Last Updated : 12 Sep, 2018 11:17 AM

 

Published : 12 Sep 2018 11:17 AM
Last Updated : 12 Sep 2018 11:17 AM

உடல் எனும் இயந்திரம் 40: உயிர் எங்கே இருக்கிறது?

‘நினைவாற்றல்’ என்பது மூளை செய்யும் விந்தை; சரியாகப் புலப்படாத புதிர்! இன்னும் இது குறித்து நாம் முழுமையாக அறியவில்லை. இதுவரை தெரிந்தவரை, பெரும்பாலான நினைவுகள் பெருமூளையில்தான் பதிவாகின்றன. அதற்குத் துணைபுரிய ஹிப்போகாம்பஸ், அமிக்டாலா அடங்கிய ‘லிம்பிக் சிஸ்டம்’ என்ற அமைப்பும் மூளையில் உள்ளது. நினைவாற்றலுக்கும் அறிவாற்றலுக்கும் ஆதாரமாக இருப்பது இதுதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

நினைவாற்றலில் ‘குறுகிய கால நினைவாற்றல்’ (Short term memory), ‘நீண்ட நாள் நினைவாற்றல்’ (Long term memory), ‘திறமை சார்ந்த நினைவாற்றல்’ (Skill memory) என மூன்று விதம் உண்டு. நம் புலன்களிலிருந்து வரும் செய்திகளை லிம்பிக் சிஸ்டம் வரவேற்று, பெருமூளையின் முன்பகுதிக்கு அனுப்புகிறது. அந்தச் செய்திகளைப் பெருமூளை ஒலியாகவோ, காட்சியாகவோ, உணர்வாகவோ தற்காலிகமாகச் சேமித்துக்கொள்கிறது.

ஒரே நேரத்தில் 7 செய்திகள் சுமார் ஒரு நிமிட நேரத்துக்கு இங்கே தங்குகின்றன. புதிய செய்திகள் நுழையும்போது பழையவை அழிகின்றன. உதாரணமாக, காலையில் படித்தது நினைவில் இருக்கிறது; முதல் நாள் படித்தது நினைவில் இல்லை. இது, குறுகிய கால நினைவாற்றல்.

அதேநேரத்தில் ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்தால், அதே விஷயத்தை அதிக காலம் நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது. இது, நீண்ட நாள் நினைவாற்றல். உதாரணமாக, பரீட்சைக்குப் படித்தது மறக்காமல் இருக்கிறது. ஒரு தூண்டுதல் மூலம் பழைய நினைவுகளைத் திரும்பப் பெறவும் முடிகிறது. ‘புத்தகக் காட்சி’ என்றதும், முன்பு ஒருமுறை புத்தகக் காட்சிக்குச் சென்றதும், போட்டிகளில் பரிசு பெற்றதும், ஆசிரியர் பாராட்டியதும் ஒரு சங்கிலித் தொடர்போல் நினைவுக்கு வருவது இந்த நினைவாற்றலுக்கு உதாரணம். சந்தோஷமான / துக்கமான சம்பவங்கள் ஆயுள் முழுவதும் நினைவில் நிற்பதும் இப்படித்தான்.

‘திறமை சார்ந்த நினைவாற்றல்’ சற்றே வித்தியாசமானது. இதற்குச் சிறுமூளைதான் சிறப்பு மையம். சைக்கிள், கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவது, வீணை, கிடார் போன்ற இசைக் கருவிகள் வாசிப்பது, நீச்சலடிப்பது, டைப் செய்வது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள். ‘தசைகளுக்கு நினைவாற்றல் உண்டு’ என்று எழுதியிருந்தேன். மேற்சொன்ன திறமைகளில் பெரும்பாலும் தசைகள்தான் பயிற்சி பெறுகின்றன. அங்குள்ள நரம்பணுக்கள் அந்தப் பயிற்சியை நினைவுகொள்கின்றன.

அந்த நிகழ்வின் ஆரம்பத்தில் மட்டும் தசைகள் மூளையிலிருந்து ஆணையைப் பெறுகின்றன. தொடர்ச்சியாக அங்கிருந்து ஆணைகள் வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல் தாமாகவே அந்தச் செயல்களைத் தொடர்கின்றன. அதனால்தான் பேசிக்கொண்டே சைக்கிள் ஓட்டவும், கண்களைக் கட்டிக்கொண்டு அந்தரத்தில் கயிற்றின் மேல் நடக்கவும் முடிகிறது. இப்படிச் சொன்னால் இது இன்னும் நன்றாக விளங்கும்: நீச்சல் பயிற்சி பெறாத ஒருவர் நீச்சலடிக்க விரும்பினாலும், உடனே அவரால் நீச்சலடிக்க முடியாது. அவருடைய தசைகளுக்குப் பயிற்சி சார்ந்த நினைவு இல்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

அறிவு என்பது என்ன?

முந்தைய அனுபவத்தையும், அதனால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பையும் பலனையும் நினைவில் கொண்டு, அதன்படி நடந்துகொள்வதுதான் ‘அறிவு’. உதாரணமாக, ‘பாம்பு கடித்துவிடும்’ என்கிற அறிவு நமக்கு ஹிப்போகாம்பஸில் ஏற்படுகிறது. அடுத்தமுறை பாம்பைப் பார்த்ததும் அச்சப்படுகிறோம்; தப்பி ஓடப் பார்க்கிறோம் அல்லது அதை விரட்டுகிறோம். இவற்றைக் கவனித்துக்கொள்வது அமிக்டாலா.

மறதி என்றால் என்ன?

மூளை சில விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பதிவு செய்துகொள்கிறது; பல விஷயங்களை ஒதுக்கிவிடுகிறது. இதுதான் மறதிக்கு அடிப்படை. நம் பெயர், முகம், முகவரி போன்ற தேவையான விஷயங்களை மூளை எளிதில் மறப்பதில்லை. அதுபோல் நாம் விரும்பிச் செய்யும் செயல்களை மூளை தன்னிடம் எப்போதும் போட்டுக் கொள்கிறது. ஈடுபாடு இல்லாமல் செய்யும் செயல்களை அது விட்டுவிடுகிறது. அதனால்தான் ‘கஷ்டப்பட்டுப் படிப்பதைவிட இஷ்டப்பட்டுப் படிப்பவர்களுக்குப் பாடங்கள் மறப்பதில்லை!’ என்கிறார்கள்.

அடுத்தது, தூக்கம். உடல் செல்களின் ஓய்வுக்கும் புதுப்பித் தலுக்கும் புத்துணர்வுக்கும் 8 மணி நேரத் தூக்கம் தினமும் அவசியம். இரவு வந்ததும், கண்களில் இருந்து ரெட்டிகுலர் அமைப்புக்குச் செய்தி போகிறது. அது ஹைப்போதலாமஸில் உள்ள உயிர்க்கடிகாரம் மூலம் பீனியல் சுரப்பிக்குத் தகவல் அனுப்புகிறது. அது ‘மெலட்டோனின்’ ஹார்மோனைச் சுரக்கிறது. இது மூளையின் பெரும்பாலான மின்தூண்டல்களைத் தற்காலிகமாக அணைத்துவிடுகிறது. உடனே நம் கண்கள் சொருக, தூக்கம் ஆட்கொள்கிறது.

தூக்கத்தில், ‘விழி அசைவு இல்லாத் தூக்கம்’ (Non-rapid eye movement sleep - NREM Sleep), ‘வேகவிழி அசைவுத் தூக்கம்’ (Rapid eye movement sleep - REM Sleep) என இருவகை உண்டு. நாம் தூங்கும்போது இவை மாறி மாறி வரும். முதலாவது ஆரம்பநிலைத் தூக்கம். இரண்டாவது ஆழ்நிலைத் தூக்கம்.

கனவு ஏற்படுவது எப்படி?

வாழ்வின் நிகழ்வுகளோடு அவரவருக்கு ஏற்படும் அனுபவங்களின் பதிவுகளே கனவுகள். பெரும்பாலும் ஆழ்ந்த தூக்கத்தில்தான் கனவுகள் வரும். ஆனாலும், ஆரம்பநிலைத் தூக்கத்திலும் அவை வரலாம். விடியற்காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் வரும் கனவுகள் மறுநாள் நினைவுக்கு வரும். ஆரம்பநிலைத் தூக்கத்தில் உண்டாகிற கனவுகள் நினைவில் பதியாது; மறந்து விடும்.

உயிர் எங்கே இருக்கிறது?

மூளையில் இருக்கிறது! சுவாசமும் நாடித்துடிப்பும் நின்று போவதை ‘இதய இறப்பு’ (Cardiac death) என்கிறோம். மூளை செயலிழந்து போவதை ‘மூளை இறப்பு’ (Brain death) என்கிறோம். மூளை இறந்துவிட்டால், இதயம் துடித்தாலும் பலன் இல்லை. அதனால்தான் விபத்துகளில் மூளை இறப்புக்கு ஆளானவர்களின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண், தோல் போன்ற முக்கிய உறுப்புகளைத் தேவையானவர்களுக்குக் கொடுத்துக் காப்பாற்றுகிறார்கள். ஆகவே, உடலில் உயிர் இருக்கும் இடம் மூளை.

இத்தகைய மகத்துவம் வாய்ந்த மூளையைப் பாதுகாக்க வேண்டியது நம் கடமையல்லவா?

சுய சுத்தம் மற்றும் சூழல் காத்தல் வழியாக நோய்த்தொற்றுகளைத் தவிர்த்தல்;

ஆரோக்கியமான உணவு முறை, நாள்தோறும் உடற்பயிற்சி இவற்றின் மூலம் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடற்பருமன், இதய நோய் போன்றவற்றை ஓரங்கட்டுதல்;

வாசித்தல், கற்றல், புதிர்க் கணக்குப் போடுதல் போன்ற பயிற்சிகளைக் கொடுத்து மூளைத் திறனை வளர்த்தல்;

மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகாமல் இருத்தல்; இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்துகொள்ளுதல் ஆகிய முன்னெச்சரிக்கைகளைக் கையாண்டால், மூளைக்குச் சிறந்த பாதுகாப்பு கிடைக்கும். அப்போது அது உற்சாகமாக உழைக்கும். அதன் பலனால், நம் ஆரோக்கியம் மேம்படும்.

(நிறைவடைந்தது)
கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x