Published : 24 Jun 2019 11:22 AM
Last Updated : 24 Jun 2019 11:22 AM

கடன் அட்டையில் குறைந்த தொகையை செலுத்துவது சரியா?

பல சமயங்களில் நமக்கு கை கொடுப்பது கடன் அட்டை எனப்படும் கிரெடிட் கார்டு என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. பொருள்களை வாங்கும்போது இருக்கும் மகிழ்ச்சி, கடன் அட்டைக்கான தவணைத் தொகையை செலுத்தும் போது மறைந்துவிடும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. வாங்கிய சந்தோஷம் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே 50 நாட்களுக்கு வட்டியில்லா வசதியை கடன் அட்டை வழங்கிய நிறுவனங்கள் அல்லது வங்கிகள் அளிக்கின்றன.

இது தவிர ரிவார்ட் பாயின்ட், தள்ளுபடி சலுகைகள், கேஷ் பேக் ஆஃபர் எனப் பல சலுகைகளையும் அளிக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக உங்களது கடன் அட்டையில் உள்ள மொத்த தொகையில் குறைந்தபட்ச தொகை செலுத்தினால் போதும் என்ற சலுகையும் அளிக்கப்படுகிறது.

குறைந்தபட்ச தொகை என்பது உங்கள் கடன் அட்டையில் உள்ள மொத்த நிலுவைத் தொகையில் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையான தொகையாகும். மிகவும் நிதி நெருக்கடியான சமயங்களில் குறைந்தபட்ச தவணைத் தொகை மிகப்பெரும் நிம்மதியை அளிக்கக் கூடியதாக இருக்கும். இதன் மூலம் அபராதத் தொகை மற்றும் காலம் தாழ்ந்து செலுத்துவதற்கான வட்டி உள்ளிட்டவற்றை தவிர்க்கலாம்.

ஆனால், குறைந்தபட்ச தொகையை செலுத்துவது தொடர்ந்தால், அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை பாதிக்கும். கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். வட்டியில்லாமல் கிடைத்த சலுகைகளுக்கு பலனில்லாமல் போய்விடும்.

கிரெடிட் மதிப்பெண்

கடன்  அட்டைகளில்   உள்ள  நிலுவை தொகைக்கு குறைந்தபட்ச தவணைத் தொகையை செலுத்துவதால் சிபில் மற்றும் எக்ஸ்பீரியன் ஆகியவை வழங்கும் மதிப்பெண்கள் குறையும். உதாரணமாக உங்கள் கடன் அட்டைக்கான அதிகபட்ச கடன் வரம்பு ரூ.40 ஆயிரம் என கருதுவோம்.

இதில் உங்களது நிலுவை தொகை ரூ.20 ஆயிரமாக இருந்தால் உங்களது கடன் பயன்பாட்டு அளவு 50 சதவீதமாகும். கடன் உபயோக அளவு பொதுவாக 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இருந்தால் நல்லது. நீங்கள் குறைந்தபட்ச தவணைத் தொகையைச் செலுத்துவதாக இருந்தால் அது மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

உதாரணத்துக்கு உங்கள் கடன் அட்டையில் நீங்கள் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ.1,000 என  வைத்துக் கொள்ளலாம். நீங்கள் ரூ.15 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கியுள்ளீர்கள். ஏற்கெனவே உள்ள நிலுவை ரூ.20 ஆயிரம். நீங்கள் வாங்கியது ரூ.15 ஆயிரத்துக்கு பொருட்கள். செலுத்தியது ரூ.1,000. ஆக நிலுவை ரூ.34 ஆயிரமாகும். உங்கள் கடன் உபயோக அளவு 85 சதவீதமாகும். நீங்கள் பெருமளவு கடன் அட்டையை நம்பியிருப்பதாக தெரியவரும்.

இது உங்களது கடன் மதிப்பீட்டை சரித்துவிடும். குறைந்த மதிப்பீடு கொண்டிருப்பதால் கடன் வழங்குவதில் பாதக அம்சங்கள் அதிகம் உள்ளவர்கள் பட்டியலில் நீங்கள் சேர்ந்துவிடுவீர்கள். அட்டைக்கான குறைந்தபட்ச தொகையை செலுத்துவதால் மாதம் தோறும் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியிருக்கும். குறிப்பிட்ட தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்திவிட்டால், அந்தத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வங்கி வட்டி கணக்கிடும்.

50 நாட்களுக்குப் பிறகு உள்ள கடன்

தொகைக்கு 1.5 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரை வட்டி கணக்கிடப்படும். இது ஆண்டுக்கு 42 சதவீதமாகும். வட்டித் தொகையானது எந்த நாளில் பொருள் வாங்கப்பட்டதோ அந்த நாளிலிருந்தே கணக்கிடப்படும். 

ரூ.10 ஆயிரம் ரூபாய் உங்கள் கடன் அட்டையில் நிலுவையாக உள்ளது. இதற்கு மாதந்தோறும் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகை ரூ.100 என வைத்துக் கொண்டால், இந்தத் தொகையை கட்டி முடிக்க உங்களுக்கு 8 ஆண்டுகளாகும்.

அதாவது நிலுவைத் தொகைக்கு 5 சதவீதமும், மாதந்தோறும் 3 சதவீத வட்டியும் வசூலிக்கப்படும். நீங்கள் வாங்கியது 10 ஆயிரம். வட்டியாக செலுத்தியது ரூ.11,000. அதாவது நீங்கள் வாங்கிய தொகையை விட 110 சதவீதம் வட்டி கட்டியிருப்பீர்கள்.

குறைந்தபட்ச தொகையை செலுத்தி வந்ததால் உங்களுக்கு அதிகபட்ச வட்டி விதிக்கப்பட்டிருக்கும். இதனால் மாதந்தோறும் அதிகபட்ச கட்டணமாக 2 சதவீதம் முதல் 3 சதவீத வட்டியும் கட்ட வேண்டியிருக்கும்.

மேலும் குறைந்தபட்ச தொகையைச் செலுத்துவதால் அடுத்து நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு வட்டி இல்லா 50 நாள் சலுகை கிடைக்காது. நிலுவைத் தொகை முழுவதையும் செலுத்தினால் மட்டுமே அந்த சலுகை கிடைக்கும்.

உங்கள் கடன் அட்டைக்கு உள்ள வரம்புக்குக் கீழே நீங்கள் புதிதாக பொருட்கள் வாங்கினாலும், ஏற்கெனவே கடன் அட்டையில் நிலுவை இருந்தால் புதிதாக வாங்கிய தொகைக்கு 50 நாள் வட்டியில்லா சலுகை கிடைக்காது.

என்ன செய்யலாம்

கடன் அட்டையில் பொருள்களை வாங்குவதாக இருந்தால், குறிப்பிட்ட காலத்திற்குள் முழுத் தொகையையும் செலுத்துவதாக இருந்தால் மட்டுமே வாங்க வேண்டும். ஒரு வேளை உங்களால் திரும்ப செலுத்த முடியாது என்று கருதும்பட்சத்தில் கடன் அட்டையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வேறு வழிகளை ஆராயுங்கள்.

வேறுபல நிதி நிறுவனங்கள் மிகக் குறைந்த வட்டிக்கு பணம் தருகின்றன. கடன் அட்டைக்கு விதிக்கப்படும் அபராத வட்டியை விட இவை குறைவானவையே. கடன் அட்டை பயன்படுத்துவதை தவிர்ப்பதே புத்திசாலித்தனம். ஜீரோ பர்சென்ட் வட்டி என்ற மாய வார்த்தைகளை நம்பி, உள்ளீடான கட்டண வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

சத்யா சொன்டானம்

satya.sontanam@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x