Last Updated : 02 Jun, 2019 09:40 AM

 

Published : 02 Jun 2019 09:40 AM
Last Updated : 02 Jun 2019 09:40 AM

வாழ்ந்து காட்டுவோம் 08: குறைவான கட்டணத்தில் மகளிர் விடுதிகள்

தொழில்மயமாக்கம், நகர்மயமாக்கம் போன்றவற்றால் கிராமப்புறங்களில் இருந்தும் நகராட்சிப் பகுதிகளில் இருந்தும் வேலைக்காகப் பெண்கள் அதிக அளவில் பெரு நகரங்களுக்குச் சென்று அங்கேயே தங்கிப் பணிபுரிவது நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இப்படிச் சொந்த ஊரையும் பெற்றோரையும் பிரிந்து பெரு நகரங்களுக்குப் பணிபுரிய வரும் பெண்கள் தங்குவதற்குப் பாதுகாப்பான இடம் தேவைப்படுகிறது. வாங்குகிற சொற்ப வருமானத்துக்குள் தங்கும் இடம், உணவு போன்றவற்றுக்கான செலவுகளைச் சமாளிக்க வேண்டியுள்ளது. நியாயமான கட்டணத்துடன் பாதுகாப்பான மகளிர் தங்கும் விடுதிகளைத் தேட வேண்டிய அவசர அவசியமும் பெண்களுக்கு ஏற்பட்டுள்ளது. பெண்களின் இந்தத் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு பல தனியார் மகளிர் விடுதிகள் கட்டணக் கொள்ளையில் இறங்குவதையும் கேள்விப்படுகிறோம். அதிகக் கட்டணம் செலுத்த முடியாததாலேயே கிராமப்புறப் பெண்களில் பலர் நகரங்களுக்கு வேலைக்குச் செல்லத் தயங்குகின்றனர். அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் மகளிர் விடுதிகளின் கட்டணம் சிறு நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் மாத வருமானத்தில் 50 சதவீதத்தைத் தொட்டுவிடக்கூடிய அளவில் இருக்கிறது. 

இவற்றையெல்லாம் மனத்தில் கொண்டு, மகளிர் நலனை முக்கியக் குறிக்கோளாக வைத்து இயங்கிவரும் சமூக நலத் துறை  மூலம் தமிழக அரசு, மகளிருக்கான பாதுகாப்பான தங்கும் விடுதிகளை நடத்திவருகிறது.  தற்போது 13 மாவட்டங்களில்  20 தங்கும் விடுதிகள் இயங்கிவருகின்றன.  மேலும், 14 மாவட்டங்களில் விடுதிகளைத் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

வழங்கப்படும் உதவிகளும் அவற்றைப் பெறுவதற்கான தகுதிகளும்

* தங்கும் வசதியுடன் உணவுச் செலவு, மின் கட்டணச் செலவு ஆகியவற்றுடன் இதரச்  செலவுகள் பகிர்மான அடிப்படையில் பெறப்படுகிறது.

* மாதமொன்றுக்கு அறை வாடகையாக, சென்னையில் 300 ரூபாயும் மற்ற மாவட்டங்களில் 200 ரூபாயும் செலுத்த வேண்டும். சென்னையில் 25,000 ரூபாய்க்குள்ளும் இதர மாவட்டங்களில் 15,000 ரூபாய்க்குள்ளும் மாத வருமானம் பெறும் பெண்கள் மட்டுமே இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த இயலும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்

* விண்ணப்பதாரர், பணியில் சேர்ந்தமைக்கான சான்று, பணிபுரியும் அலுவலகத்திலிருந்து பெறப்பட வேண்டும்.

* விண்ணப்பதாரரின் வருமானச் சான்று.

* விடுதி உள்ள இடம் அல்லாமல் வேறு இடம் அல்லது வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதற்கான இருப்பிடச் சான்று.

* விண்ணப்பதாரரின் ஆதார், பான் அட்டை.

தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்கள்:

* மாவட்டச் சமூக நல அலுவலர்கள்.

* சமூக நலத் துறை மூலம் நடத்தப்படும்  பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதிகள்

 (உரிமைகள் அறிவோம்)

கட்டுரையாளர்,

மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்.

தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x