Published : 26 Jun 2019 11:17 AM
Last Updated : 26 Jun 2019 11:17 AM

ஸ்காட்லாந்து நாட்டுக் கதை: அரக்கனிடம் மாட்டிய பெண்கள்

ஸ்காட்லாந்து நாட்டு ராஜா திடீரென்று இறந்துவிட்டார். ராஜாவின் தூரத்து உறவினர், ராஜா ஆகிவிட்டார். ராணியையும் அவரது மூன்று மகள்களையும் அரண்மனையை விட்டுத் துரத்தினார். ஊருக்கு வெளியே குடிசையும் தோட்டமும் போட்டுக்கொள்ள சிறிதளவு நிலமும் கொடுத்தார்.

ராணி துன்பத்தைக் கண்டு கலங்கவில்லை. புது ராஜா கொடுத்த நிலத்தில் சின்னக் குடிசை கட்டி, தோட்டம் போட்டு, ஒரு பசு மாட்டை வளர்த்து, பிழைத்து வந்தார். புலம்பும் மகள்களுக்கு உழைத்து வாழ்வதன் அருமை பற்றி எடுத்துக் கூறினார்.

ஒரு நாள் இரண்டாவது மகள் தோட்டத்தில் முட்டைக்கோஸ் பறிக்கச் சென்றாள். “அம்மா, யாரோ நமது முட்டைக்கோஸ்களைத் திருடிச் சென்றிருக்கிறார்கள்” என்று அலறினாள்.

முட்டைக்கோஸ்கள் திருடப் பட்டிருந்ததைப் பார்த்து மூன்று பெண்களும் வேதனைப் பட்டார்கள். ராணி விரைவில் புதிய முட்டைக் கோஸ்கள் வளர்ந்துவிடும் என்று ஆறுதல் சொன்னார். அக்காக்கள் இருவரும் அழுதுகொண்டிருக்க, கடைசிப் பெண் தோட்டத்தில் இங்கும் அங்கும் சுற்றிப் பார்த்தாள்.

”அம்மா, வேலிக்கு அருகே பிரம்மாண்டமான காலடித் தடம் இருப்பதைப் பாருங்கள்” என்று கத்தினாள்.

எல்லோரும் பார்த்தார்கள். அவ்வளவு பெரிய காலடித் தடம் என்றால் ஓர் அரக்கன்தான் வந்திருக்க வேண்டும். இரவு காவல் இருந்து அந்த அரக்கனைப் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

முதல் பெண் அன்றிரவு தான் காவல் இருப்பதாகச் சொன்னாள்.  ஒரு போர்வையைப் போர்த்திக்கொண்டு தோட்டத்தில் மறைந்திருந்தாள். திடீரென்று தரை அதிரும்படி காலடி ஓசை கேட்டது. ஓர் அரக்கன் வேலியைத் தாண்டி தோட்டத்தில் நுழைந்து, முட்டைக்கோஸ்களைப் பறிக்க ஆரம்பித்தான்.

“எங்கள் முட்டைக்கோஸ்களை ஏன் திருடுகிறாய்?” என்று சத்தம் போட்டாள் மூத்த மகள். அரக்கன் அவளைச் சட்டென்று தன் சாக்குப்பையில் போட்டுக்கொண்டான். சாக்கைத் தோளில் போட்டுக்கொண்டு, தன் வீட்டை அடைந்தான்.

“மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும், கம்பளியைச் சிக்கெடுத்து போர்வை நெய்ய வேண்டும், கஞ்சி காய்ச்ச வேண்டும்” என்று மூத்த மகளுக்கு உத்தரவிட்டுவிட்டு, எங்கோ சென்றான் அரக்கன்.

மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பி விட்டு, கஞ்சி காய்ச்சினாள். மிகவும் பசித்தது. கஞ்சியைக் குடிக்க உட்கார்ந்தாள்.

அப்போது பரிதாபமான தோற்றத்தோடு ஒருவன் வந்து, “எனக்கு ஏதாவது சாப்பிடக் கொடு” என்றான். “போ.. போ.. அரக்கன் வந்தால் உன்னைக் கொன்றுவிடுவான்” என்று அவனை விரட்டிவிட்டு விட்டு, கஞ்சியைக் குடித்தாள் மூத்த மகள்.

பிறகு கம்பளி நூல்களைச் சிக்கெடுக்க ஆரம்பித்தாள். மிகவும் சிக்கலாக இருந்தன. அவளால் அதைச் சரிசெய்ய முடியவில்லை. பொறுமையின்றி சிக்கெடுத்ததால், கம்பளி நூல்கள் அறுந்தன. அதற்குள் அரக்கனுக்காக அடுப்பில் வைத்திருந்த கஞ்சி தீய்ந்துவிட்டது. வீடு வந்த அரக்கன் அவள் ஒரு வேலையையும் சரியாகச் செய்யவில்லை என்று அவளைத் தூக்கிப் பரணில்  போட்டுவிட்டான்.

இரண்டாம் நாள் இரண்டாவது மகள் காவலுக்கு இருக்க, அவளுக்கும் இதே கதிதான். அரக்கன் அவளைத் தூக்கி வந்தான். வேலைகள் தந்தான். அவள் வேலைகளைச் சரியாகச் செய்ய வில்லை. பசி என்று வந்தவனுக்கு எதுவும் தரவில்லை. அவளும் பரணில் தூக்கி எறியப்பட்டாள்.

மூன்றாம் நாள் அரக்கன் தோட்டத்துக்கு வந்தபோது, இளைய மகள் காவலில் இருந்தாள். அரக்கனைப் பார்த்ததும், “இரவு வணக்கம்” என்றாள். “நீ என்னுடன் வரவேண்டும்” என்றான் அரக்கன். “நான் தயார்” என்றாள்.

அரக்கனுக்கு அவள் நடத்தை வியப்பாக இருந்தது. தனது சாக்கில் அவளைப் போட்டுக்கொண்டான். தன் கையில் இருந்த கத்தியால் சாக்கில் சின்ன ஓட்டைப் போட்டு, அரக்கனின் வீட்டுக்குச் செல்லும் பாதையைத் தெரிந்துகொண்டாள்.

அரக்கன் அவளுக்கும் அதே வேலைகளைத் தந்துவிட்டு வெளியே சென்றான். அவளும் மாட்டை மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு, கஞ்சி காய்ச்ச ஆரம்பித்தாள்.

அப்போது வழக்கம்போல பசிக்கிறது என்று ஒருவன் வந்தான். இளையவள் அவனுக்கு, தான் குடிக்க வைத்திருந்த கஞ்சியைக் கொடுத்தாள். கஞ்சியைக் குடித்து விட்டு, கம்பளியைச் சிக்கெடுத்து நெய்து தருகிறேன் என்றான். சற்று நேரத்தில் ஓர் அழகான கம்பளியை நெய்து தந்துவிட்டுக் கிளம்பினான்.

அரக்கன் நல்ல கஞ்சியும் கம்பளியும் கண்டு மகிழ்ந்தான். உன் அக்காக்களுக்கும் இவற்றைக் கற்றுக் கொடு என்று, பரணில் ஏறுவதற்கு ஓர் ஏணி தந்தான்.

பரணில் சகோதரிகள் மூவரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டனர். மறுநாள் கீழே இறங்கி வந்த இளையவள், “எங்கள் வீட்டில் மாட்டுக்குப் புல் அறுக்க யாரும் இல்லை. எனவே இந்தப் புல் கட்டை எங்கள் அம்மாவிடம் தருகிறீர்களா?” என்று பணிவாக அரக்கனிடம் கேட்டாள். அரக்கனும் சரி என்று புல் கட்டை அவள் அம்மா வீட்டில் தந்துவிட்டான். அன்றிரவும் இளையவள் பரணில்தான் உறங்கினாள்.

மறுநாளும் அரக்கனிடம் அம்மாவுக்குப் புல்கட்டை அனுப்பினாள். அன்று மாலை அரக்கன் திரும்பி வந்ததும், “நான் காலையில் சீக்கிரமே வெளியே செல்ல வேண்டும், நான் திரும்பி வரும்போது வீட்டை நன்றாகச் சுத்தம் செய்து வை” என்றான். “காலையில் நீங்கள் செல்லும்போது இந்தக் கூடையை மட்டும் எங்கள் அம்மா வீட்டில் கொடுத்துவிடுங்கள்” என்றாள் இளைய மகள்.

மறுநாள் அதிகாலையில் அரக்கன் எழுந்தபோது, இளையவள் பரணிலிருந்து இறங்கவில்லை. நேற்று வீட்டைச் சுத்தம் செய்த அலுப்பு என்று நினைத்தபடி அரக்கன் அவள் வைத்திருந்த பெரிய கூடையைத் தலையில் சுமந்தபடிக் கிளம்பினான்.

இரண்டு நாட்களாகப் புல்கட்டில் அவளது இரண்டு அக்காக்களையும் அவள் வீட்டில் சேர்த்ததைப்போல, இப்போது அந்தக் கூடையில் இளையவளைச் சுமந்து செல்கிறோம் என்பது அவனுக்குத் தெரியவில்லை.

வீட்டில் அனைவரும் ஒன்றாகச் சாப்பிட்டார்கள். அப்போது அரசரிடமிருந்து ஒரு சேவகன் வந்து, அரசர் அவர்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னதாகச் சொன்னார். அவர்களும் அரண்மனை கிளம்பினார்கள்.

அரசர் தன் தவறுக்கு வருந்தி அவர்களை அரண்மனையிலேயே வசிக்கச் சொன்னார்.

இரவு வீடு திரும்பிய அரக்கன் வீட்டில் இளையவள் இல்லாதது கண்டு திகைத்தான். கஞ்சிக் கலயமும் காலியாக இருந்தது. என்ன செய்வது என்று நொந்தபடியே, அடுப்பைப் பற்ற வைத்து கஞ்சி காய்ச்ச ஆரம்பித்தான்.

தமிழில்: ச. சுப்பாராவ்

ஓவியம்: தமிழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x