Last Updated : 19 Jun, 2019 10:58 AM

 

Published : 19 Jun 2019 10:58 AM
Last Updated : 19 Jun 2019 10:58 AM

கதை: ஆஹா என்ன சுவை!

வசந்தவனத்தில் அழகான முயல் குடும்பம் ஒன்று வசித்துவந்தது. தனக்குக் கிடைக்கும் உணவைப் பிள்ளைகளோடு பகிர்ந்து உண்ணும் அம்மா, எங்கு உணவு கிடைத்தாலும் அதைக் குடும்பத்துக்காக எடுத்து வரும் அப்பா, பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கும் குட்டி முயல் என அந்தக் குடும்பம் அழகானது.

ஒரு நாள் அப்பா முயலும் அம்மா முயலும் உணவைத் தேடி வெளியே சென்றிருந்தன. கொஞ்ச நேரம் இங்கும் அங்கும் விளையாடிக்கொண்டிருந்த குட்டி முயல் சோர்ந்து உட்கார்ந்திருந்தது.

“ஒரே இடத்தில் எவ்வளவு நேரம்தான் விளையாடுவது? எனக்குச் சலிப்பாக இருக்கு” என்று சத்தமாகப் புலம்பியது குட்டி முயல்.

அந்த வழியே சுண்டெலி வந்தது. “ஏன் இப்படி உட்கார்ந்திருக்க?” என்று கேட்டது.

”உனக்கு எப்படி என்னைத் தெரியும்?” என்று ஆச்சரியப்பட்டது குட்டி முயல்.

“இந்தப் பொந்தில்தான் நாங்கள் வசித்துவருகிறோம். நீயும் உன் அப்பா அம்மாவும் இங்கு இருப்பது எனக்கு நன்றாகத் தெரியும்” என்றது சுண்டெலி.

“அப்படியா! நீ எங்கே போகிறாய்?”

“மலையடிவாரத்தில் ஒரு விவசாயி கேரட் பயிரிட்டிருக்கிறார். ரொம்ப ருசியான கேரட். நீயும் வருகிறாயா?”

“அங்கே யாருடன் விளையாடுவாய்?”

“அங்கே எலி நண்பர்களும் முயல் நண்பர்களும் இருக்கிறார்கள். எல்லோரும் சேர்ந்துதான் விளையாடுவோம்” என்றது சுண்டெலி.

“நானும் வருகிறேன்.”

இரண்டும் வேகமாக ஓடின. அரைமணி நேரப் பயணத்துக்குப் பிறகு கேரட் தோட்டத்துக்குள் நுழைந்தன.

“அடடா! இப்படிக் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கேரட் விளைந்திருப்பதை முதல் முறை பார்க்கிறேன்!” என்று வியப்போடு சொன்னது குட்டி முயல்.

”சரி, கேரட்டைப் பறித்துச் சாப்பிடு. பிறகு விளையாடுவோம்” என்றது சுண்டெலி.

”தோட்டக்காரரிடம் நாம் அனுமதி வாங்கவில்லையே? பிறகு எப்படிச் சாப்பிடுவது?” என்று கேட்டது குட்டி முயல்.

“அவர் இப்போது இங்கே இருக்க மாட்டார். நாம் சாப்பிடுவது யாருக்கும் தெரியாது. அப்படியே நாம் அனுமதி கேட்டாலும் சாப்பிடுங்கள் என்று சொல்லிவிடுவாரா என்ன? யோசிக்காமல் சீக்கிரம் சாப்பிடு. நம் நண்பர்கள் காத்திருக்கிறார்கள்” என்றது சுண்டெலி.

ஒரு கேரட்டைச் சுவைத்த குட்டி முயல், “ஆஹா!  இப்படி ஒரு சுவையான கேரட்டை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை. என் அப்பாவும் அம்மாவும் கொண்டுவரும் முள்ளங்கியும் இலைகளும் எனக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. இந்த கேரட்போல் அவற்றில்  சுவையில்லை. இங்கு தினமும் அழைத்து வருவாயா?” என்று கேட்டது.

“ம்… தாராளமாக அழைத்து வருகிறேன். இந்தத் தோட்டம் மட்டுமில்லை. இந்த இடத்தைச் சுற்றி இன்னும் நிறைய தோட்டங்கள் இருக்கின்றன. நாம் தினமும் வரலாம். பசி தீரும்வரை கேரட்டுகளைச் சாப்பிடலாம்” என்று சிரித்தது சுண்டெலி.

“இதுவரை எனக்கு இந்த இடங்கள் எல்லாம் தெரியாமலே போய்விட்டது. இப்படி ஒரு அற்புதமான இடத்தைக் காட்டியதால் இனி நீதான் என் நண்பன்” என்றது குட்டி முயல்.

இருவரும் நன்றாக விளையாடி மகிழ்ந்தனர். குட்டி முயலுக்குப் புதிய நண்பர்கள், புதிய இடம் என எல்லாம் மிகவும் பிடித்துவிட்டன.

“சரி, தோட்டக்காரர் வரும் நேரமாகிவிட்டது. நாம் போகலாமா?” என்றது சுண்டெலி.

“தோட்டக்காரர் வந்தால் என்ன? நாம் இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாமே?”

“தோட்டக்காரர் நம்மைக் கண்டால் சும்மா விடமாட்டார். போவதுதான் நல்லது.”

இரண்டும் தங்கள் இருப்பிடத்தை நோக்கி ஓடின.

“என்ன, கேரட்டுகளை எடுத்துட்டு வர்றே? இன்னும் பசிக்கிறதா?” என்று கேட்டது சுண்டெலி.

“என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும்.”

“நல்ல பிள்ளையாக இருக்கிறாய்!”

தன் அப்பாவும் அம்மாவும் கவலையோடு இருப்பதைப் பார்த்த குட்டி முயலுக்கு வருத்தமாக இருந்தது.

“எங்கே போனாய்? உன்னைக் காணவில்லை என்று பயந்துவிட்டோம்” என்று விசாரித்தபடியே, குட்டி முயலைக் கொஞ்சியது தாய் முயல்.

“அம்மா, ஏன் கவலைப்பட வேண்டும்? நான் விளையாடத்தான் போயிருந்தேன்.”

“சரி, அதென்ன உன் கையில்?” என்று கேட்டது அப்பா முயல்.

“அப்பா, இன்று எனக்குச் சுண்டெலி நண்பனாகக் கிடைத்தான். அவன்தான் தூரத்தில் இருக்கும் அழகான கேரட் தோட்டம் ஒன்றைக் காண்பித்தான். அந்த தோட்டத்தில் இருந்துதான் இதை எடுத்து வந்தேன் உங்கள் இருவருக்காக” என்று மகிழ்ச்சியோடு சொன்னது குட்டி முயல்.

அப்பா முயலுக்கும் அம்மா முயலுக்கும் கோபம் வந்தது.

“நீங்கள் கேரட் எடுப்பதைத் தோட்டக்காரர் பார்க்கவில்லையா?” என்றது அம்மா முயல்.

“அவர் பார்ப்பதற்கு முன்பே நாங்கள் ஓடி வந்துவிட்டோம்.”

“நீ கேரட் எடுத்து வருவதை அந்தத் தோட்டக்காரர் பார்த்திருந்தால் உன் நிலைமை என்ன ஆகியிருக்கும் என்று யோசித்துப்பார். அடுத்தவர்கள் பார்த்துவிடக் கூடாது என்று நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தவறுதான். அது அப்போதைக்கு நமக்குச் சந்தோஷத்தைத் தரும். ஆனால், அதுதான் நம்மை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும். அதற்காகத்தான் நாம் நல்ல நண்பர்களுடன் சேர வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறேன்” என்றது அம்மா முயல்.

“உனக்குத் தேவையானதை நாங்கள் தருகிறோம். உனக்கான நேரம் வரும்போது நீயும் எங்களைப்போல் வெளியே சென்று வரலாம். அதுவரை நல்ல நண்பர்களுடன் சேர்ந்து நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்” என்றது அப்பா முயல்.

“இருவரும் என்னை மன்னித்துவிடுங்கள். நான் செய்த தவறை உணர்ந்துவிட்டேன். இனிமேல் இதுபோல் செய்ய மாட்டேன்” என்றது குட்டி முயல்.

அம்மாவும் அப்பாவும் குட்டி முயலை அணைத்து, முத்தம் கொடுத்தன.

ஓவியம்: கிரிஜாகதை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x