Last Updated : 15 Sep, 2014 12:59 PM

 

Published : 15 Sep 2014 12:59 PM
Last Updated : 15 Sep 2014 12:59 PM

ஆபத்தான சாலைகளில் சாகசப் பயணம்!

“அடடா! இந்த மூன்று எலிக் குஞ்சுகளும் எவ்வளவு அழகு! பாவம், இவற்றின் அம்மா இறந்துவிட்டது. இனி இவை எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவை. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது” என்று எலிகளுக்குப் பரிவு காட்டும் லிசா கெல்லி, ஒரு ட்ரக் டிரைவர்.

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் வசிக்கும் லிசா கெல்லிக்குச் சின்ன வயதிலிருந்தே வித்தியாசமான விருப்பங்கள். சாகச விளையாட்டுகள், சாகசப் பயணங்கள் மீது ஆர்வம் வந்ததில் ஒன்றும் ஆச்சரியமில்லை, பனி சூழ்ந்த அலாஸ்காவில் வாழ்வதே ஒரு சாகசம்தானே!

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, நண்பனின் வீட்டில் ஒரு ட்ரக்கைப் பார்த்தார். அந்த ட்ரக் அவருக்கு ஏதோ சொல்வதுபோல இருந்தது. தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்தார். படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, ட்ரக் டிரைவராகப் பயிற்சி பெற்றார்.

“ட்ரக் ஓட்டுவது அவ்வளவு எளிதான வேலை அல்ல. ஆண்களைப் போல இரண்டு மடங்கு சக்தியையும் இரண்டு மடங்கு உழைப்பையும் நான் கொடுக்க வேண்டியிருக்கும். எனக்குப் பிடித்த வேலை என்பதால் ஒருபோதும் அலுத்துக்கொள்வதே இல்லை” என்கிறார் லிசா.

பயிற்சி பெற்றாலும் ட்ரக் டிரைவர் வேலை லிசாவைத் தேடி வரவில்லை. ஒல்லியான இளம் பெண், கடினமான ட்ரக்கை எப்படி ஓட்ட முடியும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. பள்ளிப் பேருந்து ஓட்டுநர், பீட்ஸா டெலிவரி என்று கிடைத்த வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் லிசா.

பிறகு ஒரு ட்ரக் கம்பெனியில் வேலை கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக அவர் மீது நம்பிக்கை வந்தது. சரக்குகளை ஏற்றி நீண்ட தூரத்துக்குச் சென்று சேர்க்கும் பணியைத் திறம்படச் செய்தார் லிசா.

ட்ரக் ஓட்டுநர்களில் அன்று பெண்கள் இல்லாததால் அதிகக் கவனம் பெற்றார் லிசா. ஹிஸ்ட்ரி சானலில் உலகின் ஆபத்து நிறைந்த சாலைகளிலும் ஐஸ் கட்டி சாலைகளிலும் பயணம் செய்யக்கூடிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க லிசாவுக்கு அழைப்பு வந்தது. தன் திறமைக்குக் கிடைத்த சவாலாக அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார் லிசா.

“பாலைவனம், பனிப் பிரதேசம், மலைப் பாதை என்று ஒவ்வொரு சீசனும் வித்தியாசமான அனுபவத்தைத் தந்தது. ஆள் அரவமற்ற ஐஸ்கட்டிப் பாதையில் பயணம் செய்வது ஆபத்தை கூடவே அழைத்துச் செல்வதைப் போன்றது.

திடீரென்று பனி உடைந்தால், ட்ரக்கோடு தண்ணீரில் மூழ்கி மடிய வேண்டியதுதான். பரிசோதித்துக்கொண்டே எடை மிகுந்த ட்ரக்கை ஓட்ட வேண்டும். அதேபோல இமயமலைப் பகுதியில் பயணம் செய்ததையும் என்னால் மறக்கவே முடியாது. மிகக் குறுகலான, ஆபத்தான மலைப் பாதைகள்.

கொஞ்சம் கவனம் நமக்குத் தப்பினாலும், எதிரில் வருபவருக்குத் தப்பினாலும் பாரபட்சமின்றி சாவைச் சந்திக்க வேண்டியதுதான். பயணமே பெரிய சவாலாக இருப்பதால் உணவு, மொழி, தட்பவெப்பம் எல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது” என்கிறார் லிசா.

ஆண்கள் ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஒரு துறையில் உங்களுக்கு வரவேற்பு எப்படி இருந்தது என்று கேட்டால், “எந்தத் துறையாக இருக்கட்டும், பெண்களை இழிவாக நினைக்கும் ஆண்களும் இருக்கவே செய்வார்கள்.

நான் இவ்வளவு பிரபலமான பிறகும்கூட, ஒரு ரேடியோ நிகழ்ச்சியில் காது கொடுத்துக் கேட்க முடியாத அளவுக்குத் திட்டுகளைச் சந்தித்தேன். நேரில் ஒரு மாதிரி பேசுபவர்கள் முகத்துக்குப் பின்னால் கீழ்த்தரமாகப் பேசுவார்கள். இவர்களை நான் பொருட்படுத்துவதில்லை.

என்னுடன் பணிபுரிபவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களும் என்னைத் தங்களுக்குச் சமமாகவே நடத்துகிறார்கள். ஆபத்து என்று அவர்கள் பின்வாங்கும்போதுகூட நான் பயணத்தை முடிக்கும் எண்ணத்திலேயே கருத்துகளைச் சொல்வேன்.

பெரும்பாலும் கேட்டுக்கொள்வார்கள். என்னைவிட சீனியர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருப்பதில் மகிழ்ச்சி’’ என்கிறார் லிசா.

கணவர், அவர் வளர்க்கும் குதிரைகள், நாய், பூனைகளை நீண்ட காலம் பிரிந்திருப்பதுதான் கஷ்டமான விஷயம் என்றாலும் அதைவிடக் கஷ்டமானது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காக ட்ரக் ஓட்டுவதுதான்.

சாலையையும் கேமராவையும் பார்த்துக்கொண்டு ஓட்டுவதும் கேமரா நம்மை கவனிக்கிறது என்பதும் செய்த விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்வதும் மிக மிக கஷ்டமான விஷயங்கள் எனக் கருதுகிறார் லிசா.

மோட்டார்க்ராஸ் சாம்பியனான லிசாவுக்கு ஸ்கை டைவிங், ஹாண்ட் க்ளைடிங், ஸ்நோ போர்டிங், குதிரையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகளும் தெரியும். தன்னுடைய பயண அனுபவங்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார். புத்தகமும் வெளிவந்திருக்கிறது.

“இந்த வாழ்க்கை மறுபடியும் கிடைக்காது. அதை நேர்மையாகவும் மகிழ்ச்சியாகவும் விரும்பியதைச் செய்ய முடிந்ததாகவும் மாற்றிக்கொண்டால் வாழ்க்கை இனிமையானது! நானோ, என் நிகழ்ச்சிகளோ, என் எழுத்துகளோ மற்றவர்களுக்கு சுவாரசியமாக இருந்தால் மகிழ்ச்சி.

என்னைப் பார்த்து யாராவது உத்வேகமும் தன்னம்பிக்கையும் பெற்றால் அதைவிடச் சிறந்த விஷயம் உலகில் எதுவும் இல்லை” என்கிறார் லிசா கெல்லி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x