Published : 22 Jun 2019 12:16 PM
Last Updated : 22 Jun 2019 12:16 PM

முதுமையும் சுகமே 10: தூக்கம் கண்களைத் தழுவாத பிரச்சினை

இன்று, நேற்று இல்லை கோவலன் கண்ணகி காலத்திலேயே இரவிலும் இயங்கியது அந்த ஊர். பகலிரவு பாராமல் அன்றுபோல் இன்றும் இயங்கி வரும் நகரம்.

இப்படிக் காலங்காலமாக விழித்திருப்பதாலேயே இந்த நகரத்துக்கு தென் ஆசியாவின் ‘தூங்கா நகரம்’ என்ற பெயர்கூட இருக்கிறது. அந்த நகரம் சங்கத் தமிழ் வளர்த்த மதுரை என்று கண்டுபிடித்திருப்பீர்கள்.

இதை இங்கு சொல்வதற்குக் காரணம் இருக்கிறது. அக்காலம் முதல் இந்த ஊர் மக்கள் இப்படி விழித்துப் பழகியாதல், மதுரை நகரின் 30% மக்கள் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக மதுரை ராஜாஜி மருத்துவமனையின் தலைமை உளவியல் நிபுணர் டாக்டர் சி.பி. ரவீந்தர்நாத் கூறியிருக்கிறார்.

தூக்கமின்மை இன்று வயது வித்தியாசமின்றி பரவலாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, முதுமை தூக்கமின்மையின் உச்சம். அதிலும் முதுமையானவர்களில் 50% பேர் உறக்கமின்மயால் பாதிக்கப்பட்டிருப்பதாக 'தேசிய உறக்க அமைப்பு' சொல்கிறது. இதற்கான காரணங்களைப் பட்டியலிட்டால், அன்று வெள்ளைக்காரன் 2,500 கிலோமீட்டர் தொலைவுக்குப் போட்ட உப்பு வேலியைப் போல், அது நீண்டுகொண்டே போகும்.

சமநிலைத் தூக்கம்

மேடேறிச் செல்லத் திணறும் அரசுப் பேருந்துபோல இன்று கணக்கற்ற முதியவர்கள், அது பணக்காரரோ பாமரரோ உறக்கமின்றித் தவிப்பதற்கான காரணங்களையும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் புரிந்துகொண்டால் நம்மை தற்காத்துக்கொள்ள முடியும் தானே?

பிறந்தபோது கும்பகர்ண உறக்கமாயிருந்த (ஒரு நாளைக்கு 14 – 17 மணி நேரம்) தூக்கம், முதுமையில் துக்க வீட்டின் தூக்கம்போல் நான்கு மணி நேரத்துக்கும் கீழாகக் குறைந்து போகிறது.

‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்னும் வள்ளுவரின் குறள், ‘மீள் துயில் விரும்பேல்’ என்ற ஔவையாரின் வாக்கு ஆகியவற்றுக்கு ஏற்ப மிகு தூக்கம் நோய்களின் வளர்பிறை என்றால், தூக்கமின்மை நோய்களின் படர்க்கொடி - பாலை நிலத்தில் பரவும் வெயிலைப்போல.

நான்கு நிலைகள்

உறக்கமானது மொட்டு மலர்வதைப் போல இயல்பாக மலர வேண்டும். அந்த இயல்பான உறக்கமானது நான்கு நிலைகளில் ஏற்படும்.

நிலை I: நினைவுக்கும் உறக்கத்துக்குமான இடைப்பட்ட நிலை. இது 15 நிமிடம் நீடிக்கும்.

நிலை II: இதயத் துடிப்பு சற்றே குறையும், மூளையும் தன் சிந்தனை வேகத்தை குறைத்துக்கொண்டே வரும். இதுவும் 15 நிமிடம் நீடிக்கும்.

நிலை III: உறக்கத்தின் முக்கியமான நிலை, இந்த நிலையை Non- REM (அ) Delta stage என்கிறார்கள். இந்த நிலையில்தான் உடல் செல்கள் தன்னை புதுப்பிக்கும் வேலைகளைச் செய்யும். நாள் முழுதும் நகரத்தில் ஓடிய பேருந்து மறுநாளும் பயணிக்க, இரவில் பழுதுநீக்கி சீர்படுத்தப்படுவதைப் போல.

மேலும் உடல் வெப்பநிலை சற்றே குறையும், ரத்த அழுத்தமும் சற்று மட்டுப்படும். இந்த நிலைக்கு வந்துசேர, முதல் நிலையில் இருந்து சுமார் ஒன்றரை நேரம் பிடிக்கும்.

நிலை IV(REM): இந்த நிலையில்தான் கனவுகள், நரநர என்று பற்களை கடித்தல், சில நேரம் பக்கத்தில் படுத்திருப்பவர்களை உதைத்தல் போன்ற சேட்டைகளும் நடக்கும்.

இந்த நிலையில் இமைகள் மூடி இருந்தாலும் கண்கள் சுழன்ற வண்ணம் இருக்கும், இதயத் துடிப்பு அதிகரிக்கும், உடல் வெப்பநிலை, சுவாசம், ரத்த அழுத்தம் சற்று மிகைப்பட்டிருக்கும். இதைத்தான் இயல்பான உறக்கம் என்போம்.

முதுமையில் உறக்கமின்மைக்கான காரணங்கள்

# ஹார்மோன்கள் செய்யும் கலகத்தால் (குறிப்பாக Cortisole, Estrogen)

# உறக்கத்துக்கு முக்கிய காரணமான ‘மெலடோனின்’ (melatonin) சுரப்பு குறைபாடு.

# ஓய்வு காலத்துக்குப் பிறகு ஏற்படும் வாழ்க்கை முறை மாற்றங்கள், பிடிப்பற்ற வாழ்வு, அவநம்பிக்கை.

# பகலில் தொடர்ந்து எடுக்கும் ஓய்வு, உறக்கம்.

# படுக்கை அறை சார்ந்த பிரச்சினைகள்.

# எதிர்காலம் பற்றிய பயம், எதிலும் பயம் - தெனாலியின் பயம் போல.

# நோய்கள்-மருந்துகளால் வந்திருக்கும் நோய்களைப் பொருத்தும், எடுத்துக்கொளும் மருந்துகளைப் பொருத்தும் உறக்கமின்மை ஏற்படலாம். எடுத்துக்காட்டு: இதயம் சார்ந்த நோய்கள், மூட்டு வலி,

# குடல் பாதை சார்ந்த நோய்கள், சிறுநீர் பெருக்கி மருந்துகள்.

# மனநலன் சார்ந்த பிரச்சினைகளுக்காக எடுக்கும் மருந்துகள், குறிப்பாக மனச்சோர்வுக்கான மருந்துகள்.

# ரத்த அழுத்தம் குறைய, சுவாசப் பிரச்சினை தீர உட்கொள்ளும் மருந்துகள்.

# பார்க்கின்சன் நோய், ஞாபக மறதி நோய், நுரையீரல் பிரச்சினைகள் குறிப்பாக COPD என்கிற நாட்பட்ட சுவாச நோய்.

கட்டுரையாளர்,

குடும்ப நல - முதியோர்

மருத்துவ ஆலோசகர்

தொடர்புக்கு: drashokshpl@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x