Published : 01 Dec 2015 12:09 PM
Last Updated : 01 Dec 2015 12:09 PM

மனசு போல வாழ்க்கை 36: நேசித்துப் பெறும் தோல்வி

உலகை இயக்கும் மாபெரும் சக்தி எது என்று என்னைக் கேட்டால் அன்புதான் என்பேன்.

உள் மன அமைதி முதல் உலக அமைதி வரை அனைத்தும் அன்பினால் மட்டுமே சாத்தியம்.

அன்பு குறையும்போது மனதில் வன்மம் வளர்கிறது. அன்பு வற்றிய மனம் தான் பிறர் துயரைப் பார்க்க மறுக்கிறது. அன்பு போதாமைதான் குற்றங்கள் செய்யத் தூண்டுகிறது.

நம் எல்லோரிடத்திலும் அன்பு இருக்கிறது. ஆனால் அது மிகக் குறுகிய வட்டத்தில் பலகீனமாக இயங்குகிறது. அதுவும் நிபந்தனைகளுடன் அளிக்கப்படுகிறது. நம் அன்பு ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால் அது வெறுப்பாக மாறுகிறது. நமக்கு வரும் அன்பு பகிரப்பட்டால் நாம் கொடுக்கும் அன்பு குறைகிறது. ஒரு பக்கம் உள்ள அன்பு இன்னொரு பக்கம் செல்கிறது.

சக்தியின் அடையாளம்

அன்பை நிரூபிக்க மனம் பல விளையாட்டுக்கள் புரிகிறது. அன்பைப் பெறவும் பல வித்தைகள் புரிகிறது. பாதகங்கள் செய்யும்போதெல்லாம் அன்பினால் என்று வசனம் பேச வைக்கிறது. எந்த அன்பு நிஜம் என்று தெரியாமல் பல நேரங்களில் குழம்புகிறது மனம்.

தன்னலம் கருதாமல் பிரதிபலன் எண்ணாமல் பிறர் மீது செலுத்தும் உணர்வுதான் அன்பு. அது பெறுபவரின் தகுதி அல்ல. கொடுப்பவரின் தகுதி. அது கொடுக்கல் வாங்கல் வியாபாரம் அல்ல. அள்ளித் தரும் அளவற்ற சக்தியின் அடையாளம்.

பிள்ளை மீது தாய் உயிரையே வைக்கிறாள். காதலியைக் காதலன் உயிரே என்று அழைக்கிறான். நட்பு தான் உயிரைவிடப் பெரிது என்கிறான். கொள்கைக்கு உயிரைக் கொடுப்பேன் என்று பறைசாற்றுகிறான் தொண்டன். அடிப்படையில் அனைத்தும் அன்பு தானே?

ஆள் பார்த்துதான்

இவ்வளவு சக்தி மிகுந்த அன்பு ஏன் தடைபட்டுப் போகிறது?

இரண்டாம் பிள்ளை வந்தவுடன் முதல் பிள்ளை தனிமையை உணர்கிறது. மகன் மணந்தவுடன் தாய் தனிமைப்படுகிறாள். ஒருதலைக் காதல் என்றால் காதலனோ காதலியோ தனிமையைத் தழுவுகிறார்கள். அன்பைப் பெறும் போராட்டத்தில்தான் வலிகள் ஏற்படுகின்றன.

ஆனால், அன்பைக் கொடுப்பவர்களுக்கு என்றுமே தோல்வியில்லை. நம் அன்பு எத்தனை பரந்து விரிந்துள்ளது என்பதில்தான் நம் மன வளம் அடங்கியுள்ளது.

நம் குழந்தை மீது கொண்டுள்ள அதே அன்பை பிற குழந்தைகள் மீது நம்மால் கொள்ள முடிந்தால் அது தான் அளவற்ற அன்பு. இது யதார்த்தத்தில் நடக்குமா? சாலையில் யாரோ ஒரு பெண் அடிபட்டுக் கிடக்கிறாள் என்றால் அதை ஒரு செய்தியாக மட்டும் உள்வாங்குகிறது மனம். ஆனால், அது தன் பெண் என்று தெரிந்தவுடன் பதைபதைக்கிறது. ஏன் என்றால் ஆள் பார்த்துதான் அன்பு வருகிறது!

ஆனால், சாலையில் அடிபட்டிருக்கும் பெண்ணைத் தன் பெண்ணாக நினைக்க முடிந்தால், அங்கு நிபந்தனையில்லா அளவற்ற அன்பு சுரக்கிறது என்று பொருள். நம் பிள்ளை சாப்பிடாமல் படுத்தால் மனம் பதைபதைக்கிறது. ஆனால், நம் தெருவிலேயே எத்தனை பிள்ளைகள் பசியோடு உறங்குகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கிறதா மனம்? இப்படிப் பிறர் மீது நிஜமான அன்பும் அக்கறையும் கொண்டால் நம்மால் குற்றங்கள் செய்ய இயலாது.

அன்பைத் தின்னும் சுயநலம்

மக்கள் மீது அன்பு கொண்ட அரசியல் தலைவர்கள் மக்கள் பணத்தில் ஊழல் செய்ய மாட்டார்கள். மக்கள் வரிப்பணத்தில் மக்கள் விரோதத் திட்டங்களைச் செயல்படுத்த மாட்டார்கள். ரசிகர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் சினிமாக்காரர்கள் தாங்களே தங்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்க முடியாத வன்முறையான ஆபாசமான சினிமாக்கள் எடுக்க மாட்டார்கள். துன்பம் இழைக்கப்பட்டவர் மீது உண்மையான அன்பிருக்கும் ஊடகக்காரர்கள் துன்புறுத்தும் கேள்விகள் கேட்டு, அவற்றை எழுதி, படமாகக் காட்டி பாதிக்கப்பட்டவர்களைக் காயப்படுத்த மாட்டார்கள். வாடிக்கையாளர்கள் மீது நிஜமான அன்பிருந்தால் வியாபாரிகள் மோசமான பொருட்களை அநியாயமான விலைக்கு விற்க மாட்டார்கள். பிற மனிதர்கள் மீது அன்பிருந்தால் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் வறுமையில் தவிக்கையில் நம்மால் குற்ற உணர்வில்லாமல் மிதமிஞ்சிய சுகபோகங்களை அனுபவிக்க இயலாது.

பிறர் உணர்வுகளைக் கண்டு கொள்ளாமல் செல்வதற்குப் பழகுகையில் அன்பு வற்றத் தொடங்குகிறது. அது அதிக பட்சம் ஓரிருவர்மீதுகூடச் செலுத்த முடியாவண்ணம் பற்றாக்குறை ஆகிறது. சுயநலம் அன்பைத் தின்ன ஆரம்பிக்கிறது. இதுதான் நம்மைச் சமூகத்துக்கு எதிரான மனிதர்களாக மாற்றுகிறது.

‘யாருக்கு என்ன நடந்தாலும் நம் வேலை நடந்தால் சரி’ என்பது பொது விதியாகிறது, பிழைக்கச் சொல்லித்தரும் கல்வி, அன்பைப் போதிக்கத் தவறுகிறது. பிறரை மிதித்துப் பெறும் வெற்றியைவிடப் பிறரை நேசித்துப் பெறும் தோல்வி மகத்தானது என்று அடுத்த தலைமுறைக்காவது சொல்லித் தர வேண்டும்.

அன்பை அள்ளித் தரும் மனம் விரிவடையும். உறுதி பெறும். பொலிவு பெறும்.

அன்பு காட்டுபவர்கள் முகத்தில் உள்ள பரவசக் களிப்பை பாருங்கள். அது ஆயிரம் பாடங்கள் சொல்லும். செடிக்கு நீர் ஊற்றும்போதோ, நாய்க்குச் சோறிடும் போதோ, பிள்ளைக்குப் பாலூட்டும்போதோ, ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுக்கும் போதோ, ரசிகர்களுக்காகப் பாடகர் குழைந்து பாடும்போதோ, அன்புடன் கொடுக்கும் எல்லாத் தருணங்களிலும் மனிதர்கள் அழகாய்த் தெரிவார்கள்!

பெரிய அறிவும் சிறிய அன்பும் கொண்ட மனிதர்கள் வாழும் சமூகம் ஆபத்தானது. அன்பு கலக்காத அறிவு, நாசத்தை மட்டுமே நடத்திக் காட்டும்.

எல்லா உயிரும் ஓருயிரே என்று உணர்ந்து அன்பு செலுத்துவதுதான் பேரன்பு. அது தான் பேரறிவு. அழியாத அன்பைத் தர ஆயிரம் வழிகள் உள்ளன!

பேரன்பைப் பொழிவதே பேரானந்தம் என்று உணர்கையில் நம் மனம் சுகம் பெறும். வாழ்க்கை வளம் பெறும்!

(முற்றும்)

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x