ஜெயமுண்டு பயமில்லை: 07-04-14

ஜெயமுண்டு பயமில்லை: 07-04-14
Updated on
1 min read

நூறில் இருந்து 93, 86 என்று ஏழு ஏழாகக் கழியுங்கள். ஏன் என்று கடைசியில் பார்ப்போம். பொறுமையே இல்லாதவர் யார் என்று ஒரு போட்டி நடந்ததாம். போட்டி முடிந்து முதல் பரிசு அறிவிக்கப் பட்டது. அதற்குத் தேர்ந் தெடுக்கப்பட்ட வர் பெயர் அழைக்கப்பட்டது. ஆனால், அவரைக் காணவில்லை. பரிசு முடிவு அறிவிக்கும்வரை காத்திருக்கப் பொறுமை இல்லாமல் அதற்கு முன்பே சென்றுவிட்டாராம். ‘பொறுமை’ என்பது அரிதாகக் காணப்படும் ஒரு விஷய மாக ஆகிவிட்டது.

ஒரு கட்டுரையையோ, பாடத்தையோ பொறுமை யாகப் படிப்பதற்குப் பொறுமை இல்லை. அதற்குள் நம் கவனத்தைத் திசைதிருப்ப ஏராளமான விஷயங்கள். முந்தைய காலகட்டங்களைவிட இப்போது நம் கவனத்தை திசைதிருப்பும் விஷயங்கள் ஏராளமாக உள்ளன. அலைபேசியை எடுத்துக்கொண்டால் குறுஞ்செய்திகள் பார்ப்பதிலிருந்து விளையாட்டுவரை ஏராளமான திசைதிருப்பும் விஷயங்கள். இணையத்திலோ கேட்கவே வேண்டாம். மெயில் பார்ப்பதிலிருந்து முகநூலில் முகம் தெரியாதவருடன் விவாதிப்பது என்று ஏராளமான கவனச் சிதறல்கள். தொலைக்காட்சியில் ஏராளமான சேனல்கள்.

படிக்க அமரும் முன்பு, கவனத்தைத் திசைதிருப்பும் விஷயங்கள் எல்லாவற்றையும் தவிர்த்துவிடுங்கள். முக்கியமாக செல்போன், கணினி, டிவியை அணைத்து விடுங்கள். வீட்டில் இருப்பவர்கள், வருபவர்கள் என்று யாருடைய உரையாடலிலும் தலையிடாதீர்கள். உலகில் உங்களைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. தொலைபேசியில் எல்லா அழைப்புகளையும் ஏற்கவேண்டும்; டிவியில் எல்லா செய்திகளையும் பார்த்துத்தான் தீரவேண்டும் என்றில்லை. கூகுளில் ஏதாவது தேடினால் கிடைக்கும் ஆயிரக்கணக்கான இணைப்புகளை எல்லாம் பார்த்தே ஆகவேண்டும் என்றில்லை.

வெகு நேரம் படித்த பிறகு, போரடிக்கிறதா? புத்தகத்தை எடுத்து வைத்துவிட்டு சற்று ரிலாக்ஸ் செய்துகொள்ள வேறு எந்த விஷயத்திலாவது ஈடுபடப்போகிறீர்களா? அதற்கு முன்பு, ஐந்து நிமிடத்தில் அடிக்குமாறு அலாரம் வைத்துக்கொள்ளுங்கள். மிகச்சரியாக ஐந்து நிமிடத்தில் அலாரம் அடித்ததும், அந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு மீண்டும் படிப்புக்கு வந்துவிட வேண்டும்.

படிக்கும்போதுகூட ஒவ்வொரு கால்மணி நேரத்துக்கும் மணி அடிப்பதுபோல டைமர் (Timer) வைத்துக்கொள்ளலாம். நம் சிந்தனை நம்மையறியாமல் வேறு எங்காவது சென்றாலும், அலார மணி அடித் ததும் உஷாராகி மீண்டும் கவனத்தை பாடத்தில் கொண்டுவரலாம்.

வளவளவென்று பேசுபவர்கள், கவனத்தை திசைதிருப்புபவர்களிடம் எக்காரணம் கொண்டும் பேச வேண்டாம். ‘நேரமில்லை’ என்று திட்டவட்டமாகக் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிடுங்கள். கடைசி வரிவரை இதைப் படித்த பொறுமைக்கு பாராட்டுக்கள்.

முதலில் சொன்னபடி நூறிலிருந்து ஏழு ஏழாக இரண்டு வரை கழித்திருந்தால் நீங்கள் பொறுமையில் புத்தர்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in