

வாழ்க்கை என்னும் அனுபவப் பயணத்தில் தவிர்க்க முடியாதவை சவால்கள். அதிபயங்கரமான சவாலைச் சமாளித்து அதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து விரைவாக மீண்டெழுவதற்குப் பெயர்தான் ‘தாக்குப்பிடித்தல்’.
பரீட்சைகள், கல்வி கற்கும் முறையில் அடிக்கடி மாறுதல்கள், சக மாணவர்கள், வயதில் மூத்தவர்களுடனான உறவு, பெற்றோரின் அதிகப்படியான எதிர்பார்ப்பு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, பணிவாழ்க்கைத் தேர்வுகள், குடும்பத்தின் பொருளாதார நெருக்கடி… இப்படி எது வேண்டுமானாலும் மாணவப் பருவத்தினருக்குச் சவாலாக அமையக்கூடும். அவற்றிலிருந்து மீளாவிட்டால் அந்தச் சிக்கலுக்குப் பலிகடாவாக ஆகிவிடும் அபாயம் உள்ளது.
திராணி இல்லையே!
இந்நிலையில் நம் மாணவர்களிடத்தில் தாக்குப்பிடிக்கும் ஆற்றல் மிகக் குறைவாக இருப்பதை ஒரு மனநல ஆலோசகராகக் கவனித்துவருகிறேன். பிரகாசமான வாய்ப்புகள் இருந்தாலும், மிகக் குறைவாகத் தாக்குப்பிடிக்கும் ஆற்றலோடுதான் நம் மாணவர்கள் இருக்கிறார்கள். பொருளாதாரப் பின்னணி, பாலினம் என்ற எந்த பேதமும் இந்தச் சிக்கலுக்கு இல்லை.
சொல்லப்போனால், தன்னம்பிக்கை, சுயமரியாதை, வெற்றி உள்ளிட்டவை குறித்த வழிகாட்டலும் தகவல்களும் இன்று ஏராளமாகக் கிடைக்கின்றன. ஆனாலும், நமக்குத் தாக்குப்பிடிக்கும் திராணி இருக்கிறதா?
வாழ்க்கை எனும் உண்மையான பரீட்சைக்குத் தயாராவதற்கான வழி தாக்குப்பிடிக்கும் ஆற்றலை மேம்படுத்துதல். வாருங்கள், வாழ்க்கைத் தேர்வுக்கு ஆயத்தம் ஆவோம்!
1. ஆரோக்கியமான வாழ்க்கை முறை
உயிரியல் கடிகாரத்தையும் உடலையும் ஆரோக்கியமாகப் பேணிக்காத்தால் மன ஆரோக்கியத்தை வளர்த்துக்கொள்வது சுலபம். ஆகவே, நிம்மதியான-போதுமான அளவு இரவு உறக்கம், சமச்சீரான ஊட்டச்சத்து மிக்க உணவு, வாரத்துக்குக் குறைந்தபட்சம் 300 நிமிடங்கள் உடற்பயிற்சி, முறையான வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றை வழக்கப்படுத்திக்கொண்டால் மாணவர்கள் எளிதில் தாக்குப்பிடிக்கும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.
2. தன்னை அறியும் திறன்
உங்களின் தனித் திறன்களையும் நற்பண்புகளையும் நீங்களே உற்றுக் கவனித்து வாரந்தோறும் குறிப்பெடுங்கள். மூன்று வகைகளின் கீழ் அவற்றைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள்.
# தன்னம்பிக்கை – இயல்பாகவே உங்களிடம் வெளிப்படும் ஒரு திறன்/பண்பு.
# தகுதி – பயிற்சி மேற்கொண்டு நீங்கள் வளர்த்துக்கொண்ட திறன்/பண்பு.
# செய்யக்கூடிய திறன் – உங்களால் முடியும் என்றாலும் அதற்கெனக் கூடுதல் கவனம் செலுத்தி வளர்க்க வேண்டிய திறன்/பண்பு.
இந்தப் பிரிவுகளின் கீழ் உங்களுடைய திறன்களையும் பண்புகளையும் நீங்களே கண்டுபிடித்தால், அவற்றை மேம்படுத்தும் செயல்பாட்டில் நீங்களே இறங்கிவிடுவீர்கள். இதன்மூலம் மற்றவர்களோடு ஒப்பிடப்பட்டுப் பந்தயக் குதிரையாக மாறும் அவஸ்தையைத் தவிர்க்கலாம்.
3. சமூகத் திறன்கள்
பெற்றோர், உறவினர், நண்பர்களின் ஊக்கத்தை ஏற்றுக்கொண்டு அவர்களோடு நல்ல உறவை வளர்த்துக்கொள்ளுங்கள். தாக்குப்பிடிக்கும் திறனக்கு உறவுப் பாலம்தான் மிகப் பெரிய பலம். பெருவாரியான நேரத்தை யாருடன் செலவழிக்கிறோமோ அவர்களாகவே நாம் மாறுகிறோம். ஆகவே, உங்களுக்கு ஆதரவு அளிக்கும், சவால்விடும், உங்களைத் திருத்தும், வழிநடத்தும் மனிதர்களோடு பழகுங்கள். இதில் வயது வரம்பு ஒரு தடையல்ல. ஆரோக்கியமான எல்லைகளை வகுத்துக்கொண்டு நல்ல உறவு வட்டத்தைப் பேணுங்கள்.
4. நெருக்கடியை ஏற்றுக்கொள்ளவா அல்லது மிகைப்படுத்தவா?
நெருக்கடியான சூழ்நிலையைக் கையாளும்போது, உணர்ச்சிவசப்பட்டுச் சூழலை மிகைப்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாகப் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு புத்திக்கூர்மையோடு ஏற்றுக்கொள்ளும்போது, அதை லாகவமாகக் கையாள முடியும்.
5. வெற்றியும் தோல்வியும்
வெற்றியை நோக்கிய பயணத்தில் எதிர்ப்படும் சின்ன நிறுத்தம்தான் தோல்வி. அதை ஏற்றுக்கொண்டால் வெற்றிக்கான சூத்திரத்தைச் சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம். இதுவே தாக்குப்பிடித்தலின் முதல் பாடம்.
6. அர்த்தமும் நோக்கமும்
படிப்பது வேலைக்காகத்தான் என்று திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டாலும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான பாடத்தைக் கற்றுத்தருவதுதான் கல்வியின் நோக்கம். ஆகவே, நீங்கள் கற்றதில் இருந்து நம் பூமிக்கு உங்களால் இயன்றதைக் கொடுங்கள்.
7. 'ஒன்று’-ன் ஆற்றல்
இதுவரை செய்துவந்த ஒரு செயலைப் புதுவிதமாகச் செய்ய முயலுங்கள். அந்த முயற்சியில் நீங்கள் கண்டுபிடித்த அந்தப் புதிய வழியை முதலில் 21 நாட்கள் பயிற்சி செய்துபாருங்கள். அதைத் தொடர்ந்து 90 நாட்கள் செய்யும்பட்சத்தில் அதுவே உங்களின் அங்கமாக மாறிவிடும். இப்படி நமக்கு நாமே சவால் விடுத்து மாற்றத்துக்குத் தயாராகும்போது எந்தச் சவாலும் நம்மை வீழ்த்த முடியாது.
வாருங்கள் இனி வாராவாரம் உங்கள் மனதோடும் கொஞ்சம் பேசுவோம்!
கட்டுரையாளர் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர்.‘மனதோடும் கொஞ்சம் பேசுவோம்’ கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி C.ராஜரத்தனம். மாணவர்களின் மனநலம் தொடர்பான சந்தேகங்களை இப்பகுதிக்கு அனுப்பலாம். முகவரி: வெற்றிக்கொடி, இந்து-தமிழ் நாளிதழ், |
தொகுப்பு: ம.சுசித்ரா