

4 மாநில முதல்வர்கள் பதவியேற்பு
மே 27 சிக்கிம் மாநில முதல்வராக சிக்கிம் கிராந்திகாரி மோர்சா கட்சியின் தலைவர் பிரேம் சிங் தமாங் பதவியேற்றுக்கொண்டார்.
மே 29 அருணாசலப் பிரதேச முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பேமா காண்டூ பதவியேற்றார். ஒடிஷா மாநில முதல்வராக ஐந்தாவது முறையாக பிஜூ ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் பதவியேற்றுக்கொண்டார்.
மே 30 ஆந்திர மாநில முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜகன் மோகன் ரெட்டி பதவியேற்றுக்கொண்டார்.
போட்டித்தன்மையில் 43-வது இடம்
மே 28: பொருளாதாரத்துக்கான உலகப் போட்டித்தன்மை தரவரிசைப் பட்டியலைச் சர்வதேச மேலாண்மை மேம்பாட்டு நிறுவனம் (IMD) வெளியிட்டது. இந்தத் தரவரிசைப் பட்டியலில், 2017-ல் 45-வது இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு 43-வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது. சிங்கப்பூர், ஹாங் காங், அமெரிக்கா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றன.
பிரதமர், 57 அமைச்சர்கள் பதவியேற்பு
மே 30 நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார். அவருடன் 57 அமைச்சர்களும் பதவியேற்றனர். உள்துறை அமைச்சராக அமித் ஷா, நிதி, பெருநிறுவன விவகாரத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சராக எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.
சித்த, ஆயுர்வேதப் படிப்புகளுக்கும் நீட்
மே 31 ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை இந்தக் கல்வி ஆண்டில் நீட் தேர்வின் அடிப்படையில் நடைபெறும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயப் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
யோகா, இயற்கை மருத்துவத்துக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து இந்தக் கல்வி ஆண்டில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை மார்ச் மாதம் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.
எட்டு வழிச் சாலை: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
மே 31 சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலை அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது. இந்த வழக்குத் தொடர்பான விசாரணை, ஜூன் 3 அன்று நடைபெறுகிறது.
வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதம்
மே 31 நாட்டின் வேலைவாய்ப்பின்மை 45 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 2017-18-ம் ஆண்டில் வேலைவாய்ப்பின் சதவீதம் 6.1 ஆக உயர்ந்திருப்பதாக மத்தியப் புள்ளியியல், திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் காரணமாக இந்த அறிக்கை நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய கடற்படைத் தலைவர்
மே 31 நாட்டின் 24-வது கடற்படைத் தலைவராக கரம்பீர் சிங் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் நவம்பர் 2021 வரை உள்ளது.
கடற்படையைத் தொடர்ந்து இந்த ஆண்டு, விமானப் படை, ராணுவம் ஆகியவற்றுக்கும் புதிய தலைவர்கள் பொறுப்பேற்க உள்ளனர்.
உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதம்
மே 31 நான்காவது காலாண்டில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 5.8 சதவீதமாகக் குறைந்துள்ளது. விவசாயம், மீன்வளம், சுரங்கம், உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் வளர்ச்சி சதவீதம் குறைந்ததால், இந்தக் காலாண்டில் உற்பத்தி சதவீதம் குறைந்திருப்பதாகப் பொருளாதார விவகாரத் துறைச் செயலாளர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.