Published : 24 Jun 2019 10:37 AM
Last Updated : 24 Jun 2019 10:37 AM

கியா மோட்டார்ஸின் முதல் எஸ்யுவி ‘செல்டோஸ்’

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய அளவில் எதிர்பார்ப்பை எகிறவிட்டிருந்த கியா மோட்டார்ஸ், தனது முதல் எஸ்யுவியை அறிமுகப்படுத்தி உள்ளது. 2018 டெல்லி ஆட்டோமொபைல் கண்காட்சியில் SP2i என்ற கான்செப்ட்டாக அறிமுகமானது இது.

அதன்பிறகு பல டீசர் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி கார் பிரியர்களைக் கவர்ந்தது. தற்போது அதற்கு ‘செல்டோஸ்’ என்று பெயர் வைத்துள்ளது கியா மோட்டார்ஸ். கான்செப்ட்டாக அறிமுகப்படுத்தும்போது இருந்த அம்சங்களைக் காட்டிலும் பல்வேறு அப்டேட்டுகளுடன் செல்டோஸ் உள்ளது.

ஏற்கெனவே உலக அளவில் இரண்டாவது பெரிய கார் உற்பத்தியாளராக விளங்கும் கொரிய நிறுவனமான  ஹுண்டாய் இந்தியச் சந்தையில் கணிசமான இடத்தைப் பிடித்துள்ளது.

இதுபோக எம்ஜி மோட்டார் போன்ற புதுவரவுகளும், ஏற்கெனவே சந்தையில் உள்ள நிறுவனங்களும் சந்தையின் போக்குக்கு ஏற்ப பலவேறு தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அதிரடி கிளப்பியிருக்கின்றன.

இந்நிலையில் மற்றொரு கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் தீவிரமாக இந்தியக் கார் சந்தையில் களமிறங்குகிறது. எம்ஜி ஹெக்டார், ஹூண்டாய் வென்யூ கார்களுக்கு அடுத்து மூன்றாவது இன்டர்நெட் கனெக்டட் காராக உள்ளது செல்டோஸ்.  இந்தப் போட்டியை எல்லாம் சமாளிக்கும் வகையில் இருக்குமா கியாவின் ‘செல்டோஸ்’. பார்க்கலாம்.

மிட் சைஸ் எஸ்யுவி செக்மன்ட்டில் அடங்கும் இந்த செல்டோஸின் வெளிப்புறத் தோற்றத்தை பொருத்தவரை கிரில், டெயில் லைட், டிஆர்எல், இண்டிகேட்டர், வீல் ஆர்ச் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி அசத்துகிறது. காரின் முகப்பு டைகர் நோஸ் கிரில்லுடன் கம்பீரமாக இருக்கிறது.

கிரில் அமைப்புக்கு குரோம் ஃபினிஷிங் தரப்பட்டுள்ளது. ஃபிளாட் போனட்டில் பக்கவாட்டிலும் நீளும் வகையிலான எல்இடி ஹார்ட்பீட் ஹெட்லைட், ஸ்லிம்மான டிஆர்எல் கச்சிதமாக பொருத்தப்பட்டு பிரீமியம் தோற்றத்தைத் தருகிறது. பனி விளக்குகள் முகப்பு பக்கத்தின் கீழே பொருத்தப்பட்டிருக்கின்றன. முப்பரிமாண இன்டிகேட்டர்களும் அட்டகாசம்.

சதுரமான வீல் ஆர்ச், ஒரே நேர்க்கோட்டில் உள்ள ஷோல்டர் லைன், மேற்கூரையை ஒட்டிய நிலையில் இருக்கும் விண்டோ லைன் ஆகியவையும் காருக்கு நல்ல தோற்றத்தைத் தருகின்றன. ஹார்ட்பீட் எஃபெக்ட் எல்இடி டெயில் லைட் பக்கவாட்டிலும் நீட்டிக்கப்பட்டிருப்பது, தடிமனான குரோம் பார், ஏ-பில்லர் முதல் விண்டோலைன் முழுவதும் குரோம் ஃபினிஷ், ரூஃப், பெரிய ரூஃப் ரெயில், ஸ்கிட் பிளேட்டுடனான பம்பர், டூயல் எக்சாஸ்ட் போன்றவை இந்த செக்மன்ட்டில் புதிது. இது அளவில் ஹுண்டாய் கிரெட்டா போல இருந்தாலும் அதிக வீல் பேஸைக் கொண்டுள்ளது.

செல்டோஸில் பிஎஸ் 6 தர இன்ஜின் வர இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் இன்ஜின்கள் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடனும், பெட்ரோல் இன்ஜினில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும், டீசல் இன் ஜினில் 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடல் டி-ஜிடிஐ என்று இருப்பதால், செல்டோஸில் 1.4 டர்போ பெட்ரோ இன்ஜின் 7 ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸுடன் வர இருப்பதும் உறுதியாகத் தெரிகிறது. இந்த மாடல் டாப் வேரியன்ட்டாக, பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்டோஸில் நார்மல், ஈகோ, ஸ்போர்ட் என மூன்று டிரைவிங் மோடுகளும், வெட், மட், சேண்ட் என மூன்று டெரைன் மோடுகளும் வழங்கப்பட்டுள்ளன. 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அனலாக் மற்றும் டிஜிட்டல் கலந்த கலவையான டிஸ்பிளே, லெதர் மற்றும் அலுமினிய வேலைப்பாடுகள் கொண்ட 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை தரமாக உள்ளன.

360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், ஹெட் அப் டிஸ்பிளே, சன் ரூஃப், ரெயின் சென்சிங் வைப்பர்கள், ஆட்டோ ஹெட்லைட்ஸ், 8 ஸ்பீக்கர் போஸ் நிறுவன சவுண்ட் சிஸ்டம், வெண்டிலேட்டட் சீட் போன்றவை உள்ளன. புஷ் பட்டன் ஸ்டார்ட், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட்டட் இருக்கைகள் மற்றும் மிரர் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

மேலும் இது கனெக்டட் கார் என்பதால், நேவிகேஷன், செக்யூரிட்டி, மெயின்டனன்ஸ், ரிமோட் கன்ட்ரோல், வாய்ஸ் கமாண்ட், டிராக்கிங் வசதி, எமர்ஜென்சி எஸ்ஓஎஸ் அழைப்பு வசதி, ஆட்டோ கொலிஷன் கன்ட்ரோல் என 37 அட்வான்ஸ்ட் வசதிகள் இதில்  உள்ளன.

பாதுகாப்பைப் பொருத்தவரை 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ் பிரேக்கிங், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், முன்னும் பின்னும் பார்க்கிங் சென்சார்கள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் போன்றவை உள்ளன. 

இந்தக் கார் எட்டு நிறங்களிலும், 5 டூயல் டோன் நிறங்களிலும் கிடைக்கும். உட்புறத்தில் கருப்பு, பீஜ் நிற ஆப்ஷன்கள் உள்ளன. இதில் ஆங்காங்கே ஃபாக்ஸ் வுட், பிரஷ்டு அலுமினியம் ஃபினிஷிங்கும் தரப்பட்டுள்ளன. ஆகஸ்ட்டில் சந்தையில் விற்பனைக்கு வரும் கியா செல்டோஸின்  விலை ரூ. 14 லட்சம் முதல் ரூ.18 லட்சம் என்ற அளவில் இருக்கலாம் எனத் தெரிகிறது.

2021 முதல் தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டு ஒரு மாடலை அறிமுகப்படுத்த கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. தனது முதல் மாடலை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே டீலர்ஷிப்களைத் திறக்கும் பணிகளை மும்முரமாகச் செயல்படுத்திவருவது, மாடல் அறிமுகப்படுத்தப்பட்டதும் விற்பனையை துரிதமாகச் செயல்படுத்த உதவியாக இருக்கும் என நம்புகிறது. கியாவின் என்ட்ரி இந்தியச் சந்தையில் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் என்ன என்பது போகப் போகத்தான் தெரியும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x