Published : 08 Jun 2019 10:25 AM
Last Updated : 08 Jun 2019 10:25 AM

ஸ்மார்ட் பூட்டுகள்

காலம் மாறுகிறது. அதற்கேற்றார்போல் நமது தேவைகளும் மாறுகிறது. நம் அன்றாடத் தேவைகளுக்குப் பெரும்பாலும் உடல் உழைப்பையே நம்பி இருந்தது நமது முந்தைய தலைமுறை. ஆனால் இன்றைக்கு மின்சார, மின்னணு இயந்திரங்களைச் சார்ந்துதான் நம் அன்றாட வாழ்க்கை இருக்கிறது.

இப்போது அதிலும் தானாக இயங்கக்கூடிய ஸ்மார்ட் தொழில் நுட்பம் அறிமுகமாகியிருக்கிறது. செல்வந்தர்கள் மட்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்த இந்தத் தொழில்நுட்பம் இப்போது அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிமை ஆகியுள்ளது. அறிவியல் வளர்ச்சியில் ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் ஒரு படைப்பு கேமரா, லாக் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்ட அழைப்புமணி.

நெஸ்ட் தரும் அழைப்பு

நமது வீடுகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வீட்டுக்கு வருவோரை வீட்டுக்கு உள்ளிருந்தே கேமரா மானிட்டர் மூலம் பார்த்து அறியலாம், இதில் இன்னும் பல வசதிகளுடன் வந்திருப்பதுதான், அழைப்புமணியுடன் கேமரா. இதை வைஃபை (WiFi) மூலம் நம் செல்போனுடன் அல்லது கணினியுடன் இணைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வீட்டுக்கு வருபவர் அழைப்புமணியை அழுத்தியதும் நமது செல்போனுக்குத் தகவல் கிடைக்கும்.

நாம் வேலையாக இருக்கிறோம் எனில் நாம் வாய்ஸ் மெஸெஜ் மூலம் வந்திருப்பவருடன் பேச முடியும். உதாரணமாக நாம் வந்துகொண்டிருக்கிறோம் என்றால் வந்திருப்பவர்களைக் காத்திருக்கச் சொல்லலாம். இல்லையெனில் வரத் தாமதமாகும் எனத் தெரிவிக்க முடியும். இதில் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா மிகத் துள்ளியமாக வெளியில் நடப்பதைக் காண்பிக்கும். எந்த விதமான வெப்பநிலையிலும் சரியான காட்சிப் பதிவை தரக் கூடியது. மேலும்

24 x 7 பதிவை ‘க்ளவுட்’ எனப்படும் முறையில் பதிவேற்றும். அதனால் எப்போது வேண்டுமானாலும் நாம் ஒளிப்பதிவைக் காணலாம். இந்த அழைப்புமணியை கூகுள் ஸ்மார்ட்டுடன் இணைத்தால் ப்ளு டூத் ஒலி பெருக்கிமூலம் நமக்குக் கேட்கும். இதில் உள்ள ஃபேஸ் ரெகக்னைஸரில் பதிந்தால், அது வந்திருப்பது யார் என்று கூறும். நாம் வீட்டில் இல்லாதபோது வருபவர் பற்றியும் இரவில் உள்ள நடமாட்டங்களையும் நாம் அறியலாம்.

ஸ்மார்ட் லாக் கதவுகள்

இந்நிறுவனத்தில் அழைப்புமணியுடன் வரும் ஸ்மார்ட் லாக் நமது வீட்டுக்குக் கூடுதல் பாதுகாப்பை அளிக்கிறது. இதை ஏற்கெனவே கதவில் இருக்கும் பூட்டுடன் கூடுதலாகப் பொருத்தலாம். பொருத்துவது மிகவும் எளிது. இதற்குச் சாவிகள் தேவையில்லை. விருந்தினரோ அல்லது வேலைக்கு ஆட்களோ வந்திருந்தால் நாம் அலுவலகத்திலிருந்தோ, அங்காடிகளில் இருந்தோ கதவை ரகசிய குறியீடு மூலம் திறக்கலாம். நாம் வெளியூர் சென்றிருந்தாலும் வீட்டைப்பூட்டினோமா, இல்லையா? என்ற கவலை தேவையில்லை அதை நம் செல்போன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

யாரேனும் தவறான குறியீட்டின் மூலம் இந்தப் பூட்டைத் திறக்க முயன்றால் உடனே நமது செல்போனுக்கும் நாம் பதிவுசெய்துவைத்திருக்கும் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கும் குறுந்தகவல் பரிமாறப்படும். இந்தியாவில் காத்ரெஜ் நிறுவனமும் இந்த ஸ்மார்ட் கருவிகள் தயாரிப்பில் களமிறங்கி உள்ளது, இதன் தயாரிப்பில் வந்துள்ள வீட்டுக் காவல் கருவிகள் திருடர்கள் உள்நுழைந்தவுடன் அபாய ஒலி எழுப்பி தகவலை அளிக்கும். யாராவது நாம் இருக்கும்போது உள்நுழைந்தால் உடனே தானியங்கியாக நம்மை உரிய பாதுகாப்பு அதிகாரிகளுடன் நமது கருவிகள் இணைக்கும்.

சாவிகள் இனி இல்லை

இது தவிர நாம் அன்றாடம் உபயோகிக்கும் பூட்டுகள்கூட இப்போது ஸ்மார்ட் ஆகிவிட்டது. இந்த வகைப் பூட்டுகள் நமது கைரேகை மூலம் மட்டுமே திறக்கக்கூடியது. நாம் முதலாம் நபர் இரண்டாம் நபர் எனப் பத்து நபர்கள் வரை இதில் பதிவுகளைச் செய்ய முடியும். இவ்வாறு பதிந்தவர்கள் அவர் தம் கைவிரல் ரேகையை வைத்தால் உடன் பூட்டு திறக்கும்.

இதில் உள்ள பயொமெட்ரிக் சென்ஸார் மூலம் ரேகையை ஒப்பிட்டுச் சரிபார்த்து பின் பூட்டு திறக்கப்படும். இந்த வகையான பூட்டுகள் இரண்டு வருடத்துக்குச் செயல்படும் திறன் கொண்டவை, 2500 முறை ரேகைப்பதிவை எற்கக்கூடியவை, யு.எஸ்.பி. இணைப்பின் மூலம் மின்னேற்றம் செய்யலாம்.

ஆகவே இனி நாம் கவலையின்றி வீட்டைப் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்துவிடலாம். அது மட்டுமில்லாமல் காவல் துறைக்குப் பெரும் சவாலாக இருக்கும் பல கில்லாடிகள் எளிதில் மாட்டிக் கொள்ளவும் வாய்ப்புண்டு. இந்த ஸ்மார்ட் பாதுகாப்பு பூட்டுகள் ஸ்மார்ட் திருடர்களுக்குச் சவால் விடும்.

- எம்.ராமசாமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x