Last Updated : 08 Sep, 2018 11:29 AM

 

Published : 08 Sep 2018 11:29 AM
Last Updated : 08 Sep 2018 11:29 AM

நலம், நலமறிய ஆவல் 51: கல்லீரலுக்குக் கல்லறை கட்டும் மன அழுத்தம்!

எனக்கு வயது 48. ஆறு ஆண்டுகளாக நீரிழிவு உள்ளது. சில மாதங்களாக வயிற்றில் பல பிரச்சினைகள். உணவுச் செரிமானத் திறன் குறைந்துவிட்டது. பசி இல்லை. மலச்சிக்கல் படுத்துகிறது. அதற்கு மாத்திரை, மருந்து  சாப்பிட்டால் அளவில்லாமல் மலம் போகிறது. எப்போதும் சோர்வாக உணர்கிறேன்.

சமீபத்தில் வயிற்றை ஸ்கேன் எடுத்துப் பார்த்தேன். கல்லீரலில் கொழுப்புப் படிந்துள்ளதாகச் சொன்னார்கள். எனக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. உடற்பருமனும் உள்ளது. இதற்கு என்ன மாதிரியான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்? இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? அவற்றைத் தடுக்க என்ன வழி?

- பெ. ஆறுமுகநாதன், சென்னை - 6

கல்லீரலில் கொழுப்புப் படிவதை ‘கொழுப்புக் கல்லீரல்’ (Fatty liver) என்கிறோம். இந்தப் பிரச்சினைக்கு நாம் சாப்பிடும் இனிப்பு, கொழுப்பு மிகுந்த உணவுதான் முக்கியக் காரணம். அடுத்த காரணம் அளவில்லாமல் அருந்தும் மது.

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைச் சேகரித்துவைப்பது கல்லீரல். அவசரத்துக்கு உடலுக்குச் சக்தியை வழங்க இயற்கை தந்திருக்கும் ஏற்பாடு இது. இப்படிச் சேகரிக்கப்படும் கொழுப்பு ஒரு கட்டத்தில் கல்லீரலுக்கு எதிரியாகிவிடுகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

உணவைக் குறைத்து, உடற்பயிற்சி செய்து, உடற்பருமனைக் கட்டுப்படுத்தினால் கொழுப்புக் கல்லீரல் வராமல் தடுக்கலாம். இல்லையென்றால், தான் சேகரித்த கொழுப்பை ஆரம்பத்தில் இடுப்புக்கும் தொடைக்கும் சளைக்காமல் அனுப்பும் கல்லீரல், ஒரு கட்டத்தில் அலுத்துப் போய், தன்னிடமே வைத்துக்கொள்ளும். அப்போதுதான் ‘கொழுப்புக் கல்லீரல்’ தலைகாட்டும்.

மன அழுத்தம் கவனம்!

இந்தப் பிரச்சினைக்கு, மிக முக்கியக் காரணியாகத் தற்போது வளர்ந்து வருவது, மன அழுத்தம்! நீங்கள் ஆரோக்கிய உணவைத்தான் சாப்பிடுகிறீர்கள். துரித உணவை நினைத்துப் பார்ப்பதே இல்லை. உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறீர்கள். மதுவைத் தொடுவதில்லை.

என்றாலும், கடுமையான மன அழுத்தம் இருக்கிறது என்றால், நீங்கள் அழைக்காமலேயே வந்துவிடும் கொழுப்புக் கல்லீரல்! எப்படி? மன அழுத்தம் காரணமாகச் சில ஹார்மோன்கள் அதீதமாகச் சுரந்து, காய்ச்சி ஆறவைத்த பாலில் ஆடை கட்டுவதைப் போல் கல்லீரலில் கொழுப்பைச் சேர்த்துவைக்கும்.

இந்தப் பிரச்சினைக்கு அடுத்த காரணம், நீரிழிவு. இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்சுலின் சரியாகச் சுரக்காது என்பதால், ரத்தத்தில் இருக்கிற சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியாது. அதுபோல் தேவைக்கு மேல் உள்ள கொழுப்பு அமிலங்களும் ரத்தத்தில் தேங்கும். இவற்றைக் கல்லீரல் தன் பக்கம் இழுத்துக்கொள்ளும். நீரிழிவைக் கட்டுப்படுத்திவிட்டால், கொழுப்புக் கல்லீரலுக்கு இடமில்லாமல் போகும். தவறினால், ‘முதல் கட்டக் கொழுப்புக் கல்லீரல்’ (Grade I Fatty Liver) உண்டாவதைத் தடுக்க முடியாது.

இது, பெண்கள் ஃபேஷியல் செய்யும்போது சில கிரீம்களை முகத்தில் பூசிக்கொள்வதைப் போல, கல்லீரலின் மேற்புறம் மட்டுமே கொழுப்பு படியும் நிலைமை. இது எந்தவோர் அறிகுறியையும் வெளிக்காட்டாமல், எந்த வழியிலும் ஆரோக்கியத்தைக் கெடுக்காமல் அமைதியாக இருக்கும். வேறு காரணத்துக்காக வயிற்றை ஸ்கேன் செய்யும்போது, கல்லீரலில் கொழுப்பு சேர்ந்திருப்பது எதேச்சையாகத் தெரியும்!

இந்த நேரத்தில் நாம் உஷாராகிவிட வேண்டும். இதற்கான காரணத்தை அறிந்து சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லையென்றால், இது அடுத்த நிலைக்குத் தாவிவிடும். இந்தக் கட்டத்தில் கல்லீரலில் அழற்சியும் வீக்கமும் உண்டாகின்றன. கல்லீரல் செல்கள் இருக்கும் இடத்தில் ஆங்காங்கே குவியல் குவியலாகக் கொழுப்பு செல்கள் இடம்பிடிக்கின்றன.

அதனால் நீங்கள் சொன்ன மாதிரி உணவுச் செரிமானம் குறைவது, வயிறு உப்புவது, வயிற்று வலி, வாந்தி, மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் தொடங்கும். காமாலைகூட எட்டிப் பார்க்கும். சோர்வு படுத்தியெடுக்கும். ஆனாலும், உயிருக்கு ஆபத்து இருக்காது. இப்போது உங்களுக்கு உள்ள நிலைமை இதுதான்.

என்ன செய்ய வேண்டும்?

கொழுப்பின் காரணமாகக் கல்லீரலில் சேர்ந்திருக்கும் பாதிப்பைத் துல்லியமாக அறிவதற்கு என்சைம் பரிசோதனைகள் இருக்கின்றன. அத்துடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ‘கல்லீரல் திசு ஆய்வு’ ஆகியவை கைகொடுக்கின்றன. ‘ஃபைப்ரோஸ்கேன்’ எனும் நவீன சோதனையும் இப்போது வந்துள்ளது.

இதன் மூலம் நோயைக் கணித்து வாழ்க்கைமுறை மாற்றங்கள், மதுவை நிறுத்துதல், தகுந்த மாத்திரை, மருந்துகள், ‘வைட்டமின் இ’ கலந்த ஆன்டிஆக்ஸிடன்டுகள், உணவில் கவனம் போன்றவற்றால் கொழுப்புக் கல்லீரலைக் கட்டுப்படுத்திவிடலாம்.

இந்த நிலைமையிலும் நீங்கள் மது அருந்துவதை நிறுத்தாமலும் உணவில் கவனம் செலுத்தாமலும் இருந்தால், கொழுப்புக் கல்லீரல் கோபித்துக்கொள்ளும். அது இரண்டாவது கட்டத்திலிருந்து இறுதிக் கட்டத்துக்குத் தாவிவிடும்.  அப்போது உயிருக்கு ஆபத்து வரக்கூடும். எப்படி? இதுவரை கல்லீரலில் அழற்சி ஏற்பட்ட இடங்களில் தழும்புகள் தோன்றி, சுருங்கும்.

தேங்காய்க்குள்ளே இருக்கிற ‘பருப்பி’ல் அதன் வெளிப்பக்கம் இருக்கிற நார்கள் இடம்பிடித்துவிட்டால் எப்படி இருக்கும்? கற்பனை செய்துபாருங்கள். அப்படித்தான் கல்லீரல் இப்போது இருக்கும். இதற்கு ‘ஃபைப்ரோசிஸ்’ என்று பெயர். இதுவே நாளடைவில் ‘சிரோசிஸ்’ எனும் கல்லீரல் சுருக்க நோய்க்குக் கொண்டு சென்று உயிருக்கு ஆபத்து நெருங்கும்.

ஆனால், நவீனத் தொழில்நுட்பத்தில், இதற்கும் சிகிச்சை வந்துவிட்டது. ‘கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை’ (Liver transplantation என்பது அதற்குப் பெயர். என்ன பல லட்சங்கள் செலவாகும். பரவாயில்லையா?

தடுக்கும் வழி என்ன?

# மது அருந்துவதை மறக்க வேண்டும்.

# உடல் எடையைச் சரியாகப் பேண வேண்டும்.

# கொழுப்பு மிகுந்த உணவுகளான சிவப்பு இறைச்சி, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

# நொறுக்குத் தீனிகளை ஓரங்கட்டுங்கள்.

# கீரைகள், பழங்கள், காய்கறிகளை தேவைக்கு எடுத்துக்கொள்ளுங்கள்.

# ஒமேகா 3 சத்துள்ள மீன் உணவைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

# தினமும் ஓர் உடற்பயிற்சி அவசியம்.

# மன அழுத்தம் ஆகாது.

# 6 - 8 மணி நேரம் இரவுத் தூக்கம் அவசியம்.

# நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்.

(அடுத்த வாரம் தொடர் நிறைவடையும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x