Last Updated : 10 Sep, 2014 12:30 PM

 

Published : 10 Sep 2014 12:30 PM
Last Updated : 10 Sep 2014 12:30 PM

கடுதாசி எழுதிய கதை

உலகெங்கும் உள்ள குழந்தைகளைத் தன் எழுத்துகளால் குதூகலப்படுத்தியவர் ஆங்கில எழுத்தாளர் ரோல் தால் (Roald Dahl). அவர் தனது குழந்தைப் பருவம் தொடர்பாக எழுதிய சுயசரிதை "பாய்: டேல்ஸ் ஆஃப் சைல்ட்ஹுட்" (Boy: Tales of Childhood). உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறிய அவர், தன் சுயசரிதையையும் அதே சுவாரசியம் குறையாமல் எழுதியிருக்கிறார். அதிலிருந்து ஒரு பகுதி:

கடிதம் எழுதுதல்

பிரிட்டனில் சாமர்செட் பகுதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் உறைவிடப் பள்ளியில் என் அம்மா என்னைச் சேர்த்துவிட்டார். அப்போது எனக்கு வயது 9 (1925-ல்). அந்தப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை என்பது, வீட்டுக்குக் கடிதம் எழுதுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரம்.

காலை ஒன்பது மணிக்குப் பள்ளியில் இருக்கும் அனைத்து மாணவர்களும் அவரவர் இருக்கைக்குச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஒரு மணி நேரத்தைப் பெற்றோருக்குக் கடிதம் எழுதுவதில் செலவிட வேண்டும்.

தொடர்ந்த பழக்கம்

அது முடிந்த பிறகு எங்கள் தொப்பிகளை அணிந்துகொண்டு வெஸ்டன் சூப்பர் மேர் தேவால யத்துக்குச் செல்ல வேண்டும். பள்ளிப் படிப்பை நிறைவு செய்த பிறகு தேவாலயத்துக்குச் செல்லுதல் எனக்கு ஒரு பழக்கமாக மாறியிருக்க வில்லை. ஆனால், கடிதம் எழுதுதல் என் வாழ்க்கை முழுக்கத் தொடர்ந்தது.

அந்தப் பள்ளியில் நான் சேர்ந்த பிறகு வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 32 ஆண்டுகளுக்குப் பிறகு எனது அம்மா இறக்கும் வரை, ஒவ்வொரு வாரமும் எனது அம்மாவுக்கு நான் கடிதம் எழுதுவேன். சில நேரம் கடிதங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் செய்யும்.

கண்காணிப்பு

செயின்ட் பீட்டர்ஸ் பள்ளியில் கடிதம் எழுதுவதும் கண்டிப்பு நிறைந்த விஷயம். கடிதம் எழுதும்போதும் பாடம் படிப்பதைப் போலவே ஸ்பெல்லிங், நிறுத்தற் குறிகள் எல்லாமே முக்கியமாகக் கருதப்படும்.

பள்ளித் தலைமையாசிரியர் எல்லா வகுப்புகளுக்கும் ரவுண்ட்ஸ் வருவார். எங்கள் தோள்களுக்குப் பின்னே நின்று நாங்கள் என்ன எழுதுகிறோம் என்று கண்காணித்துத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.

ஆனால், அவர் கண்காணித்ததற்கான காரணம் அதுவல்ல என்று நான் நம்புகிறேன். அந்தப் பள்ளியைப் பற்றி பயமுறுத்தும் வகையில் பெற்றோருக்கு நாங்கள் எதையும் சொல்லிவிடக் கூடாது என்பதுதான் அவருடைய அக்கறைக்குக் காரணம்.

புகார் கூடாது

உறைவிடப் பள்ளியில் இருந்த காலத்தில் பள்ளியைப் பற்றி எங்கள் பெற்றோருக்கு எந்தப் புகாரையும் சொல்ல வழியில்லை. சலித்துப் போன சாப்பாடு, பிடிக்காத ஆசிரியர், காரணமில்லாமல் எங்களை அடிப்பது போன்ற எந்த விஷயத்தையும் எங்கள் கடிதங்களில் குறிப்பிட முடியாது.

அதற்கு நேரெதிராக, எங்கள் தலைக்கு மேலே எட்டிப் பார்க்கும் பயங்கரமான தலைமையாசிரியரைத் திருப்திப்படுத்தும் வகையில், பள்ளியைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் ‘ஆஹோ ஓஹோ' என்று எழுதுவோம்.

திருத்தம்

மறந்துவிடாதீர்கள். தலைமையாசிரியர் ரொம்பவும் புத்திசாலி. எங்கள் கடிதங்கள் கண்காணிக்கப்பட்டது பற்றி பெற்றோருக்குத் தெரியக் கூடாது என்பதில் ரொம்ப கவனமாக இருப்பார். கடிதத்தில் உள்ள தவறைச் சுட்டிக்காட்டுவார்.

உடனே அதைத் திருத்தி எழுத முயன்றால், "யேய் யேய், கடிதத்தில் அதைத் திருத்தாதே. ஏற்கெனவே, அது கந்தரகோலமாக இருக்கிறது. அது அப்படியே போகட்டும்" என்பார்.

பிறகு தான் சொன்ன திருத்தத்தைத் தனியாக 50 முறை இம்போசிஷன் எழுதிவிட்டு வா என்பார்.

பள்ளி குறித்து எந்தச் சந்தேகமும் கொள்ளாத பெற்றோர்களோ, நாம் எழுதிய கடிதத்தை யாரும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை என்று நம்புவார்கள்.

- இப்படித் தன் சுயசரிதையையே கேலியும், நகைச்சுவையும், சுவாரசியமும், சுவையும் நிரம்ப எழுதியவர் கதைகளை எப்படி எழுதியிருப்பார்? அவர் எழுதிய மட்டில்டா, சார்லியும் சாக்லேட் ஃபேக்டரியும், டேன்னி: தி வேர்ல்ட் சாம்பியன், பி.எஃப்.ஜி. உள்ளிட்ட புத்தகங்களைப் படித்தால் தெரியும். தேடிப் படித்துப் பாருங்கள்.

(ரோல் தால் பிறந்த நாள்: செப் 13)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x