Last Updated : 05 Jun, 2019 09:33 AM

 

Published : 05 Jun 2019 09:33 AM
Last Updated : 05 Jun 2019 09:33 AM

கதை: பப்பியின் வீடு

பப்பி தடுமாறியது. யார் யாரோ வந்து போய்க்கொண்டிருந்தனர். இரண்டு அடி முன்னால் போய் நின்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது மோதியது.

“நாய்க்குக் கண்ணு தெரியுதா பாரு... நின்னுக்கிட்டிருக்கிற ஆட்டோவில வந்து மோதுது… தள்ளிப் போ” என்று ஆட்டோ ஓட்டுநர் சத்தம் போட்டார்.

பப்பி பயந்து நடுங்கியது. எந்தப் பக்கம் போக வேண்டும் என்று தெரியவில்லை. உடல் அரித்தது. அப்படியே உட்கார்ந்து முன்னங்காலால் சொறிந்துகொண்டது. முதுமையால் தளர்ந்து போயிருந்தது.

பப்பிக்குப் பதினைந்து வயதாகிவிட்டது. ஒரு கண் பார்வை முழுவதுமாகத் தெரியவில்லை. ஒரு கண்ணில் பாதிப் பார்வை மட்டும் தெரிந்தது. பற்கள் உதிர்ந்துவிட்டன. மோப்ப சக்தியும் குறைந்துவிட்டது. குரலும் ஒடுங்கிவிட்டது. குரைப்பதற்காக வாயைத் திறந்தால் ஊளைச்சத்தமோ, முனகலோதான் வந்தது.

எப்படி இந்தத் தெருவுக்கு வந்தோம் என்று பப்பி யோசித்தது. பப்பியின் சொந்தக்காரர் நேற்று இரவு, பப்பியை ஒரு சாக்குப்பையில் வைத்து தூக்கிக்கொண்டு வந்தார். இந்தத் தெரு மூலையில் பையோடு வைத்து விட்டுப் போய்விட்டார்.

காலையில் வாகனச் சத்தம் கேட்டுதான் பப்பி கண்விழித்தது. பப்பி இளமையில் சுறுசுறுப்பாக இருக்கும். ஓர் இடத்தில் ஒரு நொடிகூடச் சும்மா இருக்காது. அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் சொல்வதைக் கேட்டு நடக்கும். காலையில் பேப்பரைக் கவ்விக்கொண்டு வரும். வீசுகிற பந்தை எடுத்து வரும். இரவில் தூங்கவே தூங்காது. சின்னச் சத்தம் கேட்டாலும் காதுகளை விடைத்துக்கொண்டு உற்றுக் கவனிக்கும்.

அந்தச் சத்தம் ஆபத்து என்று தோன்றிவிட்டால், உடனே குரைக்க ஆரம்பித்துவிடும். ஒருமுறை அப்படிக் குரைக்கும்போது பப்பியின் சொந்தக்காரர்  எல்லா விளக்குகளையும் போட்டார். அதைப் பார்த்த திருடன் காம்பவுண்டு சுவரில் ஏறிக்குதித்து ஓடி விட்டான். குழந்தைகளோடு அப்படி விளையாடும். எல்லோருக்கும் செல்லப்பிள்ளையாக இருந்தது பப்பி. இப்போது குழந்தைகள் வளர்ந்து, பெரியவர்களாகிவிட்டார்கள். பப்பியால் முன்புபோல குரைக்கவோ, ஓடவோ, முடியவில்லை.

பப்பி கண்களை மூடி யோசித்தது. வயிறு பசித்தது. தெரு மங்கலாகத் தெரிந்தது. எல்லோரும் பப்பியைக் கடந்து போனார்கள். யாரும் நிற்கவில்லை. பப்பிக்குச் சோர்வாக இருந்தது. அப்படியே ஒடுங்கிப் படுத்துவிட்டது. பப்பி ஒரு கனவு கண்டது.

“மகா, இங்கே பாரேன் ஒரு நாய்...”

“ அட ஆமா. நாம வீட்டுக்குக் கூட்டிட்டுப் போவோமா? ”

“அப்பா திட்டுவாரே...”

“ கெஞ்சிக் கேட்டா ஒண்ணும் சொல்ல மாட்டாரு...”

சாக்குப்பையில் பப்பி மிதந்துகொண்டே போனது. சிறிது நேரம் கழித்து சாக்குப்பையிலிருந்து பப்பியை யாரோ தூக்கினார்கள்.

“அட, கிழட்டு நாயை எதுக்குத் தூக்கிட்டு வந்தீங்க? உங்களுக்குச் சாப்பாடு போடறதே கஷ்டமா இருக்கு. கொண்டு போய் விட்டுட்டு வாங்க” என்று அப்பாவின் குரல் கேட்டது.

“இருக்கட்டும் அப்பா. பாவமா இருக்கு” என்று குழந்தைகள் கெஞ்சின. பப்பி கண்களைத் திறந்து பார்த்தது. அது ஒரு தகரக்கூரை போட்ட நடைபாதை வீடு என்று தெரிந்தது.

அப்பாவின் முகத்தில் இருந்த கடுமை குறையவில்லை. குழந்தைகள் பிரியத்தோடு பப்பியைத் தடவிக் கொடுத்தார்கள். அந்தப் பிஞ்சு விரல்களில் வழிந்த அன்பை உணர்ந்தது பப்பி. அப்போது ஒரு பாட்டி அந்த வீட்டுக்குள் வந்தார். பப்பியைப் பார்த்தார். குழந்தைகளைப் பார்த்தார்.

“ நாய்க்குச் சோறு வச்சீங்களா, பிள்ளைகளா? என்னை மாதிரி அதுக்கும் முடியல… பாவம்” என்று சொல்லிக்கொண்டே சமையலறைக்குப் போனார் பாட்டி.  பிறகு அப்பா எதுவும் சொல்லவில்லை. மகாவும் கதிரும் பப்பியைக் கட்டிப்பிடித்துக்கொண்டனர். பப்பி வாலை ஆட்டியது. லேசாக முனகியது.

எல்லாம் கனவு மாதிரியே இருந்தது. ஆனால் மகாவும் கதிரும் பப்பிக்கு எதிரில் ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் சோறு போட்டுக்கொண்டு வந்தார்கள். பப்பி அந்தக் குழந்தைகளைப் பார்த்தது. அந்தக் குழந்தைகளுக்குத் தங்க நிறத்தில் சிறகுகள் முளைத்திருந்தன!

ஓவியம்: வாசன், கிரிஜா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x