Last Updated : 01 Sep, 2018 11:12 AM

 

Published : 01 Sep 2018 11:12 AM
Last Updated : 01 Sep 2018 11:12 AM

ஜன்னல்கள் ஜாக்கிரதை...

டாக்டர் ஒருவர் என்னிடம் ஒரு முறை கூறினார். நம் உடலில் முக்கிய உறுப்பு எது என்று கேட்டால் சிலர் இதயம் என்பார்கள். சிலர் மூளை என்பார்கள். நுரையீரல், சிறுநீரகம் என்றுகூடப் பதில் வரும். ஆனால் யாருமே கையைப் பற்றி நினைக்க மாட்டார்கள். மிக அதிகமாகத் தினசரி பாதிப்புக்கு உள்ளாவது கைதான். வெளியிலிருந்து உடலின் எந்தப் பகுதிக்கு ஆபத்து என்றாலும் நாம் கைகளைக் கொண்டுதான் அதைத் தடுக்கப் பார்க்கிறோம். விபத்து நேரும்போது முக்கிய உறுப்புகளைப் பாதுகாப்பதில் கைதான் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஒருவிதத்தில் வீடுகளின் ஜன்னல்களைக் கைகளோடு ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. எவ்வளவு விதவிதமான வெப்பங்களை அவை தாங்க வேண்டியிருக்கிறது. திறக்கப்பட்ட நிலையிலும் சரி, மூடிய நிலையிலும் சரி. கடும் கோடை, பெரும் மழை, அசாத்திய பனி, புழுதிக் காற்று என்று எல்லாமே தங்களைக் கைவரிசையை ஜன்னல்கள்மீது காட்டுகின்றன. புறஊதாக் கதிர்களின் தாக்கம் வேறு.

ஆனால் நாம் எவ்வளவு தூரம் ஜன்னல்களைப் பராமரிக்கிறோம் என்பது கேள்விக்குறிதான். சீரான இடைவெளிகளில் ஜன்னல்களை மேற்பார்வையிடுவது என்பது மிக அவசியம். ஜன்னல்கள் எந்த நிலையில் உள்ளன, அவற்றை நிலைநிறுத்த முறுக்கப்பட்டிருக்கும் ஸ்ரூக்கள் சரியாகப் பொருத்தப்பட்டுள்ளனவா, அவற்றைச் சுற்றியுள்ள மரச்சட்டங்கள் விரிசல் அடையாமல் உள்ளனவா?

இவற்றையெல்லாம் நிச்சயம் நாம் சரிபார்க்க வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது இப்படி மேற்பார்வையிட வேண்டும். வீட்டின் முகப்பில்லுள்ள ஜன்னல்களை மட்டுமல்லாமல் நாலாப் பக்கங்களிலும் உள்ள ஜன்னல்களையும் கவனித்துப் பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஜன்னலிலுள்ள மர ஃப்ரேம்களில் தண்ணீர் தொடர்ந்து தங்கி அவற்றில் ஈரப்பதம் அதிகமாகி அவை வலு இழந்திருக்கலாம்.

சில சமயம் இந்த மரப்பகுதிகள் உளுத்துப் போயிருக்கலாம். ஜன்னல் கண்ணாடிகளிலோ அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலோ ஏதாவது கறை படிந்திருக்கலாம். அவை ஏதாவது அமிலக் கறையாக இருந்தால் காலப்போக்கில் பாதிப்புகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும். ஜன்னல் கதவு சரியாகச் சாத்திக் கொள்ளாமல் போனால் மழை நீரும் காற்றும் அறைக்குள் வரலாம்.

ஈரப்பதம் காரணமாகக் குளிர்காலங்களில் ஜன்னல் கதவை முழுமையாகச் சாத்த முடியாமல் போகலாம். கோடைக்காலத்தில் ஜன்னல் கண்ணாடிக்கும் அதன் ஃபிரேமுக்குமிடையே சிறு இடைவெளிகள் உண்டாகலாம். வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க வேண்டுமா, தள்ளிப் போடலாமா என்ற முடிவெடுக்கும்போது சுவரை மட்டுமே நாம் யோசிக்கிறோம். ஜன்னல் ஃபிரேம்களையும் கவனிப்பது அவசியம்.

அழுக்கடைந்த ஜன்னல் கண்ணாடிகளை ஸ்பாஞ்ச் அல்லது துணியைத் தண்ணீரில் நனைத்துத் துடைக்கலாம். அழுத்தமாக ஏதாவது கறையோ (பெயிண்ட் கறை போல) படர்ந்திருந்தால் பெட்ரோலியம் அல்லது ஸ்பிரிட் போட்டுத் துடைக்கலாம். இவற்றைப் பயன்படுத்திய பிறகு ஈரத் துணியாலும் துடைக்க வேண்டும். சிலர் கத்தி, ரேசர் பிளேடு போன்றவற்றைக் கொண்டு இந்தக் கறைகளை நீக்கப் பார்ப்பார்கள். அது பெரும் தவறு. அதேபோல அமிலங்களைக் கொண்டு ஜன்னல் கண்ணாடிப் பரப்பைத் துடைப்பதும் தவறு.

ஜன்னலிலுள்ள மர ஃபிரேம்கள் பொருத்தப்பட்ட ஸ்க்ரூக்கள் ஆடாமல், துருப்பிடிக்காமல் இருக்கின்றனவா என்பதையும் உறுதிசெய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் மொத்த ஜன்னலையும் மாற்றும்படி நேர்ந்து பட்ஜெட் கையைக் கடிக்கும் அல்லது ஒரு கட்டத்தில் கண்ணாடி உடைந்து வீட்டில் விபத்துகள் நேரலாம்.

வெளிநடப்பைப் பார்ப்பதற்காக ஜன்னல்களின் பக்கம் பார்வையைத் திருப்புகிறோம். அந்த ஜன்னல்களை நோக்கியும் நம் பார்வை பட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x