Published : 08 Jun 2019 10:16 AM
Last Updated : 08 Jun 2019 10:16 AM

கூடுதல் தொகைக்குக் கூட்டுக்கடன்

வீடு வாங்க, வீடு கட்ட நினைக்கும் நம்மில் பலரும் வீட்டுக் கடனைத்தான் நம்பி இருப்போம். என்னதான் சேமிப்பு இருந்தாலும் அது நம் கடனுக்கான ஆரம்ப கட்டத் தொகையாக மட்டுமே பயன்படுத்த முடியும். மீதி ஏறத்தாழ 80 சதவீதத் தொகைக்கு வங்கிக் கடனை எதிர்பார்த்தே இருப்போம்.

வங்கிகள் நமது திரும்பச் செலுத்தும் திறனைக் கொண்டே நமக்குக் கடன் அளிக்க முன்வரும். நமது வருமானத்துக்காக அளித்திருக்கும் சான்றைக் கொண்டு நமது திரும்பச் செலுத்தும் தொகையை வங்கிகள் பரிசோதிக்கும். இதில் ஏற்கெனவே உங்களுக்கு நிலுவையில் இருக்கும் கடனும் கணக்கில் கொள்ளப்படும்.

உதாரணமாக தனிநபர்க் கடனுக்கான நாம் ஒரு தவணையைச் செலுத்திவரும் பட்சத்தில் அதுவும் கணக்கில் கொள்ளப்படும். இதுபோக மீதமுள்ள தொகையில் உங்களது மாதச் செலவும் கணக்கில் கொள்ளப்படும். இம்மாதிரியான சூழலில் சில சமயம் உங்களுக்கு உரிய தொகை கடனாகக் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

இந்தச் சூழலில் உங்கள் கடனுக்கு இணை விண்ணப்பதாரைச் சேர்த்து கடன் விண்ணப்பிக்கும்போது கூடுதல் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக கணவன், மனைவி இணைந்து விண்ணப்பிக்கும்போது இருவரது வருமானத்தையும் வங்கிகள் கணக்கில் எடுத்துகொள்ளும்.

இதற்கு இருவருமே தங்களது வருமானத்துக்கான சான்றிதழ்களை வங்கியில் செலுத்த வேண்டும். வங்கிக் கணக்கு விவரங்கள், வருமான வரித் தாக்கல் செய்த விவரங்கள் ஆகியவற்றோடு வாங்கப் போகும் வீடு சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் வழங்க வேண்டும். கட்டுமானத்துக்கான கடனாக இருந்தால் பொறியாளர் திட்டம், கட்டுமானத்துக்கான அனுமதி உள்ளிட்ட பல ஆவணங்களை இணைக்க வேண்டியிருக்கும்.

இந்த ஆவணங்களையும் வங்கியில் சமர்ப்பித்த பிறகு மற்ற விவரங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில் இருவரின் மாத வருமானத்தையும் அடிப்படையாகக் கொண்டு வங்கிகள் அவர்களது திருப்பிச் செலுத்தும் தொகையை நிர்ணயிக்கும். அதனடிப்படையில் கடன் அளிக்கும். இருவரின் வருமானமும் சேரும்போது கண்டிப்பாக கடன் கூடுதலாகக் கிடைக்கும். கணவன் – மனைவி மட்டுமல்லாது, தந்தை – மகன், அண்ணன் – தம்பி உள்ளிட்ட சொந்தங்களும் இணைந்து கூட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

- அனில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x