செவ்வாய் வறண்டது ஏன்: விடை தருமா மங்கள்யான்?

செவ்வாய் வறண்டது ஏன்: விடை தருமா மங்கள்யான்?
Updated on
2 min read

இந்தியாவின் செவ்வாய் ஆய்வுத் திட்டத்திற்கு உண்மையான பெயர் மார்ஸ் ஆர்பிட்டர் மிஷன் (Mars orbiter mission - MOM) என்பதே. மங்கள்யான் என்பது செல்லப் பெயர்.

# இந்திய விண்கலம் செவ்வாயை 3.2 நாட்களுக்கு ஒரு முறை சுற்றிவரும்.

# அமெரிக்க மேவன் விண்கலத் திட்டத்துக்கு ஆன செலவில் பத்தில் ஒரு பங்கில் இஸ்ரோ செவ்வாயை அடைந்தது உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

# செவ்வாயின் பாதையில் புகும்போது மங்கள்யான் விண்கலம் செவ்வாயால் மறைக்கப்பட்டு இருந்தது. எனவே, முக்கிய நிர்ணய இயக்கங்கள் நடைபெறும்போது பூமியோடு தொடர்பில்லாமல், சுயமாகவே இயங்கி சாதனை படைத்துள்ளது.

# செவ்வாயை நெருங்கிய இந்திய விண்கலத்தை அதன் பாதையில் புகுத்திய எல்.ஏ.எம் எனும் திரவ நெக்கி இன்ஜின் 440 நியூட்டன் ஆற்றல் திறன் கொண்டது. இந்த இன்ஜினைக் கொண்டு இஸ்ரோ இதுவரை 26 புவி இணக்கப்பாதை (geo stationary) செயற்கைகோள்களை, அவற்றின் நிலைக்கு நெக்கியுள்ளது. சந்திரயான் விண்கலத்தையும் நிலவுக்கு எடுத்து சென்றதும் இந்த இன்ஜின்தான். இது முழுக்க முழுக்க இந்தியத் தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு.

# ஏனைய நாடுகள் எல்லாம் அதிகத் திறம் வாய்ந்த ராக்கெட்டைப் பயன்படுத்தித்தான் விண்கலங்களை நீண்டதூர விண்வெளி பயணத்துக்கு அனுப்பியுள்ளன. ஆனால், அவற்றில் பத்தில் ஒரு பங்கு ஆற்றல் மட்டுமே உடைய பி.எஸ்.எல்.வியைக் கொண்டு நூதனமான முறையில் இஸ்ரோ நிலவையும் செவ்வாயையும் அடைந்து புதிய சாதனை படைத்துள்ளது.

# தற்போது செவ்வாயை அடைந்துள்ள இந்திய விண்கலம் மார்ஸ் ஆர்பிட்டர் உடன், ஏற்கெனவே செவ்வாயைச் சுற்றிவரும் அமெரிக்க மேவன் விண்கலம், மார்ஸ் ஒடிஸி, எம்.ஆர்.ஒ. எனும் மார்ஸ் ரேகோன்னைசன்ஸ், ஐரோப்பிய மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகிய நான்கு விண்கலங்களும் செவ்வாயை வலம் வரும்.

இது தவிர செவ்வாயின் தரையில் இறங்கி தானியங்கி மோட்டார் வாகன உதவியோடு அதன் நிலப்பரப்பில் ஆராய்ச்சி செய்யும் அமெரிக்காவின் ஆபர்சுனிட்டி, கியூரியாசிட்டியுடன் இதுவும் செவ்வாயை ஆராய்ச்சி செய்யும். ஆக மொத்தம் இந்திய விண்கலத்தை சேர்த்து ஐந்து விண்கலங்கள், தரையில் இறங்கி ஆராயும் இரண்டு ரோவர்கள் என மொத்தம் ஏழு விண்கலங்கள் செவ்வாயை ஒரே நேரத்தில் ஆராயும்.

# செவ்வாய்க்கு அனுப்பப்படும் விண்கல திட்டங்கள் நான்கு வகைப்படும். முதலாவது செவ்வாய்க்கு அருகே பறந்து செல்லும் பிளை-பை (Flyby) விண்கலங்கள், இரண்டாவது செவ்வாயைச் சுற்றி செயற்கைக்கோள் போல சுற்றிவரும் ஆர்பிட்டர்கள் (orbiter), மூன்றாவது செவ்வாயில் தரையிறங்கும் விண்கலங்கள் (lander), நான்காவது தரையிறங்கும் தாய் விண்கலத்திலிருந்து கங்காரு வயிற்றில் உள்ள குட்டி போல செல்லும் ரோபோ கார் ரோவர் (rover).

# சோவியத் யூனியன் அனுப்பிய மார்ஸ் 1 என்ற விண்கலம்தான் செவ்வாயை அடைந்த முதல் விண்கலம். 1971-ல் செவ்வாயை அடைந்த அமெரிக்க விண்கலம் மரைனர் 9 தான் செவ்வாயை அடைந்து, அதன் செயற்கைக்கோள் போல சுற்றிவந்த முதல் ஆர்பிட்டர் திட்டம். 1971-ல் சோவியத் யூனியன் அனுப்பிய மார்ஸ் 2, மார்ஸ் 3 ஆகிய இரண்டு விண்கலங்கள்தான் செவ்வாயில் முதலில் தரையிறங்கிய விண்கலங்கள்.

# செவ்வாயில் ஒரு நாள் என்பது ‘சோல்' என அழைக்கப்படும். இது 24 மணி, 39 நிமிடம், 35 விநாடி கொண்டது.

# பூமியை போல செவ்வாயின் அச்சும் 25.2 டிகிரி சாய்ந்து இருப்பதால் செவ்வாயிலும் பருவ காலங்கள் உண்டு.

# 1877-ல் ஹால் (Hall) என்பவரால் செவ்வாயின் இரண்டு நிலவுகள் - போபோஸ் (அச்சம் - Phobos), டிமோஸ் (பதைபதைப்பு - Deimos) கண்டுபிடிக்கப்பட்டன. இரண்டும் ஒழுங்கற்ற வடிவம் கொண்டவை.

# ஒரு காலத்தில் செவ்வாயில் நீர் இருந்திருக்கிறது. கடல், ஏரி, நதி, ஓடை என செவ்வாயின் தரைப் பரப்பில் நீர் ஓடியிருக்கிறது. அதேபோல அதன் வளிமண்டலமும் அடர்த்தியாக இருந்தது. அப்படி இருந்த செவ்வாய் இன்றைக்கு பெயருக்கு வளிமண்டலமும், நீரே இல்லா பாலைவனமாகவும் மாறியது எப்படி? இது இன்னமும் விளங்காத புதிர்.

# செவ்வாய்க்கு சென்றுள்ள விண்கலங்கள் தமது நுண்ணிய ஆய்வின் மூலம் ஒரு காலத்தில் செவ்வாயின் தரை பரப்பில் நீர் பெருகி ஓடிய, ஆனால் இன்றைக்கு வறண்டுவிட்ட, பண்டைய நதிகள், கால்வாய்கள், ஓடைகளின் தடயங்களை கண்டுபிடித்துள்ளன. ஆனால், இன்று செவ்வாயின் தரைப் பகுதி வறண்ட, குளிர் மிகுந்த பாலைவனம்.

கட்டுரையாளர்,
புதுடெல்லியில் உள்ள விஞ்ஞான் பிரசார் நிறுவனத்தின் விஞ்ஞானி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in