Published : 25 Jun 2019 10:59 AM
Last Updated : 25 Jun 2019 10:59 AM

அந்த நாள் 38: தந்தையை சிறைப்பிடித்த தனயன்

“வட இந்தியாவுல முகலாயர்கள் ஆட்சி செலுத்த முடிஞ்சாலும் தென்னிந்தியாவுல அவங்களால ஆட்சி செலுத்த முடியலயே, ஏன்? அப்ப யாரு தமிழ்நாட்டுல ஆட்சி செஞ்சாங்க, குழலி?”

“நீ சொல்றது உண்மைதான் செழியன். முகலாயர்கள் தென்னிந்தியாவுல ஆட்சி செலுத்த முடியல. அவங்களுக்கு முன்னாடியே விஜயநகர ஆட்சியாளர்கள் தென்னிந்தியாவைக் கட்டுப்பாட்டுல வைச்சிருந்தாங்க. தமிழகத்துலயும் அவங்க ஆட்சிதான் அப்போ நடந்துக்கிட்டிருந்துச்சு. அதை அவ்வளவு சுருக்கமா விவரிச்சுட முடியாது, செழியன்”

“சரி விரிவா இல்லாட்டியும், கொஞ்சம் புரியுற மாதிரி விளக்கமாத்தான் சொல்லேன்”

“வரலாறு முழுக்க வட இந்திய ஆட்சியாளர்களிடம் இருந்து தமிழகம் விலகியிருந்தாலும், சில நேரம் வட இந்தியாவை ஆட்சி செய்தவர்களின் ஆளுகையின் கீழும் தமிழகம் இருந்திருக்கு. பொ.ஆ. 14-ம் நூற்றாண்டுல பாண்டியப் பேரரசும் சோழப் பேரரசும் நலிவடைஞ்சு போயிருந்துச்சு.

அந்த நிலைலதான் டில்லி சுல்தான்களின் ஆட்சியின்கீழ் மதுரை வந்துச்சு. தொடக்கத்துல டெல்லி சுல்தானின் பிரதிநிதி ஆட்சி செஞ்சார், அப்புறம் அந்தப் பிரதிநிதியே நேரடியாக ஆட்சி செலுத்தவும் தொடங்கினாரு.”

“இஸ்லாமிய ஆட்சியின்கீழ் தமிழகம் இருந்திருக்கா? இதெல்லாம் எனக்குத் தெரியவேயில்லை”

“அந்த ஆட்சி ரொம்ப காலத்துக்குத் தொடரலை. அதிலிருந்து விஜயநகர ஆட்சி, நாயக்கர் ஆட்சிக்குத் தமிழகம் நகர்ந்த கதை பல திருப்பங்கள் நிறைஞ்சது”

“நிஜமாவே திருப்பங்கள் நிறைஞ்சதா?”

“பொ.ஆ. 1336-ல் துங்கபத்திரை ஆற்றங்கரைல விஜய நகரப் பேரரசு நிறுவப்பட்டுச்சு. முதலாம் ஹரிஹரரின் பேரன் குமாரகம்பணர் கி.பி. 1363-ல தமிழகத்தோட தொண்டை மண்டலம் மேல தாக்குதல் தொடுத்து, சம்புவராயர்கிட்ட இருந்து கைப்பற்றினார். தொடர்ந்து மதுரைல இருந்த சுல்தான் ஆட்சியையும் அவர் வீழ்த்தினார்.

இதன் காரணமாக பாண்டிய நாடு, சோழ நாடு, தொண்டை நாடு, கொங்குப் பகுதி என எல்லாமே விஜயநகர ஆட்சியின்கீழ் வந்திடுச்சு. அதுக்கப்புறம் கிருஷ்ணதேவராயர் காலம்வரை தமிழகப் பகுதிகளை ஆட்சி செஞ்ச சிற்றரசர்கள் ஒண்ணு விஜயநகரப் பேரரசை ஆதரிச்சாங்க. இல்லேன்னா விஜயநகரப் பேரரசோட படைத்தலைவர்கள் தமிழகப் பகுதிகளை ஆட்சி செஞ்சாங்க.”

“நீ சொன்னதுல ஒரு திருப்பம்கூட இல்லையே?”

“கொஞ்சம் பொறுமையா இரு. கிருஷ்ணதேவராயர் வந்ததுக்கப்புறமா எத்தனை திருப்பங்கள் நடந்திருக்கு, தெரியுமா?”

“விஜயநகரப் பேரரசுன்னு சொன்னாலே கிருஷ்ணதேவராயர் தானே ஞாபகத்துக்கு வருவார். அவர் வந்து என்ன செஞ்சார்?”

“கிருஷ்ணதேவராயர் தமிழகத்தை நான்கு மண்டலங்களாகப் பிரிச்சார். அப்புறம் இன்னைக்கு மாநிலங்களுக்கு ஆளுநரை நியமிக்கிறது மாதிரி, மகாமண்டலேஸ்வரர்களை நியமிச்சார். பாண்டிய நாட்டுப் பகுதிக்கு நாகம நாயக்கரும், சோழ நாட்டுக்கு நரச நாயக்கரும் ஆளுநர்கள் ஆக்கப்பட்டாங்க.

அப்போது சிற்றரசர்களாகச் சுருங்கிப் போயிருந்த பழையறை சோழர், மதுரை பாண்டியர் இடையே அப்பப்ப மோதல் நடந்துக்கிட்டிருந்துச்சு. அதனாலதான் வலுவான நாகம நாயக்கரை பாண்டியப் பகுதிக்கு கிருஷ்ணதேவராயர் ஆளுநரா ஆக்கியிருந்தார்.”

“திருப்பம், திருப்பம்?”

“இதோ வந்திடுச்சு. வீரசேகர சோழன் பாண்டிய நாட்டைத் தாக்கிக் கைப்பற்றினாரு. அதனால சந்திரசேகரப் பாண்டியன் கிருஷ்ணதேவராயர்கிட்ட போய் முறையிட்டார். பாண்டியனுக்கு உதவ பெரும் படையுடன் நாகம நாயக்கரை கிருஷ்ண தேவராயர் அனுப்பினார். திட்டமிட்டப்படி சோழனை நாகம நாயக்கர் வீழ்த்திட்டார். ஆனா ஆட்சிப் பகுதியை பாண்டியன்கிட்ட கொடுக்காம தானே வெச்சுக்கிட்டார்.”

“ஓ அப்ப கிருஷ்ண தேவராயர் என்ன செஞ்சார்?”

“பேரரசர்னா சும்மாவா, அவருக்கு ரொம்பக் கோபம் வந்துச்சு. நாகம நாயக்கரின் மகன் விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ண தேவராயரின் அடைப்பக்காரராக (வெற்றிலை பாக்கு மடித்துக் கொடுப்பவர்) இருந்தார். நாகம நாயக்கரை வீழ்த்தி, சிறைப்பிடித்து வரும்படி விஸ்வநாதனுக்குப் பேரரசர் கட்டளையிட்டார்.

நாகம நாயக்கர் தன் அப்பாவாக இருந்தும், மன்னர் சொன்னபடியே சிறைப்பிடித்து வந்தார் விஸ்வநாத நாயக்கர். இதனால மகிழ்ந்துபோன கிருஷ்ணதேவராயர் விஸ்வநாத நாயக்கரையே பாண்டிய நாட்டோட புது ஆளுநராக நியமிச்சார்.”

“வரலாற்றுக் கதைகள் சினிமாவைத் தோற்கடிச்சுடும் போலிருக்கே, குழலி”

“அந்த விஸ்வநாத நாயக்கர் வழி வந்தவங்கதான் மதுரையை ஆண்ட புகழ்பெற்ற நாயக்க வம்சத்தினர். 1529-ல விஸ்வநாத நாயக்கர் ஆட்சிப் பொறுப்பேற்றார். அந்த வம்சத்தோட ஆட்சி 200 ஆண்டுகளுக்கு நீடிச்சது, செழியன்”

யாருக்கு உதவும்?

போட்டித் தேர்வுகளுக்கான வரலாற்றுப் பகுதி, 7-ம் வகுப்பு வரலாற்றுப் பாடம்

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x