Last Updated : 23 Jun, 2019 09:18 AM

 

Published : 23 Jun 2019 09:18 AM
Last Updated : 23 Jun 2019 09:18 AM

வாழ்ந்து காட்டுவோம் 10: கைம்பெண்களின் கலக்கம் தீர்க்கும் உதவி

அன்னம்மாவுக்குப் படிப்பறிவு இல்லை. கணவன் இறந்தவுடன் வீட்டு வேலை செய்து மகளை வளர்த்துவந்தார். பலவிதமான துன்பங்களுக்கு நடுவில் மகளைப் பள்ளி இறுதிவரை படிக்கவைத்துவிட்டார். அவருடைய மகள் நித்யா பிளஸ் டூ பாஸ் செய்துவிட்டாள்.

மேலே படிக்கவைக்க வசதி இல்லை. நல்லபடியாக அவளுக்கு ஒரு கல்யாணத்தை முடித்துவிடலாம் என்று நினைத்தார். ஆனால், கையில் பணமில்லாமல் என்ன செய்வது? கிராமத்துக்கு வந்த முக்கிய சேவிகா (வட்டார அளவிலான விரிவாக அலுவலர் – சமூகநலம்) அம்மா மூலம் ‘ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்ட’த்தைப் பற்றி அறிந்துகொண்டார்.

அவரது அறிவுறுத்தலின்படி மகளுக்கு 18 வயது முடியக் காத்திருந்தார். அன்னம்மாவின் தூரத்துச் சொந்தம் வரதன் தன் மகனுக்கு நித்யாவைப் பெண் கேட்டு வந்தபோது மகிழ்ச்சியோடு சம்மதித்தார்.

முக்கிய சேவிகா அம்மாவிடம் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெறுவதற்குத் தேவையான விவரங்களைக் கேட்டுக்கொண்டார். எல்லாச் சான்றிதழ்களையும் அவர் மூலமாகவே சரிபார்த்துக்கொண்டார்.  கைம்பெண் மகள் திருமண நிதியுதவி மூலம் ரூ.25,000 பணமும் தாலிக்குத் தங்கமாக ஒரு சவரன் தங்கக் காசும்  அன்னம்மாவுக்குக் கிடைத்துவிட்டது.

கணவனை இழந்து, திருமண வயதில் மகளை வைத்திருக்கும் வறுமையில் வாடும் கைம்பெண்களின் வேதனை சொல்லில் அடங்காது. அவர்களது வாழ்க்கையில் ஓரளவுக்காவது வெளிச்சம் பாய்ச்ச வேண்டியதும் அரசின் கடமைதானே.

அதனால்தான் ‘சமூக சீர்திருத்தத் தந்தை’ எனப் பலராலும் அழைக்கப்படும் ஈ.வெ.ரா.வுக்கு உறுதுணையாக நின்று, பெண்களுக்குரிய உரிமைகளை நிலைநாட்டிய அவரின் துணைவியார் மணியம்மையார் பெயரையே கைம்பெண்களின் மகள் திருமண நிதியுதவித் திட்டத்துக்கு அரசு அறிவித்தது.

அணுக வேண்டிய அலுவலர்

1. மாவட்டச் சமூக நல அலுவலர்கள்.

2. சமூகநல விரிவாக்க அலுவலர்கள்/மகளிர் ஊர் நல அலுவலர்கள்

விண்ணப்பங்களைப் பரிசீலிக்க உத்தேசிக்கப்பட்ட கால அளவு

விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்கள் 

தாமதமாகப் பெறப்படும் விண்ணப்பங்களும் திருமணத் தேதியன்றோ திருமணத்துக்குப் பிறகோ அளிக்கப்படும் விண்ணப்பங்களும் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

சமர்ப்பிக்க வேண்டிய சான்றுகள்

1. சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கைம்பெண் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கைம்பெண்  சான்று, வருமானச் சான்று இரண்டும் தேவையில்லை.

2. கைம்பெண் ஓய்வூதியம் பெறாதவர்கள், கைம்பெண் சான்று, வருமானச் சான்று இரண்டையும் வட்டாட்சியரிடமிருந்து பெற்றுச் சமர்ப்பிக்க வேண்டும்.

3. திருமணப் பெண்ணின் வயதுச் சான்று தேவை.

திட்டம் 2

மணமகள் பட்டப் படிப்பு/ பட்டயப் படிப்பு படித்திருந்தால் பட்டதாரிகள் கல்லூரி யிலோ தொலைதூரக் கல்வி மூலமோ அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக்கழகங்களிலோ தேர்ச்சிபெற்ற சான்றிதழ்களின் நகல். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தேர்ச்சிபெற்ற சான்றிதழ்களின் நகல்.

குறைபாடுகள் இருப்பின்

தெரிவிக்க வேண்டிய அலுவலர்

மாவட்ட அளவில்: மாவட்ட ஆட்சியர் /

மாவட்டச் சமூகநல அலுவலர்.

மாநில அளவில் : சமூக நல ஆணையர்,

2-வது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை – 600 015.

தொலைபேசி எண். 044 – 24351885

 

திட்டத்தின் நோக்கம்    

ஏழைக் கைம்பெண்கள் தங்களுடைய மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய பணம் இல்லாமல் எதிர்கொள்ளும் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் மகள் திருமணத்துக்கு நிதியுதவி வழங்குதல்.

வழங்கப்படும் உதவி

திட்டம் 1-ல் மின்னணுப் பரிமாற்றச் சேவைமூலம் ரூ.25,000  பணம் வழங்கப்படுகிறது. தாலி செய்வதற்காக ஒரு சவரன்  (8 கிராம்)  22 காரட் தங்க நாணயம் 23.05.2016 முதல்  வழங்கப்படுகிறது.

திட்டம் 2-ல் மின்னணுப் பரிமாற்றச் சேவை மூலம் ரூ. 50,000 பணம் வழங்கப்படுகிறது. தாலி செய்வதற்காக 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயம் 23.05.2016   முதல் வழங்கப்படுகிறது

பயன் பெறுபவர்

மணப்பெண்ணின் அம்மாவிடம் வழங்கப்படும். மணப் பெண் ணின் அம்மா இறக்க நேரிட்டால், மணமகள் பெயரில் வழங்கப்படும்.

தகுதிகள் / நிபந்தனைகள்

அ. கல்வித் தகுதி

திட்டம் 1 - கல்வித் தகுதி தேவையில்லை

திட்டம் 2 - பட்டதாரிகள் கல்லூரியிலோ தொலைதூரக் கல்வி மூலமோ அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களிலோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டயப் படிப்பு எனில், தமிழக அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வருமான வரம்பு

குடும்பத்தின் ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்

வயது வரம்பு

திருமணத் தேதியன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். உச்ச வயது வரம்பு இல்லை.

இதர நிபந்தனைகள்

கைம்பெண்ணின் ஒரு மகளுக்கு மட்டுமே திருமண நிதியுதவித் தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய கால அளவு

திருமணத்துக்கு 40 நாட்களுக்கு முன் விண்ணப்பிக்கலாம். சிறப்பு நேர்வுகளில் தக்க காரணங்கள் இருந்தால் திருமணத்துக்கு முதல் நாள்வரை விண்ணப்பிக்கலாம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x