Published : 25 Aug 2018 12:31 PM
Last Updated : 25 Aug 2018 12:31 PM

கற்பக தரு 20: வெற்றிலைப் பெட்டி

வெற்றிலை போடுவது ஆசியா முழுவதும் காணப்படும் ஒரு வழக்கம். வெற்றிலையில் இணைத்துச் சுவைக்கப்படும் பாக்கு, சுண்ணாம்பு ஆகிய சேர்மானங்களுக்குப் பனையோடு நெருங்கிய தொடர்பு உண்டு. பாக்கு மரம் பனை குடும்பத்தைச் சார்ந்ததுதான். பனை மரங்களின் தோற்றம் ஆசியாவில் இருந்துதான் வந்திருக்கும் என்ற கோணத்திலும் இன்று ஆய்வுகள் செய்யப்படுகின்றன. சுண்ணாம்பு எப்படி உணவின் ஒரு பகுதி ஆனது என்பது குறித்த ஒரு தேடல், நம்மைப் பதனீரின் அண்டைக்கு இழுத்துச்செல்லும்.

வெற்றிலை குதப்பும் கோளம்பி எனும் பித்தளைப் பாத்திரம் குமரி - கேரள வழக்கத்தில் கடந்த காலங்களில் இருந்துள்ளது. மங்கல காரியங்களுக்கு வெற்றிலை வைத்து அழைக்கும் நம் பண்பாட்டில் இன்றும் வழக்கம் இருக்கிறது. வெற்றிலை மருந்தாகவும் வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் பண்பாட்டின் அடையாளமாகவும் இருக்கிறது. வெற்றிலையையும் இடும் பொருட்களையும் வைக்க பயன்படுத்தும் பெட்டியின் பெயர்தான், வெற்றிலைப்பெட்டி. இந்த வெற்றிலைப் பெட்டிக்கெனத்

தனி மரியாதை உண்டு.

பொதுவாக, வெற்றிலை என்பது மென்மையான இலை. வெயில் பட்டால் துவண்டுவிடும் தன்மை கொண்டது. ஆகவே, வெற்றிலை இடுவது ஒரு பழக்கமான பின்பு, அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் வந்தது. பனையோலையில் வைக்கப்பட்ட பொருட்கள் கெடாது. அந்த அடிப்படையில் வெற்றிலையைப் பாதுகாக்க பனையோலையில் பெட்டி செய்யும் வழக்கம் வந்தது. மேலும் பொருட்கள் பாதுகாப்பாகவும் சிதறாமலும் இருக்க ஒரு வடிவம் தேவைப்படும். ஆகையால், பல்வேறு வடிவங்களுக்கும் பின்பு உருபெற்ற ஒரு வடிவமாக இது இருக்க வேண்டும்.

karpaga 2jpg

குருத்தோலையில்  செய்யப்படும் இவ்வித வெற்றிலைப்பெட்டிகள் கைக்கு அடக்கமானவை. இவை ஒரு பகுதி பொருட்களை வைக்கவும் மற்றொரு பகுதி மூடியாகவும் செயல்படும். இரண்டும் ஒன்று போல் காணப்பட்டாலும், இவற்றின் வடிவம் ஒன்று ஒன்றை நிறைத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இவ்வித வடிவங்களுக்கு இருமுனை முக்கு என்ற பின்னல் வடிவம் ஆதாரமானது.

பயன்பாட்டைப் பொறுத்த அளவில் பத்து வருடங்களுக்கு மேலும் வைத்து அன்றாடம் பயன்படுத்தும் மக்கள் இருக்கிறார்கள். இன்றைய சூழலில், இவ்விதச் சிறு பெட்டிகள் பரிசளிக்க ஏற்றவை. குறிப்பாக, நகைக் கடைகள் இவற்றில் நகைகளை வைத்து விற்பனை செய்யலாம் எனும் அளவுக்கு மங்கலகரமானது.

குமரி மாவட்டைத்தைச் சார்ந்த, கருங்கல் பகுதிக்கு அருகில் உள்ள காட்டுவிளை செல்லதுரை அவர்கள் இவ்விதமான பெட்டிகளைச் செய்துவருகிறார்கள். ஒரு பெட்டியைச் சுமார் 150 ரூபாய்க்கு விற்கிறார். மேலும் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு அவர் பயிற்சியும் வழங்க ஆயத்தமாக இருக்கிறார்.

கட்டுரையாளர், பனை ஆய்வாளர்
தொடர்புக்கு: malargodson@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x