Published : 17 Jun 2019 11:42 AM
Last Updated : 17 Jun 2019 11:42 AM

அலசல்: சோதனை மேல் ‘சோதனை’

குழந்தைகளுக்கான பவுடர், ஷாம்பூ உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மீது இரண்டு மாதங்களுக்கு முன், வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

அந்நிறுவனம் தயாரிக்கும் குழந்தைகளுக்கான ஷாம்பூவில் புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதிப்பொருட்களின் அளவு அதிகமாக இருப்பதாக ராஜஸ்தான் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் சோதனையில் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட தயாரிப்புகளை விற்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து, ஷாம்பூ தயாரிப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று மேல் முறையீடு செய்தது. அதன்படி நீதிமன்றம் மறு ஆய்வுக்கு உத்தரவிட்டது.

தற்போது அந்த மறு ஆய்வில், அந்த ஷாம்பூவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய எந்த வேதிப்பொருட்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி ஷாம்பூவும் வழக்கம்போல கடைகளில் விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. 

ஏற்கெனவே மக்கள் தாங்கள் உண்ணும் உணவும், மருந்தும் சிறந்தவையா, இல்லையா என்ற குழப்பத்தில்தான் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பொருளிலும், மருந்திலும் என்னென்ன கலக்கப்படுகிறது, எந்த அளவில் கலக்கப்படுகிறது என்பதை அச்சிட வேண்டும் என்பது விதி.

பெரும்பாலான மக்கள் தாங்கள் பயன்படுத்தும் பொருட்களில் இந்த விவரங்களைப் பார்த்து வாங்கும் விழிப்புணர்வைக்கூட இன்னமும் அடையவில்லை. அப்படியிருக்க மக்களுக்கு ஆய்வகங்களின் ஆய்வு முறைகள் குறித்தெல்லாம் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அரசு ஆய்வகங்கள் அளிக்கும் சான்றிதழ்களும், ஒப்புதல்களும், ஆய்வு முடிவுகளும்தான் வேதவாக்கு.

ஆனால், உயிருக்கு உலை வைக்கும் பொருட்கள் தொடர்பான சர்ச்சைகள் எழும்போது, அரசு சோதனை முறைகளிலேயே இப்படி முரண்பாடான முடிவுகள் வந்தால் அந்தச் சோதனைகளின் மீதான நம்பகத்தன்மையை என்ன வென்று நம்புவது. ஆய்வகங்கள் நடத்தும் சோதனை நடைமுறைகளையும் சோதனை செய்ய வேண்டும் போலிருக்கிறது.

ஏனெனில், ஜான்சன் & ஜான்சன், நெஸ்லே, ஹிந்துஸ்தான் யுனிலிவர் போன்ற பல பெரு நிறுவனங்களின் தயாரிப்புகள் முதலில் உடலுக்கு கேடு விளைவிப்பவை என அரசு தரக்காட்டுப்பாட்டு அமைப்புகளால் தடைசெய்யப்பட்டு, பின்னர் மறு ஆய்வில் அவற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லை, பாதுகாப்பானவைதான் என்று அறிக்கை வெளியிடப்படுவதும் தொடர்கதையாகவே நடக்கின்றன. இதுபோன்ற முரணான முடிவுகள் வரும்போதெல்லாம் அரசு அமைப்புகளில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறதோ என்ற சந்தேகமும் கூடவே எழுகிறது.

முதலில் இந்தியா எதை தரம் என்று வரையறை செய்கிறது என்பதும் கேள்விக்குட்படுத்த வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துப் பொருட்கள் இன்னும் இந்திய சந்தையில் விற்பனையில் இருக்கின்றன. தொடர்ந்து மருந்துகள் தொடர்பாகவும், உணவுப் பொருட்கள் தொடர்பாகவும் சர்ச்சைகள் செய்திகளில் அடிபட்டுக்கொண்டேதான் இருக்கின்றன.

ஆனால், அடிப்படை விஷயங்களான, அரசின் சோதனைகள், நடவடிக்கைகள் எதிலும் மாற்றங்கள் வந்ததாகத் தெரியவில்லை. அரசு தரக் கட்டுப்பாட்டு வாரியங்களின் ஒப்புகையோடுதான் பொருட்கள் சந்தைக்கு வருகின்றன.

சில காலங்களுக்கு பிறகு அந்தப் பொருட்களின் மீது குற்றச்சாட்டு எழுகிறது எனில், தொடர் பரிசோதனைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அரசு தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் நடத்தவில்லை என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.

குடிமக்கள் உரிமை, நுகர்வோர் உரிமை, தகவல் அறியும் உரிமை என எத்தனையோ உரிமைகளை இந்திய அரசியல் சட்டம் வழங்கினாலும், தொடர்ந்து கையறு நிலையிலேயே பாதிப்புக்குள்ளாகும் சாமான்ய மக்கள் இருக்கின்றனர் என்பது கண்கூடு. சுய ஆதாயத்தை மறந்து மக்களுக்காக அரசு அமைப்புகள் பணியாற்ற தொடங்கினால் மட்டுமே மாற்றங்கள் சாத்தியம். நடக்குமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x