Last Updated : 15 Sep, 2018 11:18 AM

 

Published : 15 Sep 2018 11:18 AM
Last Updated : 15 Sep 2018 11:18 AM

‘ஜிம்’ நாகரிகம்

நண்பர் ஒருவர் பிரம்மாண்ட அடுக்ககத்தில் வசிக்கிறார். அவர் அதிகத் தொகையைக் கொடுத்து அந்த வீட்டைத் தேர்ந்தெடுக்க ஒரு முக்கியக் காரணம் அந்த வளாகத்தின் உள்ளே அமைக்கப்பட்டிருந்த ஜிம்மும் நீச்சல் குளமும்தாம். உடலைப் பேணுவதில் நண்பருக்கு மிகுந்த அக்கறை.

ஆனால், அவரை எரிச்சல்படுத்தும்படியான பல விஷயங்கள் அந்த ஜிம்மில் நடைபெறுகின்றன. அவற்றைக் கேள்விப்பட்டபோது, அடுக்ககங்களில் உள்ளவர்கள் ஜிம்மைப் பயன்படுத்தும்போது எதுபோன்ற அடிப்படைக் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை எழுதத் தோன்றியது.

உடைகளில் கவனம் தேவை

சிலர் ஜிம்மில் அணிவதற்கென்றே ஒரு உடையை வாங்கி இருப்பார்கள். இறுகப் பிடிக்காத பேண்ட் மற்றும் டீ-ஷர்ட் பயன்படுத்துவது நல்லதுதான். ஆனால், அவர்கள் இப்படி ‘ஒரே ஒரு செட்’ உடையை வாங்கி இருப்பதுதான் பிரச்சினை. அதைத் துவைக்காமலேயே தினமும் ஜிம்முக்கு அணிந்து வருவார்கள். ‘எப்படியும் வியர்க்கத்தானே போகிறது’ என்ற ஒரு வியாக்கியானத்தை வேறு சொல்வார்கள். அதற்காக உங்கள் உடைகளின் நாற்றத்தைப் பிறர் பொறுத்துக்கொள்ள வேண்டுமா, என்ன? துவைத்து அணியுங்கள். ஜிம்முக்காக இரண்டு செட் உடைகளை வைத்திருங்கள்.

ஒலியில் கவனம்

பொதுவாக, நண்பர்கள் ஜிம்மில் நுழைந்து பயிற்சி செய்யும்போது பேசிக் கொள்வதில்லை. அது நல்லதுதான். ஆனால் சிலர் ரேடியோ, மினி சி.டி.பிளேயர் போன்றவற்றைக் கொண்டுவந்து அதை அதிக வால்யூமில் ஒலிக்கவிட்டு உடற்பயிற்சி செய்வார்கள். இது அவர்களுக்குச் சுக அனுபவமாக இருக்கலாம்.

ஆனால், அமைதியான சூழலில் உடற்பயிற்சி செய்ய வருபவர்களுக்கு இது தலைவலி. ஒரு நூலகம் அளவுக்கு ‘மயான அமைதி’ ஜிம்மில் இருக்க வேண்டாம்தான். ஆனால், பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஜிம்முக்கும் பொருந்தும்.

காலணிகளில் கவனம்

அழுக்கடைந்த காலணிகளோடு ஜிம்முக்குள் நுழைந்து அங்கே உங்கள் தடங்களைப் பதிப்பது தவறு. அதுவும் டிரெட் மில், ஸ்டாடிக் சைக்ளிங் போன்றவற்றில் உங்கள் காலணிகள் பல நிமிடங்கள் கருவிகளில் பதிந்திருக்கும். அவற்றைச் சேறாக்குவதும், அழுக்காக்குவதும் அடுத்து அவற்றைப் பயன்படுத்துபவர்களுக்குச் செய்யும் அநீதி. உரிய மிதியடிகளை ஜிம்மின் வாசற்புறம் போட்டு வைக்க ஏற்பாடு செய்யுங்கள். மறக்காமல் அவற்றில் உங்கள் ஷூக்களை நன்கு தட்டிவிட்டுக் கொண்டு பிறகு உள்ளே நுழையுங்கள்.

கால அவகாசத்தின் கட்டுப்பாடு

சில கருவிகளில் அதைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச நேரத்தைக் குறிப்பிட்டிருப்பார்கள். ‘என்னால் முடியும் தம்பி’ என்று அதைவிட அதிக நேரம் அதில் பயிற்சி செய்வது உங்கள் இஷ்டம். ஆனால் அடுத்தவர்கள் காத்திருக்கும்போது அதிக நேரம் பயிற்சியில் ஈடுபடுவது நியாயம் அல்ல. இப்படி அடிக்கடி நேர்ந்தால் ஜிம்முக்கு நீங்கள் வரும் நேரத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்துக் கொள்ள முடியுமா என்று பாருங்கள்.

அதிக சென்ட் மணம் தவிர்ப்பது நல்லது

அதிக அளவில் டியோடரண்டையோ சென்ட்டையோ தங்கள் உடைகளின்மீது தெளித்துக் கொண்டு ஜிம்முக்கு வருவார்கள். பயிற்சி செய்யும்போது இந்த மணம் அறை எங்கும் பரவும் (வியர்வை மணமும் கலந்து!). அதைவிட ஒருபடி அதிகமாக அவர்கள் ஜிம்மை விட்டு வெளியேறிய பிறகும் அந்த நறுமணக் கலவை ஜிம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும்.

சிலருக்கு இந்த மணம் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வேறு சிலருக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தலாம். எனவே ‘அளவுக்கு மிஞ்சினால்… என்ற பழமொழியை பர்ஃப்யூம் பயன்படுத்தும்போது நினைவில் கொள்ளுங்கள்.

படிப்படியாய் முன்னேறுங்கள்

எடை வேகமாகக் குறைய வேண்டும் என்ற ஆவலாலோ உற்சாகத்தாலோ சிலர் ஜிம்மில் உள்ள கருவிகளின் மூலம் பயிற்சி செய்யும்போது முதலிலேயே க்ளைமாக்ஸுக்குப் போய் விடுவார்கள். அதாவது கொஞ்சம் கொஞ்சமாக உடலை அந்தப் பயிற்சிகளில் ‘வார்ம்-அக்’ செய்து கொண்டு பிறகுதான் வேகத்தைக் கூட்ட வேண்டும்.

இல்லையென்றால் எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படலாம். காரை ஓட்டத் தொடங்கும்போதே பிரேக் எங்கே இருக்கிறது என்பதைப் பயிற்சியாளர் சுட்டிக்காட்டி விடுவார். அதுபோல சிலவகை ஜிம் கருவிகளில் பயிற்சி செய்யும்போது அதை நிறுத்தும் வழி என்ன என்பதில் முதலிலேயே தெளிவு தேவை.

இவையெல்லாம் வேண்டாம்.

முடிந்தவரை உலோகம் மற்றும் பிளாஸ்டிக்கினால் ஆன எந்தப் பொருளையும் வைத்துக் கொள்ளாமல் ஜிம்மில் பயிற்சி செய்யுங்கள். அதாவது சட்டைப் பாக்கெட்டில் செல்போன் வைத்துக் கொண்டும், கைக்கடிகாரத்தைக் கட்டிக் கொண்டும் பயிற்சிகள் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

உடல்நலம் அவசியம்

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கத்தான் ஜிம்முக்குச் செல்கிறோம். அதே நேரம் ஏதாவது தொற்று நோயினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது ‘பரவாயில்லை. கொஞ்ச நேரத்திற்குப் பயிற்சி செய்து விடலாம். தினசரி ஒழுங்குமுறை கெட்டுவிடக் கூடாது’ என்றபடி ஜிம்முக்குச் செல்ல வேண்டாம். இது உங்களுக்குப் பரவாயில்லை. ஆனால், ஜிம்முக்கு வரும் பிறருக்குக் கேடாகலாம்.

அதது அந்தந்த இடத்தில்

நகரக்கூடிய பொருட்களைக் கொண்டு நீங்கள் பயிற்சி செய்ய வாய்ப்பு உண்டு. யோகாசனம் செய்வதற்கான பாய், டம்பிள் (Dumbell) போன்றவை. அவற்றை எடுத்த இடத்திலேயே சரியாக மீண்டும் வைக்க வேண்டியது அவசியம். முக்கியமாகப் பிறருக்கு ஆபத்து உண்டாகக் கூடும் வகையில் (தடுக்கி விழுதல், மேலிருந்து விழுதல்) அவற்றை வைக்கக் கூடாது.

காலணி தேவை

சர்வதேசப் போட்டிகளில்கூட ஒரு சிலர் காலணிகளை அணியாமல் பங்கு பெற்றும், வென்றது உண்டு. ஆனால், உரிய காலணிகள் இல்லாமல் ஜிம்மைப் பயன்படுத்துவதுப் பாதுகாப்புக் கோணத்தில் சரியல்ல.

டவல் இருக்கட்டும்

ஜிம்முக்குச் செல்லும்போது ஒரு டர்க்கி டவலை எடுத்துச் செல்லுங்கள். உங்கள் முகத்தில் வழியும் வியர்வையைத் துடைத்துக் கொள்வதோடு மட்டுமல்ல நீங்கள் பயன்படுத்திய - நீங்கள் கைகளால் பற்றிய கருவிகளின் பகுதிகளை - இறுதியில் துடைத்துவிட்டுக் கிளம்புவதுதான் நாகரிகம்.

கவனிக்க வேண்டாம்

பயிற்சி செய்யும் பிறரை உற்று நோக்காதீர்கள். பயிற்சியைக் கற்றுக் கொள்ளும் நோக்கத்தில் இருந்தாலும் அவரது சிக்ஸ் பேக் உடலை ரசிக்கும் விதத்தில் இருந்தாலும் ஒருவர் பயிற்சி செய்வதைத் தொடர்ந்து உற்றுப் பார்த்தால் அவருக்குச் சங்கடமாகத்தான் இருக்கும். தன் பயிற்சியில் அவரால் முழுமையாக ஈடுபட முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x