Published : 22 Jun 2019 05:46 PM
Last Updated : 22 Jun 2019 05:46 PM

வாசிப்பை நேசிப்போம்: உண்டியல் காசில் புத்தகம்

என் அப்பா தினமும் நாளிதழ்கள் வாசிப்பார். அதனாலேயே எனக்கும் சிறு வயதிலிருந்தே வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. என் அம்மா தினமும் பைபிளில் இருந்து ஒரு வசனத்தை ஒப்பிக்க வேண்டுமென எனக்கும் தம்பிக்கும் கட்டளையிட்டதால் வேதாகமம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டது. 1969-ல் ஆறாவது படித்தேன்.

அப்போது எங்கள் பள்ளியில் காலை இறை வணக்கத்தின் முடிவில் அன்றைய முக்கியச் செய்திகளை வகுப்பு, பிரிவுவாரியாகப் பொது மேடையில் வாசிக்க வேண்டும். அத்தகைய வாய்ப்பு எனக்கு அதிகமாகக் கிடைத்தது, என் வாசிப்புப் பழக்கத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது.

எங்கள் காலத்தில் பள்ளிக்கூடம் தவிர பிற இடங்களில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அதிக வாய்ப்பில்லை. கடைகளில் பொருட்களை வைத்துத் தரும் துண்டுத்தாள்களில் உள்ள சில ஆங்கில வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க ஆவலாக இருக்கும். எனக்குக் கிடைத்த காசுகளை உண்டியலில் சேர்த்து, மீதியை அப்பாவிடம் பெற்று ரூ.4.50-க்கு லிப்கோ டிக் ஷனரி வாங்கியபோது, ஒரு பெரிய அறிவுப் பெட்டகம் கையில் கிடைத்ததுபோல் மகிழ்ச்சியாக இருந்தது. 

‘கல்கண்டு’ இதழ் சிறியதாக இருந்தாலும் நிறைய புதிய தகவல்களை அள்ளித்தரும். இரவில் பயமூட்டக்கூடிய அளவு மர்மக் கதைகளைப் படிப்பது சுவாரசியமாக இருக்கும். ‘கல்கி’ இதழ் அதிகமாக ஆன்மிக அறிவைத் தந்தது. எப்போதாவது தினமணிக் கதிர், ராணிமுத்து புத்தகங்களைத் தோழிகளிடம் பெற்று வாசிப்பேன். சாண்டில்யனின் நாவல்களைப் பதின் பருவத்தில் படித்தபோது பெரிய அளவில் அர்த்தம் புரியவில்லை.

அதுவே பின்னால் படித்தபோது தமிழ் இலக்கியங்கள் தந்த தெளிவின் மூலம் வர்ணனைகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. லக் ஷ்மி, சிவசங்கரி, ஜெயகாந்தன் ஆகியோரின் நாவல்கள் அந்தந்தப் பருவத்தின் நிலைக்கேற்ப தெளிவூட்டின. சில நேரம் இந்த நாவல்களின் ஆளுமைகள் நமது அன்றாட வாழ்வில் நம்மோடு வாழ்வதை அறிய முடியும். ‘பொன்னியின் செல்வன்’, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’, ‘தாய்’ போன்ற  நூல்களைத் திரும்பத் திரும்ப வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.

இன்றும் நான் குடியிருக்கும் அடுக்ககத்தில் உள்ள நூலகத்தில் அதிகமான தமிழ் நாவல்களையும் ஆங்கில நாவல்களையும் படித்துவருகிறேன். யதார்த்த வாழ்வில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்ள வாசிப்பே பேருதவி புரிகிறது. தனிப்பட்ட வகையில் மனத்தில் உவப்பையும் நம்பிக்கையையும் வாசிப்பினால் பெற முடிகிறது. இறுதிவரை வாசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.

- த. அனிபுஷ்பராணி, பள்ளிக்கரணை.

 

உடுமலை தாலூகா ராவணாபுரம் எனும் குக்கிராமத்தில் பிறந்த நான் 1975 வாக்கில் கல்லுரிக்குச் சென்றேன். மாத இதழ்கள் அதிகம் இல்லாத காலம் அது. குமுதம், ஆனந்த விகடன், கல்கி போன்ற வார இதழ்களை வாங்கிப் படிப்பேன். அவற்றில் கல்கி, நா.பார்த்தசாரதி, சிவசங்கரி, மு.வ, சாண்டில்யன் போன்ற ஜாம்பவான்களின் தொடர்கதைகளை எடுத்து பைண்டிங் செய்து இன்றளவும் பத்திரமாக வைத்துள்ளேன்.

மேலும், பல நாவல்களை இடையே விலைக்கு வாங்கி என் விவசாயப் பணிக்கு நடுவில் படித்திருக்கிறேன். பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவலைப் படித்துவிட்டு, மற்ற நாவல்களையும் படிக்கத் தொடங்கியிருக்கிறேன். வாசிக்கும் பழக்கத்தை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்த வேண்டும். என்னதான் செல்போன், டேப் போன்றவற்றில் படித்தாலும் கையில் புத்தகத்தை வைத்து வாசிப்பதில் இருக்கும் சுகமே தனிதான்.

- ஆர். பழனிசாமி, ராவணாபுரம்.

 

வாசிப்பை நேசிப்போம்

புத்தகங்கள் நமது நண்பர்கள். தடுக்கி விழுந்தால் தாங்கிப்பிடிக்கவும் வருந்திக் கிடந்தால் வழிகாட்டவும் அவற்றால் முடியும். நினைத்துப் பார்கக முடியாத பேரதிசயங்களை நம் வாழ்க்கையில் ஏற்படுத்திவிடும் வல்லமை பெற்றவை அவை. அப்படி உங்கள் வாழ்க்கையை மாற்றிய அல்லது உங்களை வாசிப்பின் பக்கம் கரைசேர்த்த புத்தகங்களைப் பற்றியும் உங்கள் வாசிப்பு அனுபவம் பற்றியும் உங்களது ஒளிப்படத்துடன் எழுதி அனுப்புங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x