

கலை, அறிவியல் சார்ந்த பட்டப் படிப்புகளைப் படிக்க தற்போது மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். தமிழகத்தில் ஏறத்தாழ 1,561 கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன.
பிளஸ் 2-வில் தேர்ச்சிபெற்ற 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருகின்றனர் என்று வைத்துக்கொண்டால், மீதமுள்ள 5 லட்சம் மாணவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரவேண்டும்.
இதற்கான போதிய கட்டமைப்பு வசதிகளைக் கல்லூரிகளில் இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது. இருந்தபோதிலும், கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களின் ஆர்வத்தைக் கவனத்தில்கொண்டு அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு 20 சதவீதம் அதிகரிக்கும்படி அரசாணை இடப்பட்டுள்ளது.
இவ்வாறு பல வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தினாலும் உயர்கல்வி கற்க முன்வருபவர்களின் எண்ணிக்கை இன்றும் சொற்பம்தான். இதற்கு முக்கியக் காரணிகளாக, மாணவர்களின் குடும்பச் சூழ்நிலை, பிளஸ் 2-வுக்கு மேல் பெண்களைக் கல்லூரிக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோர்கள்,
வசிப்பிடத்துக்கு அருகில் கல்லூரிகள் இல்லாதது போன்றவை உள்ளன. இதுபோன்ற காரணங்களால், நேரடிக் கல்விமுறையில் படிக்க வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உயர்கல்வியை வழங்கும் நோக்கத்துடனேயே தமிழகத்தில் திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
திறந்தநிலை, தொலைநிலைக் கல்வியில் பெறப்படும் பட்டங்கள் நேரடி கல்வி முறையில் பெறப்பட்ட பட்டங்களுக்கு இணையானவை என்று மத்திய, மாநில அரசுகள் பல அரசாணைகளை (G.Os) வழங்கியுள்ளன.
எனவே, தொலைநிலைக் கல்வியில் படித்தால் மதிப்பு இல்லை என்ற பொய்யான, கற்பனையான எண்ணத்துக்கு இடமில்லை. கல்லூரி், பல்கலைக்கழங்களில் உள்ளது போல் தொலைநிலைக் கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு எவ்வித எல்லையும் கிடையாது.
மாணவர்களும் அவர்களது விருப்பத்துக்கேற்ற படிப்புகளைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். வேலைக்குச் சென்றுகொண்டே எவ்வித இடையூறும் இல்லாமல், வாழ்விடத்திலிருந்தபடியே பட்டப் படிப்பை முடித்து வாழ்வில் வளம் பெறலாம்.
இதில் கவனம் தேவை தொலைநிலைப் படிப்பில் சேர விரும்புபவர்கள் சரிபார்க்க வேண்டியவை: # தேர்ந்தெடுத்துள்ள படிப்புக்குப் பல்கலைக்கழக மானியக் குழு (UGC) , தொலைநிலைக் கல்வி குழுமத்தின் (DEB) அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா? # தானே கற்றல் முறையில் பாடப்புத்தகங்கள் (Self- Learning Materials) வடிவமைக்கப்பட்டுள்ளனவா? # மண்டல மையங்கள், கல்வி மையங்கள், தேர்வு மையங்கள் அருகில் உள்ளனவா? # நேரடி வகுப்புகள் எங்கு, எப்போது நடைபெறும்? |
- ரெ. மகேந்திரன்
உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம், சென்னை.