Last Updated : 21 Jun, 2019 11:02 AM

 

Published : 21 Jun 2019 11:02 AM
Last Updated : 21 Jun 2019 11:02 AM

நடிகர் சங்கத் தேர்தல்: நடிகர் சங்க உறுப்பினர்களின் கவலை!

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மூவாயிரம் உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற நடைபெறும் நடிகர் சங்கத் தேர்தல் இம்முறையும் ஊர்த்திருவிழாபோல ஆகிவிட்டது. கடந்த தேர்தலில் சரத்குமார் அணி - நாசர் அணி இரண்டும் களத்தில் நின்றன. நாசர் அணி ஜெயித்தது. ஆனால், இம்முறையோ நாசர், விஷால், கார்த்தி தலைமையிலான பாண்டவர் அணியிலேயே பிளவு ஏற்பட்டுவிட்டது.

ஐசரி கணேஷ், குட்டி பத்மினி, உதயா, சங்கீதா உள்ளிட்ட பலர் பாண்டவர் அணியிலிருந்து வெளியேறி சுவாமி சங்கரதாஸ் அணியை உருவாக்கிவிட்டார்கள். கடந்தமுறைபோல் அல்லாது, எந்த அணிக்கு வெற்றி கிடைக்கும் என்பதைக் கணிக்க முடியாத தேர்தலாக மாறியிருக்கிறது, பெரும் அல்லோலகல்லோலமாகிவிட, தேர்தலைத் தமிழக அரசு நிறுத்தியே விட்டது.

ஏன் வந்தது பிளவு?

பாண்டவர் அணி தொடங்கப்பட்டபோது ஒற்றுமையாகத்தான் அனைத்துப் பணிகளுமே நடந்திருக்கின்றன. எப்போது விஷால் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் நின்றாரோ அப்போதுதான் அணிக்குள் குழப்பங்கள் தொடங்கியுள்ளன. தயாரிப்பாளர் சங்கம் சிறு படங்களின் வெளியீட்டுக்குப் பாதுகாப்பு அளிக்கும்விதமாக, வெளியீட்டு ஒழுங்குமுறைக் குழு ஒன்றை அமைத்து நடைமுறைப் படுத்திவந்தது.

இயக்குநர் ஏ.எல்.விஜயின் சகோதரரான நடிகர் உதயா நடித்து தயாரித்திருந்த ‘உத்தரவு மகாராஜா’ படம் வெளியானபோது, தனக்குச் சலுகை காட்டாமல், அந்த நேரத்தில் பல படங்கள் வெளியாகத் தயாரிப்பாளர் சங்கம் அனுமதித்ததுதான் உதயாவின் கோபத்துக்குக் காரணம் என்று சொல்கிறார்கள். அதேபோல் நடிகர் சங்கத்தின் கட்டிட நிதிக்காக விஷால் - கார்த்தி இருவரும் இணைந்து நடிக்க ஒப்புக்கொண்ட படம் ‘கறுப்பு ராஜா வெள்ளை ராஜா'.

இதன் படப்பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று, படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே கைவிடப்பட்டது. இதற்காக 3 கோடிக்கும் அதிகமாகச் செலவு செய்து தயாரித்தவர் ஐசரி கணேஷ். ‘இந்தப் படத்துக்குப் போட்ட பணத்தை நன்கொடையாகக் கூட நடிகர் சங்கத்துக்குக் கொடுத்திருப்பேனே...’ என்று அவருக்கு உள்ளுக்குள் கோபம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

சங்கம் சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளின் போதெல்லாம் ரமணா, நந்தா இருவருக்குமே அவற்றின் ஒருங்கிணைப்புப் பணிகள் கொடுக்கப்படுவதும் அவர்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதும் மற்றவர்களுக்குப் புகைச்சலை உண்டாக்கிவிட்டதாகத் தெரிகிறது.

மேலும், குட்டி பத்மினி, சங்கீதா போன்ற இதர உறுப்பினர்களும் ‘தங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை’ என்று உள்ளுக்குள் குமைந்துகொண்டிருந்ததாகவும் அதனால் அவர்கள் புதிய அணிக்குச் சென்றுவிட்டார்கள் என்றும் சங்க வட்டாரத்தில் சொல்லுகிறார்கள்.

ஐசரி கணேஷ் வைத்த கோரிக்கை

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், விஷால் தேர்தலில் நிற்க வேண்டாம். அவர் தவிர்த்து நாமெல்லாம் ஒரே அணியாக நிற்கலாம் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார் ஐசரி கணேஷ். அது நிராகரிக்கப்படவே, புதிய அணியை அவர் உருவாக்கியதாகக் கூறுகிறார்கள். முன்னணி நடிகர்களைவிட, இந்தத் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கப்போவது நாடக நடிகர்களின் ஓட்டுக்கள்தாம். ஆகையால் இரண்டு அணிகளுமே நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிக்கத் தொடங்கிவிட்டன.

ஆர்.கே. நகர் தேர்தலால் சர்ச்சை

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலிலும் விஷால் நின்றதில் பலருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் பொன்வண்ணன் தனது துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய முயன்றதும் ஒரு காரணம் என்பதும் தெரிய வருகிறது. ஆர்.கே.நகர் தேர்தல் நேரத்தில் அரசுக்கு எதிராக விஷால் பேசிய பேச்சுகள், தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமல்லாது நடிகர் சங்கத்திலும் பெரும் சர்ச்சையை உருவாக்கியதாகத் தெரிகிறது.

அரசியல் தலையீடு இருக்கிறதா?

நடிகர் சங்கத் தேர்தலில் கட்சி அரசியல் நுழைந்துவிட்டதா எனச் சங்க வட்டாரத்தில் கேட்டபோது, அனைவரும் கூறிய பதில் ‘இருக்கிறது'. எப்படியென்றால், தி.மு.கவில்தான் நாடக நடிகர்கள் பலர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு அதன் தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்தார் விஷால்.

அப்போது தான் அணிகள் உடைவது உறுதியானது என்கிறார்கள். ‘இப்படிச் செய்தால் ஏதோ திமுக ஆதரவு பெற்ற சங்கமாக உருவாகிவிடாதா, இது முற்றிலும் தவறானது' என்று விஷாலிடமே பலரும் சொல்லியுள்ளனர். ஆனால், அவரோ ‘நான் தனிப்பட்ட முறையில் தான் சந்தித்தேன்’ என்று சமாளித்தார் என்கிறார்கள். இதன்பிறகே அதிமுக மீது பெரிய விசுவாசம் உடையவர் என்ற அடிப்படையில் பாக்யராஜைத் தலைவராக வைத்துக் களம் கண்டுவிடலாம் என ஐசரி கணேஷ், அதிருப்தியாளர்களை எளிதாக ஒருங்கிணைத்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

விஷால் அணியின் நம்பிக்கை

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றிவிட்டோம். நடிகர் சங்கக் கட்டிடம் ஒன்று போதும் நமக்கு வெற்றியைத் தேடித் தர என்று பேசிவருகிறார்கள். ஆனால், சுவாமி சங்கரதாஸ் அணியோ, ‘அதே கட்டிடப் பணி ஏன் கடந்த சில மாதங்களாக நடைபெறவில்லை’ என்று கேட்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். இரண்டு அணிகளுமே, ‘நாங்கள் பொறுப்புக்கு வந்தால் ஆறு மாதத்தில் கட்டிடப் பணிகளை முடித்துவிடுவோம்’ என்று கூறிவருகிறார்கள்.

உறுப்பினர்களின் கவலை

மக்களை மகிழ்விக்கும் நடிகர்கள், இப்படிக் குழாயடிச் சண்டை போடுவது மக்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. இரு அணிகளின் ‘நீயா… நானா’ போட்டியை வைத்துப் பார்த்தால், இம்முறை இரண்டு அணிகளுக்கும் முழுமையான வெற்றி கிடைக்காது என்பதும் இரு தரப்பிலும் சிலர் வெல்ல வாய்ப்புகள் இருப்பதாகவும் தேர்தலைக் கூர்ந்து அவதானித்துவரும் மூத்த சங்க உறுப்பினர்கள் சிலர் கூறுகிறார்கள்! தற்போதைக்குச் சங்கத் தேர்தலுக்கு அரசு தடைவிதித்திருப்பது ‘அரசியல் சார்பை’க் காட்டுகிறது என்று சிலர் குரல் எழுப்பினாலும், பிரச்சினைகள் முடிந்து தேர்தல் நடக்கும்போது சங்கத்தைத் தங்கள் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்துகிறவர்களின் கையில் அது சிக்கிவிடாமல் இருக்க வேண்டும் என்பதுதான் நடுநிலையான சங்க உறுப்பினர்களின் கவலையாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x