச்சியுற்ற  சாண்டர்ஸன், பேசிய பணத்தைக் கொடுக்கிறார். அத்துடன்  ‘கொலையை வேறு யாரும் பார்க்க வில்லையே? நமக்குப் பின்னர் எதுவும் தொந்தரவு வராதே? ' எனக்  கேட்கிறார்.

‘அதெல்லாம் ஒன்றும் வராது. நான் தான் அவருடன் இருந்த அந்தப் பொம்பளையையும் சுட்டு சாட்சியை அழித்து விட்டேனே' எனப் பெருமையாகச் சொல்வான் அந்த மேதாவி  கால்வி!

ஐயா, உலகத்தில் மிகச் சவாலான வேலை, மற்றவர்களிடம் வேலை வாங்குவது தான். இன்றைய மேலாண்மைப் பேராசிரியர்கள் மேலாண்மையின் சாரமே இந்தப் ‘பணி ஒப்படைப்பு' (delegation) தான் என்கிறார்கள். நம்ம வள்ளுவர், எந்தவொரு  பணியையும் ஒருவனிடம் ஒப்படைக்கும் முன்பு,  'இதனை இதனால் இவன் முடிப்பான் என்று ஆராய்ந்து அதன் பின்னரே அப்பணியை அவனிடம் கொடுக்க வேண்டும்' என்பார்.

அண்ணே, அலுவலகமோ, ஆட்சியோ, இல்லமோ, யார் ஒருவராலும்,எல்லா வேலைகளையும் அவர் ஒருவராகவே செய்ய  முடியாதல்லவா? அதனால் பணி ஒப்படைப்பு தவிர்க்க முடியாதது. ஆனால், மற்றவர்களிடம் ஒரு செயலைச் செய்யச் சொல்லும் பொழுது, அதை அவரால் சரியாகச் செய்ய முடியுமா, அவர்கள் நம் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார்களா என ஆராய்ந்து  தெளிந்த பின்னரே கொடுக்க வேண்டுமல்லவா?

'நாங்கள்  நல்ல பணியாளர்களை வேலைக்கு எடுப்பதில்லை. உத்வேகமுடைய பிரமாதமான பணியாளர்களைத் தான் தேடுகிறோம்' என்கிறார் எரிக் ஹாப்ஸ் (CEO, Technology Associates)

பல்வேறு ஆய்வுகளின்படி, மேலாளர்கள் பொதுவாகத் தங்கள் பணியாளர்களிடம் மூன்று குணங்களை எதிர்பார்க்கிறார்களாம். முதலாவது ஏதாவது பிரச்சினை என மேலதிகாரியை அணுகும் பொழுது, அத்துடன் பணியாளரின் பார்வையில்  அதற்கான தீர்வு என்ன என்பதுடன் செல்ல வேண்டும். உதாரணமாக ஒரு வாடிக்கையாளரிடமிருந்து வெகு நாட்களாகப் பணம் வசூலாகவில்லை என்று பிரச்சினையைச் சொன்னால் போதாது. அதற்கான நடவடிக்கை என்ன எடுக்கலாமென்றும் உங்கள் அபிப்பிராயத்தையும் சொல்ல வேண்டும்.

அடுத்த எதிர்பார்ப்பு, நீங்கள் உங்கள் வேலையை மாத்திரம் பார்த்து விட்டு ஓடி விடாமல், அலுவலகத்தில் மற்ற விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது. நிறுவனத்தின் வளர்ச்சியைத் தங்கள் வளர்ச்சியாகப் பார்ப்பவர்களின் குணம் இது தானே?

மூன்றாவது எதிர்பார்ப்பு, தேவை ஏற்படும் பொழுது நீங்கள் உங்கள் மேலதிகாரியின் பொறுப்புகளைத் தயங்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது. மேலதிகாரி திடீரென்று நோய் வாய்ப்பட்டால், பணிகள் நிற்காமல், உங்களால் சுமுகமாக நடத்தப்பட வேண்டும். என்ன இது நியாயமான எதிர் பார்ப்புத் தானே?

'முதலாளியின் குணம் அறிந்தவர்கள் காரியத்தை வெற்றிகரமாகச் செய்து முடிப்பார்கள் ' என்கிறார் சாணக்கியர். மேலாளர்களும் முதலாளிகளைப் போலத் தானே? நல்ல பணியாளர்களின் அடிப்படைத்  தேவை, தனது மேலாளரது நியாயமான எதிர்பார்ப்புகள் என்ன  எனத் தெரிந்து கொண்டு அதன்படி நடந்து கொள்வது தானே?

-

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x