நாடாளுமன்ற உறுப்பினர்கள்: தகுதிகளும் அதிகாரங்களும்

நாடாளுமன்ற உறுப்பினர்கள்: தகுதிகளும் அதிகாரங்களும்
Updated on
2 min read

இந்தியாவின் 17-வது மக்களவை ஜூன் 17 அன்று முதல்முறையாகக் கூடியது. தேர்தலில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பா.ஜ.க.வைச் சேர்ந்த ஓம் பிர்லா மக்களவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்களவையைப் போலவே நாடாளுமன்றத்தின் இன்னொரு அவையான மாநிலங்களவைக்கும் புதிய உறுப்பினர்கள் சிலர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களில் சிலர் மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டதால், அவர்கள் ராஜினாமா செய்த இடங்களுக்குப் புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.

மாநிலங்களவை அமைப்பு

நாடாளுமன்றத்தின் மேலவை என அறியப்படும் மாநிலங்களவை, மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் மாநிலம் சார்பிலான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

ஒவ்வொரு மாநில எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவை இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுக்கு 18 இருக்கைகளும் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்துக்கு 31 இருக்கைகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கான உச்ச வரம்பு 250. பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பங்களித்தவர்களில் 12 பேரைத் தேர்ந்தெடுத்துக் குடியரசுத் தலைவர் எம்.பி.யாக நியமிப்பார். தற்போது மாநிலங்களவையில் 245 இடங்கள் இருக்கின்றன. 233 பேர் மாநிலங்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் 30 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மற்றபடி மக்களவை உறுப்பினர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் அனைத்தும் மாநிலங்களவைக்கும் பொருந்தும்.

மாநிலங்களவை எப்போதும் ஒட்டுமொத்தமாகக் கலைக்கப்படுவதில்லை. ஒரு மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள். பதவிக் காலம் முடிந்த பிறகு, காலியான இடங்களுக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்படும். இது தவிர உறுப்பினர்களின் மரணம். தகுதி இழப்பு, வேறு அரசுப் பதவிகளைப் பெறுவது உள்ளிட்ட காரணங்களுக்காக இருக்கை காலியாகும்போது வேறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

மாநிலங்களவையின் அவைத் தலைவராகக் குடியரசுத் துணைத் தலைவர் செயல்படுவார். உறுப்பினர்கள் தங்களுக்குள் ஒருவரை அவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுப்பார்கள்.

மக்களவையைப் போலவே மாநிலங்களவைக் கூட்டத் தொடரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது கட்டாயம் நடைபெற வேண்டும். பத்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் இல்லாமல் அவையை நடத்த முடியாது.

உறுப்பினர்களின் அதிகாரங்கள்

அவையில் பேச வாய்ப்பளிக்கப்படும்போது தங்கள் கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். அவையில் பேசிய எதற்காகவும் உறுப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது.

கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முந்தைய 40 நாட்களுக்கும் தொடர் முடிந்த பிறகு 40 நாட்களுக்கும் அவை உறுப்பினர்களை சிவில் குற்றங்களுக்காகக் கைதுசெய்யக் கூடாது. உறுப்பினரைக் குற்றவியல் வழக்கில் கைதுசெய்ய வேண்டும் என்றால் அவைத் தலைவரின் அனுமதியைப் பெற வேண்டும்.

இரண்டு அவைகளின் உறுப்பினர்களும் மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் சேர்ந்து வாக்களித்து குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இரு அவைகளின் உறுப்பினர்கள் குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அமைச்சரவையைக் கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் இரண்டு அவைகளுக்கும் அதிகாரம் உண்டு. ஆனால், அமைச்சரவையை நீக்கும் அதிகாரம் மக்களவைக்கு மட்டுமே உள்ளது.

அனைத்து சாதாரண மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று நிறைவேற்றப்பட்ட பிறகு சட்டமாக முடியும். ஆனால், நிதி மசோதாக்களை நிறைவேற்றும் அதிகாரம் மக்களவைக்கு மட்டுமே உண்டு.

மக்களவையில் நிறைவேற்றப்படும் நிதி மசோதா மாநிலங்களவைக்கு அனுப்பப்படும். மாநிலங்களவை 14 நாட்களுக்குள் அதை நிறைவேற்றத் தவறினால், மசோதா நிறைவேறிவிட்டதாகக் கணக்கில்கொள்ளப்படும்.

அதாவது மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமலே ஒரு மசோதாவைச் சட்டமாக நிறைவேற்ற நிதி மசோதா என்ற வழியை மக்களவை கையாள முடியும்.

இவை தவிர இன்னும் பல அதிகாரங்கள் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

உறுப்பினர்கள் தகுதியிழப்பு

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தாங்கள் விரும்பும்போது பதவியை ராஜினாமா செய்யலாம். இரண்டு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால் ஏதேனும் ஒரு பதவியை ராஜினாமா செய்தாக வேண்டும்.

இரு அவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் எதில் தொடர விரும்புகிறார் என்பதை 10 நாட்களுக்குள் தெரிவிக்காவிட்டால், அவரது மாநிலங்களவை பதவி பறிபோகும்.

இது தவிர, உறுப்பினர்களுக்கான அடிப்படைத் தகுதிகளை இழந்தவர்கள், கட்சித் தாவல் செய்த உறுப்பினர்கள், நீதிமன்றத்தால் ஏதேனும் ஒரு வழக்கில் தண்டிக்கப்பட்ட உறுப்பினர்கள், தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டவர்கள் ஆகியோர் பதவியில் நீடிக்கும் தகுதியை இழப்பார்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in