Published : 22 Jun 2019 05:26 PM
Last Updated : 22 Jun 2019 05:26 PM

விவாதக் களம்: அறிவை ஆடையில் தேடாதீர்

அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் ஒழுக்கமான முறையில் ஆடை அணிந்து வர வேண்டும் என்றும் சுடிதார் அணிந்தால் கண்டிப்பாக துப்பட்டா அணிய வேண்டும் என்றும் தமிழகத் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடந்த சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டிருந்தார். அதையொட்டி அலுவலகங்களில் ஆடைக் கட்டுப்பாட்டு உத்தரவு குறித்து வாசகிகளிடம் கருத்துக் கேட்டிருந்தோம். ஆடைக் கட்டுப்பாடு அவசியமே எனச் சிலரும் அது பெண்களை அடிமைப்படுத்தும் முயற்சி எனப் பலரும் எழுதியிருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதங்களில் சில உங்கள் பார்வைக்கு:

 

தமிழ்நாட்டின் அகராதியில் பெண் என்றால் மார்பகங்கள் என்று பொருளோ? இங்கே சேலை, சுடிதார், குர்தி என எதை அணிந்தாலும் பெண்களைத் தரக்குறைவாகப் பேசும் வக்கிர மனம் படைத்த ஆண்களுக்கு அரசின் தலைமைச் செயலாளர் கொடுக்கும் தலை சிறந்த அங்கீகாரம்தான் இந்த ஆடைக் கட்டுப்பாடா? இப்படியொரு நிலையைக் காணக் கூடாது என்பதற்காகத்தான் பெரியாரும் பாரதியாரும் அன்றே மாண்டனரோ. வக்கிர ஆண்கள் துப்பட்டாவால் தூக்கிலிடப்பட வேண்டுமே தவிர ஒரு குழந்தையின் முதல் உணவைத் தரும் மார்பகங்கள் துப்பட்டாவால் ஒளித்துவைக்கப்பட வேண்டியவை அல்ல. அரசின் ஆணை வேதனை; பேரவலத்தின் உச்சம்.

- ஜா.செ.தீபிகா வீர்மதி, தூத்துக்குடி.

ஒருவர் எந்த உணவைச் சாப்பிட வேண்டும், எந்த மாதிரியான உடை உடுத்த வேண்டும் என்பது தனி மனித சுதந்திரம். இதில் அரசு ஒரு எல்லைக்கு மேல் தலையிடுவது சரியல்ல. அரசைவிடவும் ஒவ்வொரு பெண்ணுக்கும் தனது சுயபாதுகாப்பில் அக்கறை அதிகமாகவே உள்ளது.

எனவே, எந்த மாதிரியான உடை அணியும்போது துப்பட்டா போட வேண்டும் என்பதற்கான ஆலோசனை அரசுக்குத் தேவையற்றது. உரிமைகளுக்கான போராட்டங்களை ஒடுக்க நினைக்கும்  அரசு உடை குறித்துக் கவலைப்படுவது வியக்கவைக்கிறது. உடையைப் பற்றிய கவலையைக் குறைத்துக்கொண்டு அரசு அலுவலக நடைமுறையில் செய்ய வேண்டிய மாற்றங்களில் கவனம் செலுத்தலாம்.

- பொன்.கருணாநிதி, கோட்டூர்.

ஆடை என்பது அவரவர் விருப்பம். இதில் கட்டுப்பாடும் விமர்சனங்களும் அவசியமில்லை. பெண்களின் முன்னேற்றத்துக்காக எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, ஆடைக் கட்டுப்பாடு என்பது பெண்ணை அடிமைப்படுத்தும் முயற்சியே. பெண்களின் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் வெளிப்படுத்தும் ஆடையைத் தேர்வுசெய்ய வேண்டியது அரசல்ல.

தவறான சிந்தனையைக் கட்டுப்படுத்த ஆண்களுக்குப் பயிற்றுவிக்காமல் பெண்கள் அணியும் ஆடைக்குக் கட்டுப்பாட்டை விதிப்பது மடமை. அதிலும் துப்பட்டாவைக் கண்டிப்பாக அணிய வேண்டும் எனப் போதித்து அரசாணை இயற்றுவது பெண்ணை மீண்டும் பழைய காலத்துக்கே அழைத்துச் சென்று அடிமைப்படுத்தும் விதமாகவே அமையும்.

- மகாலெட்சுமி சுப்பிரமணியன், காரைக்கால்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கள் நடை, உடை, பாவனை என அனைத்திலும் கவனமாகத்தான் இருப்பார்கள். நம் சமூகத்துக்கு ஏற்பவும் பணிபுரியும் இடத்துக்கு ஏதுவாகவும் தங்களைக் கண்ணியத்துடன் வெளிப்படுத்திக்கொள்ளப் பெண்களுக்குத் தெரியும். ஆனால், இதற்கெல்லாம் அரசு சட்டம்போடுவது சரியல்ல. அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நேர்த்தியாக உடை அணிந்து வருவதை நானே   கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.

vivadham-2jpgright

பெண்களுக்கு உண்மையிலேயே பாதுகாப்புத் தர வேண்டும் எனில் ஆரோக்கியமான சமுதாயத்தைத்தான்  நாம் உருவாக்க  வேண்டும். அதை உருவாக்குவதில்  பெரும் பங்கு ஆண்களிடம்தான் உள்ளது. அதைவிடுத்து, தன்னம்பிக்கையோடு வேலைக்கு வரும் பெண்களைச்  சட்டம் என்கிற பெயரால் கட்டுப்படுத்த வேண்டாம்.

- பானு பெரியதம்பி, சேலம்.

அரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண்கள் புடவை அல்லாத வேறு உடைகளை அணியும்போது துப்பட்டா போட வேண்டும் என அரசு ஆணையிடுகிறது. அதேபோல் வேட்டி கட்டும் ஆண் ஊழியர்கள்  சட்டையின் மேல் துண்டு அணிந்து வர வேண்டும் என ஏன் சொல்லவில்லை? அனைத்துத் தரப்புப் பெண்களையும் கண்ணியக் குறைவாகப் பார்க்காத ஆண்கள் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதில்தான் அரசின் அக்கறையும் கவனமும் இருக்க வேண்டுமே தவிர, பெண்ணுக்கு ஆடை அறிவுரை வழங்குவதில் அல்ல.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் நவீன ஆடைகளை அணிந்து செல்வது சிலர் கண்களுக்கு உறுத்தலாக இருந்தால் அவர்களின் பார்வையில்தான் குறையே தவிர, பெண்கள் அணியும் ஆடையில் இல்லை. பெண்கள் எந்த உடை உடுத்தினாலும் பார்ப்பவர்கள் தங்கள் மனத்தில் அழுக்கை வைத்துக்கொண்டு பார்த்தால் தவறாகத்தான் தெரியும். பெண்களின் ஆடை சுதந்திரத்தில் அரசே மூக்கை நுழைப்பது அபத்தம். பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் ஆடையைத் தேர்வு செய்வது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

- வெ. ஐஸ்வர்யா, மேலப்பெரும்பள்ளம்.

அணியும் ஆடையில் குற்றமில்லை; ஆண்களின் பார்வைக் கோணத்தில்தான் அத்தனையும் உள்ளது. மனித நாகரிகம் முழுமையடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் நம் பெண்கள் ரவிக்கைகூட அணியவில்லை. கச்சை மட்டுமே கட்டிக்கொண்டு சமூகத்தில் வாழ்ந்துவந்தனர்.  அப்போதெல்லாம் நடக்காத குற்றங்கள் தற்பொழுது நடக்கின்றன என்றால் ஆடையை எப்படிக் குற்றம்சாட்ட இயலும்?

உடைகளில் ஒன்றுமில்லை; உணர்வுகளில்தான் உள்ளது அத்தனையும். உடைகளை மாற்றினால் உணர்வுகளில் மாற்றம் ஏற்படும் என்பது கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ ஓடும் என்பதைப் போல் நம்பத்தகாத வேடிக்கை. பெண்களின் ஆடையைக் குறிவைத்துப் பேசுவதற்குப் பதிலாக ஆண்களுக்கு மனவளக் கலையைக் கற்றுக்கொடுப்பதைப் பற்றிப் பேசி அதைச் செயல்படுத்தும்பட்சத்தில் குற்றங்கள் குறையலாம்.

- ச.அரசமதி, தேனி.

தமிழக அரசின் ஆடைக் கட்டுப்பாட்டு ஆணை மிகவும் விசித்திரமாக உள்ளது. சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அரசு அலுவலர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு விதிப்பது வேடிக்கை. கிராமமாக இருந்தாலும் சிறிய ஊராக இருந்தாலும் அதற்கேற்ப ஆடை அணிந்துதான் இதுவரை அரசுப் பணியாளர்கள் வேலைக்கு வருகின்றனர். எந்தக் காரணத்துக்காகத் தற்போது ஆடைக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டது? ஊழியர்கள் குறிப்பிட்ட சில உடைகளில்தான் வேலைக்கு வர வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது முறையல்ல. அரசு அலுவலக ஊழியர்களின் செயல்கள்தாம் மதிப்பை அளிக்கப்போகிறதேயன்றி அவர்களுடைய ஆடைகள் அல்ல என்பதை எப்போது அரசு புரிந்துகொள்ளப்போகிறதோ?

- பி.கே. ஜீவன், கும்பகோணம்.

உலகத்துக்கே ஒழுக்கத்தைக் கற்றுத்தரும் பெண்ணினத்துக்கு அரசாங்கம் ஒழுக்கத்தைப் பற்றிச் சொல்லித்தருவது வியப்பாக இருக்கிறது. பெண்களுக்கான ஆடை பற்றிய கட்டுப்பாடு கேலிக்குரியது.

- மு.சு.அன்புமணி, மதுரை.

ஆடைக் கட்டுப்பாடு குறித்த அரசின் முடிவை வரவேற்கிறேன். ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள். இதில் ‘உடைகூட சுதந்திரம் இல்லையா?’ எனக் கேள்வி எழுப்புவது தவறு. பெண்கள் பலர் நாகரிகம் என்ற போர்வையில் அரை குறை ஆடை அணிவதும் உடலை வெளிக்காட்டும் விதத்தில் உடைகளைத் தேர்ந்தெடுப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒருவரது உடையைப் பார்த்து நமக்கு மரியாதை வர வேண்டும்.

- உமாதேவி பலராமன், திருவண்ணாமலை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x