Last Updated : 08 Jun, 2019 10:20 AM

Published : 08 Jun 2019 10:20 AM
Last Updated : 08 Jun 2019 10:20 AM

காயமே இது மெய்யடா 36: அந்த 3 நாட்கள்

பூப்பெய்தல் தொடங்கி ஒவ்வொரு 28 நாட்களுக்கும் ஒருமுறை உதிரப் போக்கு ஏற்படுகிறது. பரவலாக உதிரப் போக்கு என்று சொல்லப்பட்டாலும் அந்நிகழ்வில் வெளியேறுவது உதிரம் மட்டுமல்லாமல்; கருக்கொள்ளத் தயாராக இருந்து காலாவதியான சினை முட்டைகளும்தாம்.

பாலுறவின்போது வெளிப்படத் தயாராக இருக்கும் சினை முட்டைகள் வெளிப்படுவதற்கான வாய்ப்புக் கிடைக்காதபோது, பருவம் முடிந்த 28-ம்

நாளில் கலைந்து வெளியேறிவிடுகின்றன. அவ்வாறு வெளியேறும்போது, அடுத்த பருவத்தில் கருக்கொள்ள நேர்ந்தால் அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக உதிரத்தையும் உடல் தூய்மைப்படுத்திக்கொள்கிறது.

சீரற்ற உதிரப்போக்கு

28 நாட்களுக்கு ஒருமுறை வெளியாகும் உதிரப்போக்கு, சுரப்புகள் சீராகச் சுரக்காததாலும், உடலிலிருந்து வெளியேற்றுவதற்குப் போதுமான ரத்தம் இல்லாததாலும் உரிய நாட்களில் வெளியாவதில்லை. சிலருக்கு உதிரப் போக்காக இல்லாமல் வெறும் நீராக (வெள்ளைப்படுதல்) மட்டுமே போக்காகிறது. அளவுக்குக் கூடுதலாக ரத்தம் இருப்பவர்களுக்கு மிகைப் போக்கு ஏற்பட்டு பெரும் உபாதையாக இருக்கிறது.

சில மாதங்கள் தொடர்ந்து மிகையாகச் செல்லும் உதிரப்போக்கு அடுத்த சில மாதங்களில்  இறுக்கமுற்றுத் திட்டுத்திட்டாக வெளிப்படுகிறது. உடலின் குளிர்ச்சி. வெப்பம் சீராக இல்லாத போதும், வேலை, கல்வி, குடும்பம் சார்ந்த மன அழுத்தம் அதிகரிக்கும் நிலையிலும் உதிரப்போக்கு சீரில்லாமல் நிகழும்.

முதல் குழந்தை ஈன்ற பின்னர் ஏற்படும் உதிரப்போக்கின் சீரற்ற தன்மை குறித்துப் பிறகு பார்க்கலாம். ஆனால், சினை முட்டை விந்தணுவைச் சுமக்கும் முழுமையான தகுதிபெறும் 21 வயதுக்கு முன்னரே பெண்களுக்கு உதிரப் போக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது. கால முன் – பின் மாற்றம், கூடுதல் போக்கு, திட்டுத் திட்டாக வெளிப்படுதல், வெள்ளைப்படுதல், உதிரப்போக்கு தொடங்கும் ஓரிரு நாட்களுக்கு முன்பிருந்தே கடுமையான இடுப்பு வலி, முட்டி வலி, கெண்டைக்கால் நரம்பு இழுப்பு போன்ற எண்ணற்ற தொல்லைகள் ஏற்படுகின்றன. சில பெண்களுக்கு 21 வயதுக்குள்ளேயே கருப்பையில் கட்டி தோன்றுவதும் உண்டு.

ஊட்டம் கொடுத்த முன்னோர்

உதிரப் போக்கானது மலம், சிறுநீர் கழிப்பதுபோல இயல்பாக நடந்தேற வேண்டிய நிகழ்வாகும். இரண்டு தலைமுறைக்கு முன்னர்வரை பெண், பூப்பெய்தியது முதல், முதல் குழந்தையை ஈன்றெடுக்கும் நாள்வரை தாய், மூத்த உறவுக்காரர்களால் சிறப்பாகக் கவனிக்கப்படுபவளாக இருந்தாள். பூப்பெய்திய ஆரம்ப மாதங்களில் உதிரப்போக்கை ஈடுசெய்ய அரைவேக்காட்டில் அவித்த நாட்டுக் கோழி முட்டையுடன் நல்லெண்ணெய்யை அப்படியே குடிக்கக் கொடுப்பார்கள்.

அதேபோல வறுத்து அரைத்த கறுப்பு உளுந்து மாவை வெல்லத்தூளுடன் வெந்நீரில் பிசைந்து கொடுப்பார்கள். இவை ஊட்டச்சத்து மிகுந்த உணவு. உளுந்தங் களியை நல்லெண்ணெய்யில் தொட்டு உண்ணக் கொடுப்பார்கள். பச்சைத் தானியக் கதிர்களை வாட்டி இடித்து அவலாக்கியும் கொடுப்பதுண்டு.

இவை எளிய பண்டங்களாக இருந்தாலும் நுண்ணுயிர்ச் சத்துக்களும், தாதுச் சத்துக்களும் நிரம்பியவை. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் நுண்ணுயிரும் தாதுக்களும் நிரம்பிய உணவைத் தேர்ந்து உண்பதற்கான சாத்தியம் அறவே அருகிவிட்டது. எனவே, பூப்பெய்தல் தொடங்கி பிந்தைய ஆண்டுகளில் உணவின் மீதான வேட்கை எப்போதும் பற்றாக்குறையாகவே நீடிக்கிறது.

அதை ஈடுசெய்ய அதீதச் சுவை உணவையும் அளவுக்கு அதிகமான உணவையும் உண்ண நேர்வதால் உடல் பருமன் ஏற்பட்டு விடுகிறது. உடல்பருமன் சுரப்புகளில் மேலும் குளறுபடிகளை உருவாக்கிவிடுகிறது.

உணவும் ஓய்வும்

இதைத் தவிர்ப்பதற்கு இன்றைக்குச் சாத்தியமான எளிய வழி பச்சைக் கீரை வகைகளைச் சாறாக வடித்தும், ரசமாக (சூப்பாக) காய்ச்சியும் குடிப்பதாகும். எடுத்துக்காட்டாகக் கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை மூன்றையும் கைப்பிடியளவு எடுத்து சுமார் 150 மில்லி நீர் விட்டு அரைத்து வடிகட்டி தேன் கலந்தோ உப்பு – மிளகுத் தூள் கலந்தோ குடிக்கலாம். இது உடனடியாக உதிரத்தின் அளவையும், உதிரத்தில் சிவப்பணு அளவையும் கூட்ட உதவும்.

அதேபோல கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களை ஊறவைத்து அரைத்துப் பாலாகக் காய்ச்சிக் குடிக்கலாம். இதை உலர்ந்த மாவாக அரைத்துக் கூழாகக் காய்ச்சிக் குடிப்பது அவ்வளவு நல்ல பலனைத் தராது. மாதுளை, பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை உண்டால் உதிரப்போக்கு அதிகரித்து தொல்லை அதிகமாகும் என்பது ஒரு தவறான நம்பிக்கை.

உணவில் கவனம் செலுத்துவது போக, மன அழுத்தத்துக்கு ஆட்படாத சூழலை உருவாக்கிக்கொள்வதும் அவசியம். வேலைப்பளுவைக் குறைத்துக்கொள்வதும் மிகவும் முக்கியம்.

வரும்முன் காப்போம்

உதிரப்போக்கானது வெறும் மாதாந்திர நிகழ்வு மட்டுமல்ல. அது சுரப்புகளுடனும் கருக் கொள்வதோடும் தொடர்புடையது என்ற ஒருங்கிணைந்த உடலியல் பார்வை இன்றைய தலைமுறைக்கு இல்லை. விசேஷ நாட்களில், வெளியூர் செல்லும் நாட்களில், தேர்வுக் காலத்தில் உதிரப்போக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக உடலை இயந்திரமாகப் பாவித்து அதைத் தடுப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்கின்றனர்.

வேறு சிலர், தள்ளிப் போவதால் ஏதும் பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் உதிரப் போக்கை ஏற்படுத்த மாத்திரை எடுக்கின்றனர். உதிரப்போக்கைத் தடுக்கவும், ஏற்படுத்தவும் மேற்கொள்ளும் முயற்சிகள்  பிற்காலத்தில் குழந்தைப் பேற்றுச் சிக்கலை உருவாக்கும் என்பதோடு உடனடி எதிர்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

பேறுகாலத்தில் கவனத்தில் கொள்ள வேண்டிய பராமரிப்பு குறித்தும் அக்காலத்தில் செய்யும் தவறுகளின் பின்விளைவுகள் குறித்தும் தொடர்ந்து பார்ப்போம்.

(தொடரும்...)
கட்டுரையாளர், உடல்நல எழுத்தாளர்
தொடர்புக்கு: kavipoppu@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x