

பொறியியல் பாடங்களில் கோட்பாடுகளாகவும், விதிகளாகவும் படித்தவை அன்றாட வாழ்க்கையில் எந்தப் பொருளுடன் தொடர்புடையது என்பதை ஃபேஸ்புக்கில் ‘லெட்ஸ் மேக் இன்ஜினியரிங் சிம்பிள்’என்ற பக்கத்தில் பதிவுசெய்யும் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பிரேமானந்த் சேதுராஜன். இவர் தமிழ்நாட்டில் பொறியியல் பயின்று, அமெரிக்காவில் பணிபுரிபவர். “என்னோட வேலையில சின்ன மாற்றம் வந்தபோதுதான் பயன்பாட்டுடன் கூடிய கல்வி எவ்வளவு அவசியங்கிறது எனக்குப் புரிந்தது. அதனாலதான் தமிழ்மொழியில், எல்லாரும் எளிதாகப் புரிஞ்சிக்கிற மாதிரி தினமும் நாம் பயன்படுத்தும் பொருட்களின் அடிப்படையில் இன்ஜினீயரிங் தொழில்நுட்பத்தை விளக்கும் வீடியோக்களை பதிவேற்றுகிறேன்” என்கிறார் பிரேமானந்த்.
‘ஐஸ் பக்கெட் சாலஞ்’ முதல் ‘ரைஸ் பக்கெட் சாலஞ்’ வரை இன்று ஃபேஸ்புக் மூலம் அதிக மக்களை சென்றடையும் பட்டியலில், கல்லூரி மாணவர்களிடையே இவருடைய ‘லெட்ஸ் மேக் இன்ஜினியரிங் சிம்பிள்’ பக்கமும் குறுகிய காலத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதீத வரவேற்பு
பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்த தெம்பில் அனைவரும் பயனுரும் வகையில் ஆங்கிலம், தமிழ் இவ்விரண்டு மொழிகளிலும் பல துறைகளிலும் இந்த முயற்சியை மேற்கொள்ளத் திட்டமிட்டிருக்கிறார்.
புதுப்பிக்கப்படும் வரலாறு
பூஜ்ஜியத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே நம்மவர்கள் தான். ஆரியபட்டாவின் காலத்தில் இந்தியர்களுக்குப் பொறியியலிலும், தொழில்நுட்பத்திலும் அதிக நுண்ணறிவு இருந்தது என்பது வரலாற்று உண்மை. மதிப்பெண்ணை மட்டும் குறிக்கோளாக வைத்து படிக்கும் படிப்பு, புதிய கண்டுபிடிப்புகளுக்குத் தடையாக உள்ளதோ! என்ற ஆதங்கம் இவரது ஃபேஸ்புக் பகிர்வுகளில் பிரதிபலிக்கிறது. “இன்றும் வெளிநாட்டவர்களை, வியப்பில் ஆழ்த்தும் கட்டிடக் கலைக்குச் சொந்தக்காரர்கள் நாம். இப்போது கற்கும் கல்வி, சிறந்த தொழிலாளர்களை உருவாக்குகிறதே தவிர அறிவாளிகளை உருவாக்குவதில்லை” என்று ஆதங்கப்படுகிறார் பிரேம்.
புதியதோர் உலகு
“என் புதிய முயற்சிக்குப் பலரும் ஆதரவு தந்துள்ளனர், அவர்களது பங்களிப்பையும் வழங்க முன்வந்துள்ளனர். இதுவே எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளிக்கிறது” என்கிறார் அவர். தனது முயற்சிகள் எதிர்காலத்தில் பயிற்சியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, கல்வி முறையில் மாற்றம் வருமானால் அதுவே தனக்குக் கிடைத்த வெற்றியாக பிரேம் கருதுகிறார்.
ஃபேஸ்புக் பக்கம்>Lets make Engineering simple