Last Updated : 12 Jun, 2019 10:25 AM

 

Published : 12 Jun 2019 10:25 AM
Last Updated : 12 Jun 2019 10:25 AM

திறந்திடு சீஸேம் 37: தங்க ரயில்கள் எங்கே?

‘தங்க ரயில்கள்’ என்றால் தங்கத்தினால் செய்யப்பட்ட ரயில்கள் அல்ல. தங்கம் சுமந்து சென்ற ரயில்கள். எப்போது, எங்கே சுமந்து சென்றன? இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த சம்பவங்கள் இவை.

1939-ல் அசுர பலத்தோடு இரண்டாம் உலகப்போரைத்  தொடங்கி வைத்த ஹிட்லரின் ஜெர்மனி, 1944-ல் வீழ்ந்துகொண்டிருந்தது. அப்போதும் ஹிட்லர் அசராமல் அடுத்தடுத்த தாக்குதல்களுக்குத் திட்டமிட்டுக்கொண்டுதான் இருந்தார்.

1944, மார்ச் 12 அன்று ஹிட்லரிடமிருந்து ‘ஆபரேஷன் மார்கரெத்’ குறித்த கட்டளை வந்தது. அதாவது, நாஜிப்படைகள், ஹங்கேரியைக் கைப்பற்றுவதற்கான ராணுவ நடவடிக்கை. அதேநேரம் ஜெர்மனிக்கு எதிரான சோவியத் படைகளும் ஹங்கேரியை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்தன.

யூத இனம் என்றாலே ஹிட்லருக்கு ஆகாது. ஹங்கேரிய யூதர்கள், நாஜிப்படையினரால் கடும் துன்பத்துக்கு ஆளானார்கள். ஹிட்லருக்கு ஆதரவு கொடுத்த ஹங்கேரி அரசாங்கம், தனது குடிமக்களாக இருந்த சுமார் எட்டு லட்சம் யூதர்களை, நாஜிப் படைகளிடம் ஒப்படைத்தது. அவர்கள் அனைவருமே வதை முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அதற்குமுன் யூதர்களது உடைமைகள், சொத்துகள் எல்லாமே நாஜிக்களால் பறிக்கப்பட்டன.

அதில் தங்க நகைகள், மதிப்புமிக்கக் கற்கள், வைரங்கள், முத்துகள், அழகிய ஓவியங்கள், கலைப்பொருட்கள், பீங்கான் பாத்திரங்கள், வெள்ளிப் பொருட்கள், நாணயங்கள், பணம், அரிய தபால்தலைகள் எல்லாம் அடக்கம். யூதர்களின் விரல்களிலிருந்து பிடுங்கப்பட்ட திருமண மோதிரங்கள் மட்டுமே பல பெட்டிகளில் நிறைத்து வைக்கப்பட்டன.

1944-ன் இறுதி. சோவியத் படைகள் ஹங்கேரிக்குள் நுழைந்தன. அதன் தலைநகரான புடாபெஸ்ட், சோவியத் வசமானது. அதுவரை அங்கே கொள்ளையடித்த செல்வத்தை எல்லாம் நாஜிப்படை காப்பாற்றிக்கொள்ள நினைத்தது. நாஜிக்களின் துணை ராணுவமான  SS-ன் தளபதி அர்பேட் டுல்டியிடம் அந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

டுல்டி, ஹங்கேரி யூதர்களிடமிருந்து கொள்ளையடித்த செல்வத்தை எல்லாம் மரப்பெட்டிகளிலும், பெரிய பைகளிலும் நிரப்பச் சொன்னார். 42 பெட்டிகள் கொண்ட பிரத்யேக ரயில் ஒன்று தயாராக இருந்தது. அதில் இந்தப் பைகள் எல்லாம் பத்திரமாக ஏற்றப்பட்டன. 1945-ல் ஹங்கேரி அரசும், யூத அமைப்பு ஒன்றும் வெளியிட்ட அந்தச் செல்வத்தின் உத்தேச மதிப்பு 350 மில்லியன் டாலர்கள். இப்போது அதன் மதிப்பு 4 பில்லியன் டாலர்களுக்கும் அதிகம்.

ஆயுதம் தாங்கிய வீரர்களுடன் ஜெர்மனி நோக்கிய அந்தத் தங்க ரயிலின் பயணம் ஆரம்பமானது. ஹங்கேரியின் பல ஊர்களைத் தாண்டி, ஆஸ்திரியாவுக்குள் நுழைந்தது. ஆங்காங்கே பாதுகாப்புக் காரணங்களுக்காக ரயில் நிறுத்தப்பட்டது. சில இடங்களில் டிரக்குகள் ரயிலை நோக்கி வந்தன. சில பெட்டிகள் டிரக்குகளில் ஏற்றப்பட்டன.

ஆஸ்திரியாவின் பல்வேறு ஊர்களைத் தாண்டிச் சென்றது தங்க ரயில். 1945, மே. வெர்ஃபென் என்ற நகரத்தில் ஜெர்மனியின் எதிரியான பிரான்ஸின் படைகளால் தங்க ரயில் சூழப்பட்டது. பின்பு அமெரிக்கப் படைகள் ரயிலைக் கைப்பற்றின.

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு பல்வேறு தேசங்களும் மக்களும், தாங்கள் எதிரிகளிடம் இழந்த செல்வத்தை எல்லாம் மீட்பதற்காகப் போராடினர். அதற்கென சில சர்வதேச அமைப்புகளும் விதிகளும் உருவாக்கப்பட்டன.

ஹங்கேரியிலிருந்து வதைமுகாம்களுக்கு அனுப்பப்பட்ட பெரும்பாலான யூதர்கள், கொல்லப்பட்டிருந்தனர். எனவே அவர்களது செல்வம் எல்லாம் கேட்பாரற்றுப் போயின. ஓவியங்களோ கலைப்பொருட்களோ எந்தத் தேசத்தில் கொள்ளையடிக்கப்பட்டனவோ, அந்தத் தேசத்துக்கே திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என்ற சர்வதேச விதி ஒன்றும் இருந்தது. ஆனால், ஹங்கேரி யூதர்களின் செல்வம் அவர்களிடம் திருப்பி அளிக்கப்படவில்லை.

அமெரிக்க ராணுவத் தளபதிகளும் வீரர்களுமே அவற்றைப் பங்கு போட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுவதுண்டு. கொஞ்சம் நகைகள், பொருட்கள் அமெரிக்காவில் ஏலம் விடப்பட்டன. ஹங்கேரி அரசு தம் நாட்டின் செல்வத்தை எல்லாம் திருப்பியளிக்குமாறு அமெரிக்க அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தது. அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.

நாஜிக்கள், ரயிலிலிருந்து டிரக்குகளில் கொஞ்சம் செல்வத்தை மாற்றி எடுத்துச் சென்றதாகப் பார்த்தோம் அல்லவா. அந்த டிரக்குகள் என்னவாயின, அதிலிருந்த செல்வம் எல்லாம் யார் கைக்குப் போயின என்ற தகவலும் கிடையாது. இந்த நூற்றாண்டில் சில யூத அமைப்புகள் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.

அமெரிக்கா, குறிப்பிட்ட அளவு பணம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வெளிவந்தது. 2012-ல் அந்தத் தொகை ஹங்கேரி, ஸ்வீடன், ஆஸ்திரியாவிலிருக்கும் சில யூத அமைப்புகளுக்கு வழங்கப்பட்டதாகச் செய்திகள் உண்டு. இப்படியாக ஹங்கேரியிலிருந்து கிளம்பிய தங்க ரயிலின் கதை முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இன்னொரு தங்க ரயிலின் பயணம் இன்னும் முடிவின்றி நீண்டுகொண்டே செல்கிறது.

இரண்டாம் உலகப்போரின் இறுதி நாட்கள். ஹிட்லரின் கட்டளைப்படி நாஜிக்கள் அதுவரை கொள்ளையடித்த செல்வத்தை எல்லாம் பாதுகாக்க நினைத்தனர். தங்கமும் வைரமும் வெள்ளியும் முத்துகளும், இன்னபிற மதிப்புமிக்கக் கற்களும் பெட்டி பெட்டியாக ரயில் ஒன்றில் ஏற்றப்பட்டன. ஔல் மலைப்பகுதியின் அடிவாரத்தில் ஹிட்லர் அமைத்துக்கொண்டிருந்த ரகசிய பாதாள நகரத்தின் பெயர் Project Riese. 1943-ல் ஆரம்பிக்கப்பட்ட அதற்கான வேலைகள் 1945-ல்

அரைகுறையாகத்தான் நிறைவேறியிருந்தது. அங்கே ஓரிடத்தின் ரகசியச் சுரங்கப் பகுதியில் தங்க ரயிலை மறைத்து வைக்கலாம் என்பது நாஜிக்களின் திட்டம்.

அன்றைய ஜெர்மனியின் பிரெஸ்லா என்ற நகரத்திலிருந்து (இன்றைக்கு அது போலந்தின் Wroclaw நகரம்) தங்க ரயில் புறப்பட்டது. சில மைல் தூரம் பயணம் செய்து ஔல் மலைப்பகுதியை அடைந்தது. அங்கே Walbrzych நகரத்தின் வெளியே அமைந்த ரகசியக் குகை ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டது என்பது பலரும் சொல்லும் செய்தி அல்லது கதை.

Walbrzych என்பது அன்றைக்குத் ஜெர்மனியாக இருந்தது. இன்றைக்கு போலந்தின் ஒரு நகரம். 70 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நாஜி தங்க ரயிலைப் பலரும் தேடிக்கொண்டேதான் இருக்கிறார்கள். போலந்து அரசும் தேடிக் களைத்துவிட்டது. போலந்தின் கோபெர் என்பவரும், ஜெர்மனியின் ரிட்செர் என்பவரும் இரண்டாம் உலகப் போர் காலத்து ஆட்கள். இரண்டு பெரியவர்களும் 2015-ல் ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

‘எங்களுக்கு நாஜி தங்க ரயில் இருக்குமிடம் தெரியும். எங்கள் காலம் முடிவதற்கு முன்பாகவே அதைக் கண்டுபிடித்துக் கொடுக்க விரும்புகிறோம்’ என்றார்கள். கண்டுபிடித்துக் கொடுத்தால், கிடைக்கும் செல்வத்தில் 10% தங்களுக்குக் கொடுக்க வேண்டுமென்றும் அரசுடன் ஒப்பந்தம் பேசிக் கொண்டார்கள்.

கோபெர், ரிட்செர் பேச்சை நம்பி போலந்து அரசும் மீண்டும் களத்தில் இறங்கியது. Wroclaw – Walbryzch நகரங்களுக்கு இடைப்பட்ட பழைய ரயில் பாதையில் 65-வது கிலோமீட்டரில்  நாஜி தங்க ரயில் புதைக்கப்பட்டிருக்கிறது என்று அவர்கள் துப்புக் கொடுத்தார்கள். அங்கே தீவிரமான தேடுதல் வேட்டை 2018 வரை நடந்தது.

சந்தேகத்துக்குரிய குகைகள், பழைய ரயில் தண்டவாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், நாஜி தங்க ரயில் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ரிட்செர் தேடுதலிலிருந்து பின்வாங்கிக்கொண்டார். கோபெர் மட்டும் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்.

நாஜிக்கள் கொள்ளையடித்த ஏராளமான செல்வம், அவர்களால் பதுக்கப்பட்ட பல பொக்கிஷங்கள் உலகின் பல பகுதிகளில் இன்றும் கிடைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், நாஜி தங்க ரயில் எப்போது கிடைக்கும் அல்லது கிடைக்குமா என்பதற்கான பதில் இல்லை. சில வரலாற்று ஆய்வாளர்கள் உறுதியாகச் சொல்கிறார்கள், ‘நாஜி தங்க ரயில் என்ற ஒன்றே இல்லை. அது கற்பனை!’

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: mugil.siva@gmail.comமர்மச் சுரங்கம்ஹங்கேரி ரயில்நாஜி தங்க ரயில்நாஜி ரயில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x