Published : 05 Jun 2019 09:33 am

Updated : 05 Jun 2019 09:33 am

 

Published : 05 Jun 2019 09:33 AM
Last Updated : 05 Jun 2019 09:33 AM

டிங்குவிடம் கேளுங்கள்: உலகம் முழுவதும் ஒரே கடல்தானா?

உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் தோல் வித்தியாசமாக இருப்பது ஏன்? இரட்டையர்களாகப் பிறந்தவர்களுக்கு ஒரே மாதிரி ரேகை இருக்குமா, டிங்கு?

- முகமது ஷஃபி, 6-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.


உடல் முழுவதிலும் உள்ள தோல், உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் மட்டும் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. நிறைய வியர்வைச்சுரப்பிகளுடன் வெளுப்பாகக் காணப்படுகிறது. உடலில் உள்ள தோலைவிட 8 முதல் 14 மடங்குவரை உள்ளங்கை, உள்ளங்கால் தோல் தடிமனாகவும் காணப்படுகிறது. பாதங்கள் நேரடியாகத் தரையில் படுகின்றன. மென்மையான தோலாக இருந்தால் சூடு, சிராய்ப்பு போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாது.

உள்ளங்கைகள் பல வேலைகளைச் செய்கின்றன. அதற்கு ஏற்றதுபோல் தோல் தடிமனாக இருப்பதுதான் நல்லது. ஒரு பொருளை எடுப்பதற்கு ரேகைகளே உதவி செய்கின்றன. இல்லாவிட்டால், பொருளை இறுக்கிப் பிடிக்க முடியாமல் கீழே தவற விட்டுவிடுவோம். கால்களில் உள்ள ரேகைகள் மூலம்தான் நாம் நடக்கும்போது உராய்வு விசை ஏற்பட்டு, விழாமல் தொடர்ந்து செல்ல முடிகிறது. உள்ளங்கைகளிலும் கால்களிலும் தொடு உணர்வு அதிகமாக இருக்கிறது.

கரு உருவாகி இரண்டு மாதங்களில் தோன்றும் உள்ளங்கை, உள்ளங்கால் ரேகைகள், வாழ்நாள் முழுவதும் இருக்கின்றன. உலகில் ஒருவர் ரேகைபோல் இன்னொருவர் ரேகை இருப்பதில்லை. இரட்டையர்களுக்கும் வெவ்வேறு ரேகைகள்தான் இருக்கும். அதனால்தான் குற்றவாளிகளை, கைரேகை மூலம் கண்டுபிடிக்கிறார்கள், முகமது ஷஃபி.

Neonatalogist என்றால் என்ன? இது மருத்துவப் படிப்பா, டிங்கு?

- வி. பொன்தர்ஷினி, 10-ம் வகுப்பு, கமலாவதி மேல்நிலைப் பள்ளி, சாகுபுரம், தூத்துக்குடி.

Neonatology என்றால் பிறந்த குழந்தைகள், குறிப்பாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கான துறை. பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் எடை குறைவு, வளர்ச்சிக் குறைபடு, பிறவிக் குறைபாடு, சுவாசக் குறைபாடு போன்ற பிரச்சினைகளைக் கவனிக்கும் மருத்துவர்கள் நியோநேடாலஜிஸ்ட் (Neonatalogist), பொன்தர்ஷினி.

கோபப்படாமல் நெருங்கியவர்களிடம் நம் எதிர்ப்பையோ விருப்ப மின்மையையோ எப்படி வெளிப்படுத்துவது? கோபப்படாமல் அவர்களின் தவறை எப்படிச் சுட்டிக்காட்ட முடியும், டிங்கு?

- அ. சுபிக்ஷா, 10-ம் வகுப்பு, மகரிஷி வித்யா மந்திர், ஓசூர்.

கோபம் என்பது மனிதர்களின் இயல்பான குணங்களில் ஒன்று. கோபமே கூடாது என்று சொல்ல மாட்டேன். இந்தச் சமூகம் ஏன் இப்படி இருக்கிறது, அனைவருக்கும் ஏன் எல்லாமும் கிடைப்பதில்லை, சுற்றுச்சூழல் ஏன் இப்படி மாசுப்படுகிறது என்பது போன்ற சமூக நிகழ்வுகளைப் பார்த்துக் கோபம் வருவதில் தவறில்லை. கண்டிப்பாகக் கோபம் வர வேண்டும். அப்போதுதான் மாற்றம் நிகழும்.

அன்றாட வாழ்க்கையில் சக மனிதர்களிடம் கோபப்படாமல் இருப்பதுதான் நல்லது. கோபத்தால் உறவுதான் விரிசல் அடையுமே தவிர, ஆக்கபூர்வமான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்து விடாது. உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதை கோபப்பத்தோடுதான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. சிரித்துக்கொண்டே, நகைச்சுவையாக உங்கள் விருப்பமின்மையைச் சொல்லிவிடலாம்.

இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் விஷயத்தையும் புரிய வைத்துவிடலாம், அவர்களும் காயப்பட மாட்டார்கள். இதே மாதிரிதான் மற்றவர்கள் செய்யும் தவறையும் சிரித்துக்கொண்டே, இயல்பாகச் சுட்டிக் காட்டுங்கள். அவர்கள் தவறைத் திருத்திக்கொள்ளலாம். திருத்திக்கொள்ளாவிட்டாலும்கூட உங்கள் உறவில் பிரச்சினை வராது. இன்னொரு விஷயம், உங்களுக்குத் தவறாகப் படும் ஒரு விஷயம் மற்றவருக்குச் சரியாகப் படலாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்துப் பேசுவது நல்லது, சுபிக்ஷா.

tinku-3jpg

உலக உருண்டையில் பார்க்கும்போது ஒரே கடலாகத் தெரிகிறது. பிறகு ஏன் பல்வேறு கடல்களாக வகைப்படுத்தியிருக்கிறார்கள், டிங்கு?

– என். ராஜசேகர், 7-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டிவனம்.

நீங்கள் சொல்வது சரிதான் ராஜசேகர். உலகில் ஒரே ஒரு பெரிய கடல்தான் இருக்கிறது. பூமியில் உள்ள சுமார் 71% தண்ணீர், இந்தக் கடலில்தான் இருக்கிறது. பூகோள ரீதியாகப் பல்வேறு பெயர்களில் இந்தக் கடல் பிரிக்கப்பட்டது. பின்னர் நாட்டின் எல்லைகள், வரலாறு, கலாச்சாரம், புவியியல், அறிவியல் காரணங்களுக்காக மேலும் பல்வேறு கடல்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்திய பின் ராக்கெட் என்ன ஆகும், டிங்கு?

– க. மணிகண்டன், 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

செயற்கைக்கோளை பூமியியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் பெரும்பாலான ராக்கெட்கள் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவையாக உருவாக்கப்படுகின்றன. அதனால் தானாக அழிந்து போய்விடுகின்றன. அதாவது செயற்கைக்கோளை நிலைநிறுத்திய பின்னர் எரிந்து சாம்பலாகிவிடும்.

அல்லது கீழே வந்து, வளிமண்டலத்தில் ஏற்படும் உராய்வினால் நொறுங்கிப் போய்விடும். அல்லது கடலில் விழுந்துவிடும். தற்போது பல முறை பயன்படுத்தக்கூடிய ராக்கெட்களையும் உருவாக்குகிறார்கள். அது பூமிக்குப் பத்திரமாகத் திரும்பிவந்துவிடும், மணிகண்டன்.டிங்குவிடம் கேளுங்கள்


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x