Published : 22 Jun 2019 10:38 am

Updated : 22 Jun 2019 10:38 am

 

Published : 22 Jun 2019 10:38 AM
Last Updated : 22 Jun 2019 10:38 AM

கட்டிடக்கலை சிக்கல்களும் சவால்களும்

கட்டிடக்கலை என்பதை வெறும் வீடு, வாழ்வதற்கு ஓர் இடம், கட்டிடங்கள் என்பது மட்டும்தான் பொதுவான புரிதல். ஆனால், கட்டிடக்கலை என்பது அத்துடன் முடிந்துவிடுகிறதா? நிச்சயமாக இல்லை என்கிறார் ஜெர்மனியைச் சேர்ந்த நிபுணர் தத்யானா.

21-ம் நூற்றாண்டில் சகல துறைகளும் பல்வேறு புதுமையான மாற்றங்களுக்கு உள்ளாகி வருகின்றன. நீண்ட வரலாற்று மரபைக் கொண்ட கட்டிடக்கலையிலும் பல்வேறு புதுமைகள் தொடர்ச்சியாக முயலப்பட்டும் நடைமுறைபடுத்தப்பட்டும் வருகின்றன. பெருகி வரும் மக்கள்தொகை, கட்டுப்பாடற்ற நகரமயமாக்கம், குறைந்து வரும் வெளி, தண்ணீர் பற்றாக்குறை என கட்டுமானம், கட்டிடக்கலை சார்ந்த சிக்கல்கள் வாழ்வாதாரப் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளன.


மரபிலிருந்து மாறுபட்டு...

கட்டிடக்கலையின் சமகால சிக்கல்கள், சவால்கள் குறித்து ஜெர்மனியைச் சேர்ந்த கட்டிடக்கலை நிபுணரும் கல்வியாளருமான தத்யானா ஷ்னேய்டர் சென்னை கதே இன்ஸ்டிடியூட்டில் கடந்த வாரம் உரையாற்றினார்.

ஜெர்மனியின் பிரான்ஸ்வெய்க் பல்கலைக்கழகத்தில் வரலாறு, கட்டிடக்கலை கோட்பாடு நிறுவனத்தின் தலைவராக தத்யானா செயல்பட்டுவருகிறார். ‘ஸ்பேஷியல் ஏஜென்சி’ என்ற நிறுவனத்தின் மூலம் மரபான கட்டிடக்கலை வழிமுறைகளில் இருந்து முற்றிலும் விலகி, விரிவான மாற்று வழிகளில் கட்டிடக்கலையை பயிற்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

“கட்டிடக்கலை என்பது வெறும் கட்டிடம் சார்ந்தது மட்டுமல்ல. நகரமயமாதல் மிக விரைவாக அதிகரித்துக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், பருவநிலை மாற்றம், சமத்துவமின்மை என பல்வேறு துறைகளின் தாக்கம் கட்டிடக்கலையில் உள்ளது.

கட்டிடக்கலைத் துறை எப்படி இயங்குகிறது, யாரெல்லாம் அதை இயக்குபவர்களாக இருக்கிறார்கள் என்பதிலேயே என்னுடைய ஈடுபாடு உள்ளது; பொருட்கள் மீது அல்லாமல் கட்டிடங்களையும் இடங்களையும் மக்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் ஆர்வம் கொண்டிருக்கிறேன்” என்று கட்டிடக்கலையை தான் அணுகும் விதம் பற்றி தத்யானா பேசத் தொடங்கினார்.

கட்டிடக்கலையின் சமகாலப் பிரச்சினைகள், அவற்றைக் கட்டிடக்கலை நிபுணர்கள் அணுகும் விதம், கட்டிடக்கலையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், அதன் மாணவர்கள் என தத்யானாவின் உரை பல்வேறு விஷயங்களைத் தொட்டுச் சென்றது.

சமகாலச் சிக்கல்கள்

'சூப்பர் மாடர்னிசம்' என்பது நடைமுறையில் இருக்கும் ஒரு வழக்கத்தை விடுத்து புதிதான ஒன்றை இயல்புக்கு மாறாக உருவாக்குவது. ஏற்கெனவே உள்ள பிரச்சினைகளைப் பற்றிய புரிதல், அக்கறை இல்லாமல் உருவாக்கப்படுவது.

ஒரு நகரில் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள துறைகள் கொஞ்சம் கொஞ்சமாக தனியார் வசம் செல்லும்போது, அதுகுறித்து யாரும் கவலை கொள்வதில்லை. இது அனைத்து துறைகளிலும் விளைவுகளை ஏற்படுத்தும்.

விண்ணை முட்டும் வீட்டு விலைகள்; வீட்டு வாடகை; மாசுபட்டுள்ள சுற்றுச்சூழல்; பல்வேறு சமூக – இட சமத்துவமின்மை; திட்டமிடுதலில் உள்ள சிக்கல்கள்; சுற்றுச்சூழல் சீரழிவு; கான்கிரீட், மணல் போன்ற மூலப்பொருட்களின் பயன்பாடு; அரசியல், பெரு முதலாளிகளின் தலையீடு; வணிகமயமாக்கல் எனத் தனியாக ஒரு துறையாக மட்டுமல்லாமல் பல்வேறு துறைகள் ஒன்றோடொன்று இணைந்ததாக கட்டிடக்கலை இருக்கிறது. இந்தச் சிக்கல்கள், சவால்கள் வழி நின்று நவீன கட்டிடக்கலையை அணுக வேண்டுமென தத்யானா பேசினார்.

களச் செயல்பாடு

கட்டிடக்கலையின் சிக்கல்கள், சவால்கள் குறித்து பல்வேறு வகையான தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமாகவும், பயிலரங்குகள், கருத்தரங்குகள் மூலமாகவும் பொதுமக்களிடம் ஸ்பேஷியல் ஏஜென்ஸி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்.

கட்டிடக்கலை கல்வியைப் பொறுத்தவரை கற்பிக்கும் முறையில் மாற்றம், சமூக பொருளாதாரக் காரணிகளைப் புரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்துவது, வகுப்பறையில் இருந்து வெளியேறி நேரடியாக களத்துக்குச் சென்று மக்களிடம் உரையாடுதல் போன்ற விஷயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் தத்யானா வலியுறுத்தினார்.


கட்டிடக்கலைதுமையான மாற்றங்கள்மரபுசமகாலச் சிக்கல்கள்களச் செயல்பாடு

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x