Last Updated : 22 Jun, 2019 05:53 PM

 

Published : 22 Jun 2019 05:53 PM
Last Updated : 22 Jun 2019 05:53 PM

வாழ்ந்து காட்டுவோம் 09: தையல் தெரிந்தால் வருமானம்

பெண்களுக்கான கைத்தொழில் என்றாலே தையல்தானா என்று நம்மில் பலர் நினைக்கக்கூடும். ஆனால், குடும் பங்களில் நாலு சுவர்களுக்குள் முடங்கிவிட்ட /முடக்கப்பட்டுவிட்ட பெண்கள் பலருக்கும் தையல் தொழில்தான் வாழ்வாதாரமாக இருக்கிறது. பல பெண்களின் கிழிந்த வாழ்வைத் தையல் தொழில்தான் தைத்து மீட்டெடுத்துள்ளது.

ஒருமுறை மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் நாளில் ஒரு பெண் அளித்த மனுவை என்னிடம் கொடுத்துச் சமூகநலத் துறை மூலம் உதவும்படி மாவட்ட ஆட்சியர் கூறினார்.  அந்தப் பெண்ணின் பெயர் சுசீலா. தன் கணவர் மூன்று மாதங்களுக்கு முன்னால் இறந்துவிட்டார் என்றும் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு வருமானத்துக்கு வழியில்லாமல் தவிப்பதாகவும் சொல்லி அழுதார். அவருக்கு ஐந்து  வயதில் மகளும் இரண்டு வயதில் மகனும் இருந்தனர்.

அவருக்குச் சமூகநலத் துறையின் சேவை இல்ல மேல்நிலைப் பள்ளியில் கணவனை இழந்த பெண் என்ற அடிப்படையில் தையல் பயிற்சி வகுப்பில் சேர்த்து உதவ முடிந்தது. அவரின் மகனையும் அதே சேவை இல்லத்தில் ஐந்து வயதுவரை வைத்திருக்க விதிமுறைகள் இருப்பதால் தாயுடன் சேவை இல்ல முன்பருவக் கல்வி வகுப்பில் சேர்த்துக்கொண்டோம்.

ஐந்து வயது மகளை அரசின் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கைம்பெண்ணின் மகள் என்ற அடிப்படையில் சேர்த்ததால் தாய்-மகள் உறவையும் எங்களால் பாதுகாக்க முடிந்ததோடு பெண் குழந்தையின் படிப்புக்கும் உதவ முடிந்தது.

கணவனை இழந்த பெண் என்ற அடிப்படையில் அந்தப் பெண்ணுக்குச் சமூகநலத் துறை சார்பில் செயல்படுத்தப்படும் ‘சத்தியவாணி அம்மையார் நினைவு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்’ மூலம் இலவசத் தையல் இயந்திரத்தைக் கொடுத்ததோடு அரசின் இலவசப் பள்ளிச் சீருடை தைக்கும் சங்கத்தின் உறுப்பினராக்கி, நிரந்தரமாக மாத வருமானம் கிடைக்க வழிவகை செய்தோம். இப்போது அவர் மகிழ்ச்சியோடு நல்லவிதமாக வாழ்ந்துவருகிறார்.

திட்டத்தின் நோக்கம்

சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,  ஊனமுற்ற ஆண்/பெண் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ள உதவும்வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்படுகிறது.

வழங்கப்படும் உதவி

தையல் இயந்திரமும் உபகரணங்களும். 2013-2014 முதல் கூடுதல் அம்சங்கள் உள்ள நவீனத் தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.

யாரெல்லாம் பயன்பெறலாம்?

நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஊனமுற்ற ஆண்கள்/பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பிற பெண்கள். விண்ணப்பிக்கிறவருக்குத் தையல் மிஷினில் தைக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். 20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்

நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஊனமுற்ற ஆண்கள்/பெண்கள் என்பதற்கான சான்று.

# வயதுச் சான்று.

# குடும்ப வருமானச் சான்று.

# சாதிச் சான்று.

# விண்ணப்பதாரரின் ஒளிப்படம்.

தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர்கள்

1. மாவட்டச் சமூகநல அலுவலர்கள் (வட்டார அளவில் – விரிவாக்க அலுவலர்கள் (சமூக நலம்).

2. மகளிர் தொழிற்கூட்டுறவுச் சங்கங்கள். சமூக நல இயக்கத்தின் கீழ் ஏறத்தாழ 98 மகளிர் தொழிற்கூட்டுறவுச் சங்கங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 79 சங்கங்கள் மகளிர் தையல் தொழிற்கூட்டுறவுச் சங்கங்கள்.

இச்சங்க உறுப்பினர்கள்தாம் அரசுப் பள்ளிகளின் மாணவர்களுக்கு இலவசச் சீருடை தைக்கும் பணிகளில் முதன்மையாக ஈடுபடுகின்றனர். அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை, ஆதி திராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இலவசச் சீருடை தைத்துத் தரும் பணிகளிலும் இவர்கள் முனைப்புடன் செயல்படுகின்றனர்.

 

சங்கங்களில் உறுப்பினராகச் சேர்வதற்கான தகுதிகள்

# சங்கத்தின்  துணைவிதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள, வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

# தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

# ஆண்டு வருமானம், கிராமப்புறமாக இருப்பின் ரூ.40,000-க்குள்ளும் நகர்ப்புறம்  எனில் ரூ.60,000-க்குள்ளும் இருக்க வேண்டும்.

# 18 முதல் 35 வயதுக்குள் இருக்கும் பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

 

vaazhndhu-2jpg

சங்கத்தின் செயல்பாடுகள்

# சங்கங்கள் பதிவு செய்யப்படும்போதே பதிவாளரால் ஒவ்வொரு சங்கத்துக்கும் துணை விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தத் துணை விதிகளின்படியும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களுக்கான சட்ட விதிகளின்படியும் சங்கச் செயல்பாடுகள் அமைகின்றன.

# மகளிர் கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகக் கட்டுப்பாட்டு அலுவலராக மாவட்டச் சமூக நல அலுவலர் செயல்படுகிறார்.

# சங்கங்களின் தலைமைப் பணியாக இலவசச் சீருடை தைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

# சங்கத்தின் துணைவிதிகளின்படி தேவைக்கேற்ற பணியாளர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு மையத்தின் மூலம் நியமிக்கப்படுவர்.

# ஒவ்வொரு உறுப்பினருக்கும் அடையாள அட்டையுடன் உறுப்பினர் பாஸ் புத்தகமும் வழங்கப்படும்.

# சீருடைகள் தைப்பதற்கான வெட்டுத் துணிகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும்.

# சங்கத்திலிருந்து உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தையல்கூலி, மின்னணுப் பரிமாற்றம் மூலம் சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

# தையல்கூலி பட்டுவாடா பதிவேட்டின்படி முன்பணமாக வழங்கப்பட்ட தொகை சரிக்கட்டப்பட்டுள்ளதா என்பது ஒவ்வொரு முறையும் உறுதிசெய்யப்படும்.

# தைக்கப்படும் சீருடைகள், சுற்றறிக்கையில் குறிப்பிட்ட வரையறைகளின்படி தரத்துடன் தைக்கப்பட்டிருக்க வேண்டும்.

# கல்வித்துறை அலுவலகங்களுக்கு அவர்களின் தேவைப்பட்டியலின்படி முழுமையாகச் சீருடைகள் தைத்து வழங்கப்பட வேண்டும்.

-  மேற்காணும் சங்கச் செயல்பாடுகளை முழுமையாக ஆய்வுசெய்யும் பொறுப்பு மாவட்டச் சமூகநல அலுவலரால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. குறிப்பாக விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் மாணவ-மாணவியருக்குக் குறித்த நேரத்தில் சீருடைகள் தைக்கப்பட்டு வழங்கப்படுவதை நேரடியாகக் கண்காணிக்கும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட மாவட்டச் சமூகநல அலுவலருக்கு அளிக்கப்பட்டுவருகிறது.

அதேபோல், தையல் தொழிற்சங்க உறுப்பினர்களுக்குச் சீருடை தைத்ததற்கான தையல்கூலியும் உடனுக்குடன் கருவூலம் மூலம் பெற்று, சம்பந்தப்பட்ட உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுவிட்டதா என்பதைக் கவனிப்பதும் அவருக்குக் கூடுதல் பொறுப்பாக உள்ளது.

ஏழைப் பெண்களுக்கு வீட்டிலிருந்தபடியே வேலைசெய்து வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக இலவசச் சீருடை தைக்கும் தொழில் இருக்கிறது. இதன் மூலம் எத்தனையோ ஏழைப் பெண்கள் குறிப்பாகக் கைம்பெண்கள்,  கணவனால் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பெண்கள், ஊனமுற்ற பெண்கள் எனப் பலதரப்பட்ட பெண்கள் இந்தத் தையல் தொழில் மூலம் தங்களின் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தும் படிக்கவைத்தும் வாழ்ந்துவருகின்றனர்.

 

(உரிமைகள் அறிவோம்)
கட்டுரையாளர், மாநில அளவிலான சிறப்புப் பயிற்றுநர்
தொடர்புக்கு: somurukmani@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x