

பதினேழாம் மக்களவைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மக்களவையின் முதல் கூட்டம் ஜூன் 17 அன்று தொடங்கியது. தற்காலிக அவைத் தலைவராக ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் தேர்தலில் வெற்றிபெற்ற எம்.பி.க்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார். அதையடுத்து மக்களவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இதையொட்டி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளில் ஒன்றான மக்களவையைப் பற்றியும் அதன் உறுப்பினர்களின் பணிகளைப் பற்றியும் தெரிந்துகொள்வோம்.
நம் நாடு மக்களவைத் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவை உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் நடத்தப்படும் தேர்தல்களில் 18 வயதை நிறைவுசெய்த இந்திய வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மக்களவைக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 552 பேர்தான் அதன் உறுப்பினர்களாக இருக்க முடியும். தற்போது 543 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. 530 பேர் மாநிலங்களிலிருந்தும் 20 பேர் மத்திய யூனியன் பிரதேசங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மொத்தமுள்ள தொகுதிகளில் 84 தொகுதிகள் பட்டியல் சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கும் 47 தொகுதிகள் பட்டியல் பழங்குடிகளைச் சேர்ந்தவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தனித் தொகுதிகள் என்றழைக்கப்படும் இவற்றில் போட்டியிடுபவர்கள் அனைவரும் குறிப்பிட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைத் தவிர ஆங்கிலோ இந்திய சமூகத்தைச் சேர்ந்த இருவர் மக்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.
உறுப்பினர்களின் தகுதிகள்
மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஒருவர் இந்தியக் குடியுரிமை கொண்டவராகவும் 25 வயது நிறைவானவராகவும் முழுமையான மனநலன் கொண்டவராகவும் இருப்பதே அடிப்படைத் தகுதிகள்.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியின் சார்பாகவோ சுயேச்சையாகவோ போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். நீதிமன்றத்தால் எந்த வழக்கிலும் குற்றவாளி என்று அவருக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கக் கூடாது. அரசுப் பதவியில் இருக்கக் கூடாது.
மக்களவையின் கால அளவு
மக்களவையின் ஆயுட்காலம் பொதுவாக ஐந்து ஆண்டுகள். ஆளும் கட்சி மக்களவையில் பெரும்பான்மையை இழந்தால் மக்களவையில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி, பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்புத் தரப்படும். தவறினால் ஆட்சி கவிழும்.
ஆட்சி கவிழ்ந்து ஆறு மாதங்களுக்குள் மீண்டும் தேர்தல் நடத்தியாக வேண்டும். நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருந்தால் மக்களவையின் ஆயுட் காலத்தை ஓர் ஆண்டுக் காலம் நீட்டிக்கலாம். நெருக்கடி நிலை விலக்கிக்கொள்ளப்பட்டபின் ஆறு மாதங்களுக்குள் மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது மக்களவை கூடியாக வேண்டும். இது தவிர எப்போது வேண்டுமானாலும் மக்களவையைக் கூட்டச் சொல்லி குடியரசுத் தலைவர் உத்தரவிடலாம்.
பொதுவாக, இந்திய மக்களவை பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்காலக் கூட்டத்தொடர், குளிர்காலக் கூட்டத்தொடர் என ஆண்டுக்கு மூன்றுமுறை கூடுகிறது. மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 10-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் இல்லாமல் மக்களவைக் கூட்டத்தை நடத்த முடியாது. அவ்வளவு உறுப்பினர்கள் இல்லாத நிலையில், அவை ஒத்திவைக்கப்பட வேண்டும்.
அவைத் தலைவர்
முதல் முறை மக்களவை கூடும்போது தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களிலிருந்து யாராவது இருவர் அவைத் தலைவராகவும் அவைத் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
வழக்கமாக ஆளும் கட்சி / கூட்டணியைச் சேர்ந்தவர்களே இந்தப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவைத் தலைவர் என்பவர் மக்களவையை முறையாகவும் ஒழுக்கத்துடனும் நடத்தும் பொறுப்பில் இருப்பவர்.
அவையின் ஒழுக்க விதிகளை மீறும் உறுப்பினர்களை வெளியேற்ற உத்தரவிடும் அதிகாரம் அவருக்கு உண்டு. அதேபோல் மக்களவையில் மசோதாக்கள், தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பை மேற்பார்வையிடுவதும் அவரது பொறுப்பு.
தலைவர் இல்லாத நேரத்தில் துணைத் தலைவர் தலைவராகச் செயல்பட வேண்டும். இருவரும் இல்லை என்றால் மூத்த, அனுபவமிக்க உறுப்பினர் ஒருவர் தற்காலிக அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.
மக்களவை உறுப்பினர்களுக்கான அதிகாரம், பதவி விலக நேரும் சூழல்கள், மக்களவையில் மசோதாக்கள், தீர்மானங்கள் நிறைவேற்றும் நடைமுறை ஆகியவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்.