Published : 24 Jun 2019 10:53 AM
Last Updated : 24 Jun 2019 10:53 AM

இலக்கு: எலியா? வாலா?

அரசின் திட்டங்கள், அதில் நிர்ணயிக்கப்படும் இலக்குகள், இறுதியாக வெளியிடப்படும் அறிக்கை முடிவுகளின் புள்ளி விவரங்கள் இவை அனைத்துமே சமீபகாலங்களாகக் கேள்விக்குட் படுத்தப்பட்டு வருகின்றன. இவை வளர்ச்சியடைந்ததாகச் சொல்லப்படுகின்றன; ஆனால், வளர்ச்சியை உணர முடியவில்லை.

வேலை வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றன. ஆனால், வேலையின்மை உச்சத்தில் இருக்கிறது. இந்த முரண்பாடு ஏன்? இதற்கெல்லாம் காரணம் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்தான் இந்தக் கட்டுரை. 

மேலாண்மை வல்லுநர்களில் ஒருவரான பீட்டர் ட்ரக்கர் கூறியதாக ஒரு கூற்று உண்டு: “நீங்கள் எந்த ஒன்றை அளவிட முடியாதோ அதை மேலாண்மை செய்ய முடியாது”. வெற்றி அல்லது இலக்கு என்பது என்ன என்று வரையறை செய்யப்படாதவரை வெற்றி அல்லது இலக்கை அடைந்துவிட்டோமா என்று கணிக்க இயலாது.

வெற்றி, இலக்கு இரண்டையும் வரையறுக்க ஒரு அளவுகோல் தேவைப்படுகிறது. ஆனால், சரியான அளவுகோலைத் தேர்வு செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. உதாரணமாக, ஒரு ஆணி தயாரிக்கும் தொழிற்சாலையின் உரிமையாளர் தொழிலாளர்கள் செய்து முடிக்கும் ஆணிகளின் எண்ணிக்கையை செயல்திறனின் அளவுகோலாகப் பயன்படுத்த முயன்றபோது அந் நிறுவனத்தின் பணியாளர்கள் மிக அதிக எண்ணிக்கையிலான, பயன்பாட்டுக்கு உதவாத மிகச்சிறு ஆணிகளை உற்பத்தி செய்தனர்.

இதனால், அடுத்தமுறை அவர் ஆணிகளின் மொத்த எடையை உற்பத்தியின் அளவுகோலாகப் பயன்படுத்த முயற்சித்தபோது தொழிலாளர்கள் பயனற்ற அதிக எடை கொண்ட, குறைவான எண்ணிக்கையிலான  மிகப்பெரிய ஆணிகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

இதைவிட சிறந்த உதாரணம், வியட்நாமில் எலிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஒரு திட்டத்தை அறிவித்தது. எலிகளைக் கொன்று அவற்றின் வாலை மட்டும் (சுகாதாரக் காரணங்களுக்காக) வெட்டியெடுத்து அரசு அலுவலகங்களுக்கு கொண்டுவருவோருக்கு வால்களின் எண்ணிக்கைக்கேற்ப ஈட்டுத்தொகை அளிக்க அரசு முடிவு செய்தது.

பலர் எலிகளைப் பிடித்துக் கொல்லாமல், அதன் வாலை மட்டும் வெட்டி எடுத்துவந்து அரசு அலுவலகங்களில் காண்பித்து ஈட்டுத்தொகை பெற்றனர். வால்களை மட்டுமே எண்ணிக்கொண்டிருந்ததால், எலிகளின் எண்ணிக்கை குறையவே இல்லை.

தொடர்ந்து மக்களும் வாலை மட்டும் வெட்டி கொண்டுவந்து ஈட்டுத்தொகை பெற்றுவந்தனர். கடைசியில் அரசு அத்திட்டத்தையே கைவிட்டது. இதேபோலத்தான் பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் டெல்லியில் பாம்புகள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பாம்புகளைக் கொன்று எடுத்துவருவோர்க்கு சன்மானம் அறிவித்தது.

ஆரம்பத்தில் பாம்புகளைக் கொன்று லாபம் பார்த்தவர்கள், பாம்புகளின் எண்ணிக்கைக் குறைந்ததும் பலரும் பாம்புகளையே வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் இத்திட்டத்தை அரசு கைவிட, பாம்புகளை வளர்த்தவர்கள் அவற்றை மீண்டும் பொதுவெளியில் உலாவும்படி விட்டுவிட்டனர்.

இப்படித்தான் அரசோ, நிறுவனமோ தனது நோக்கத்தை அடையும் பொருட்டு ஒரு செயல் திட்டத்தைத் தீட்டுகின்றன, அதன் வெற்றியை அளவிட ஒரு இலக்கை நிர்ணயிக்கின்றன. ஆனால், பல சமயங்களில் நிர்ணயிக்கப்படும் அந்த அளவைகளே இலக்காக மாறிவிடுவதால், முக்கியமான இறுதி நோக்கம் அடையப்படாமல் தோல்வியைச் சந்திக்கும் நிலை உண்டாகிறது.

இதனால் பொதுநலன் பெரிதும் பாதிக்கப்பட்டு, அளவீடுகளில் சில தனிமனிதர்கள் மட்டும் பெரும் பயனை அடைந்துவிடுகிறார்கள். அதாவது நோக்கம் எலியாக இருந்தாலும், நிர்ணயிக்கப்படும் இலக்கு என்பது எலிக்கு பதிலாக வாலாக மட்டுமே இருக்கிறது. இதுதான் இங்குள்ள பிரச்சினை.

இத்தகைய சிக்கல்களை இரத்தினச் சுருக்கமாக முன்வைக்கிறார் சார்லஸ் குட்ஹார்ட் (Charles Goodhart) என்னும் லண்டன் பொருளியல் கல்வியகத்தின் பேராசிரியர். இவருடைய குட்ஹார்ட் விதி (Goodhart's Law) என்ன சொல்கிறதெனில் ‘அளவையே இலக்காக மாறிவிடும்போது அது ஒரு நல்ல அளவையாக இருக்கத் தவறிவிடுகிறது’ என்கிறது.

ஒரு நிறுவனம் தன்னுடைய இலக்குகளை அடையும் பொருட்டு, ஊழியர்கள் பலரைப் பணியில் அமர்த்தி சிறுசிறு வேலைகளாக ஒதுக்கி, அவர்களுக்கென ஒரு இலக்கை நிர்ணயிக்கிறது. அவ்வாறு பிரித்தளிக்கப்படும் பணிகளை பணியாளர்கள் திறம்பட செய்கிறார்களா இல்லையா என்று கண்டறிய நிறுவனம் பல்வேறு அளவைகளைப் பயன்படுத்துகிறது.

இங்கே சிக்கல் என்னவெனில் ஒவ்வொருவரும் தனக்கு இடப்பட்ட பணியின் அளவை எட்டுவதிலேயே குறியாக இருப்பார்களேயொழிய நிறுவனத்தின் மொத்த இலக்கையும் அடைவதில் தங்களின் பங்கு என்ன என்பதை உணர்ந்து உளப்பூர்வமாகப் பணியாற்ற வேண்டிய கட்டாயமில்லை.

மிகச்சிறந்த உதாரணம்: பள்ளிகள் கல்வித்தரத்தை அளவிட மதிப்பெண்களை அளவையாகப் பயன்படுத்துகின்றன. இதனால் ஆசிரியர்கள் திரும்பத் திரும்பத் தேர்வுகள் நடத்தி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுவதிலேயே கவனத்தைச் செலுத்தி அவர்களின் புரிதல் மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்துவதை முற்றிலும் கைவிட்டு விடுகின்றனர்.

அவ்வாறு செய்யும்போது கல்வியின் அடிப்படை நோக்கம் ‘அறிவுபெறுதல்’ என்பதிலிருந்து மதிப்பெண் பெறுவதாக மாறிவிடுகிறது. இதேபோல ஒரு பெரிய வர்த்தக மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர்களின் செயல்திறனை அளவிட அவர்கள் சராசரியாக ஒரு நாளில் செய்து முடிக்கும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்து அளவீடு செய்தால் நோயாளிகளின் கதி என்னவாகும் எனச் சொல்லத் தேவையில்லை.

இதேநிலைதான், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் நிலையும். பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் பணிபுரிவோரின் செயல்திறனை அளவிட அவர்கள் வெளியிடும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை அளவையாகப் பயன்படுத்துவது ஒரு பொது நடைமுறை.

இங்கே முக்கியமான கருதுகோள் என்னவெனில் ஆராய்ச்சிகள் சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளுக்கும், ஆராய்ச்சிக் கட்டுரைகளின் எண்ணிக்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதேயாகும். ஆனால், ஆய்வுக்

கட்டுரைகளை அளவையாகப் பயன்படுத்தும் போது, ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதே, இலக்காக மாறிவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக, ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடுவது கடினம் என்ற நிலை ஏற்படும்போது வெளியீடுக்கு ஏற்ற வகையில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுவதற்குத் தேவையான புள்ளி விவரங்கள் பொய்யாகப் புனையப்படுகின்றன. இதை அறிவியல் மொழியில் p-ஹேக்கிங் (p–hacking) என்று சொல்லுவார்கள்.

இதன்மூலம் தரக்குறைவான ஆய்வுக்கட்டுரைகள் பெருகி, ஆய்வுக் கட்டுரைகளின் எண்ணிக்கைக்கும் சமூகத்திற்குப் பயன்படும் வகையிலான ஆய்வு முடிவுகளுக்கும் இடையில் இருப்பதாகக் கற்பிதம் செய்யப்பட்ட நெருக்கமான உறவு மிகவும் வலுவிழந்துவிடுகிறது.

அண்மையில் மைய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையைச் (CSIR) சார்ந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பல ஆய்வுக் கட்டுரைகள் புனைவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது தெரிய வந்தது. இது போன்ற நிலைதான் பல பல்கலைக்கழகங்களிலும் பெரும் ஆராய்ச்சி நிறுவனங்களிலும் தற்போது நிலவுகின்றன.

இன்றைய தினம் ஆய்வுக்கட்டுரையையும் பணத்தையும் அனுப்பினால் நாளையே உங்கள் கட்டுரைகளைப் பதிப்பிக்கும் ஆய்விதழ்கள் (journals) அண்மைக்காலத்தில் பெருகிவிட்டன. ஆக, "கட்டுரை வெளியிடு அல்லது அழிந்துபோ" (publish or perish) என்கிற நிலையிலிருந்து "கட்டுரை வெளியிட்டே அழிந்துபோ" (publish and perish)  என்கிற நிலைக்கு நாம் மூர்க்கத்தனமாக "முன்னேறி"யுள்ளோம் என்பது மிகுந்த வருத்தமளிக்கும் செய்தியாகும். இதற்குத் தீர்வு, ஒற்றைப் பரிமாண அளவைகளுக்குப் பதிலாக பல்பரிமாண (multidimensional measures) அளவைகளுக்கு மாறவேண்டும்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் சமுதாய நல்வாழ்வு (social welfare) ஆகியவற்றை நேரடியாக அளவிட முடியாததால், மொத்த தேசிய உற்பத்தி (ஜிடீபி) போன்ற ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பொருளாதாரக்கூறு (feature of economy) ஒரு அளவையாகப் பயன்படுத்தப்படுகிறது.

கருதுகோள் என்னவெனில் மொத்த தேசிய உற்பத்தி அதிகரிக்கும்போது சமூக நல்வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பதேயாகும். அதாவது  சமூக நல்வாழ்வும் மொத்த தேசிய உற்பத்தியும் நேரடித் தொடர்பு (positive correlation) கொண்டுள்ளன என்பதாகும்.

அண்மையில் நமது பிரதமர் இந்தியப் பொருளாதாரம் அடுத்த ஐந்தாண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் மதிப்புடையதாக வளர்ச்சியடையும் எனக் கூறியுள்ளது உற்று நோக்கத்தக்கது. இவ்வாறான சமயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் அக்கூற்றைத் (மொத்த தேசிய உற்பத்தி) தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திச் சிதைத்து விடுவதுண்டு. அதாவது, பிரதமர் அறிவித்த இலக்கை கணிக்கப் பயன்படுத்தப்படும் உட்

கூறுகள் பொய்யாகப் புனையப்படுகின்றன. உற்பத்திக்கு எவ்வகையிலும் தொடர்பில்லாத போலித் தொழில் நிறுவனங்கள் மற்றும் உற்பத்திசாரா நிதிப்பரிவர்த்தனைகள் போன்றவற்றை மொத்த தேசிய உற்பத்தியில் சேர்த்துக் கணக்கிடுவது போன்றவை நடக்கும் வாய்ப்புகள் உருவாகின்றன. அண்மைக்காலத்தில் நம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியை அளவிடும் முறையை மைய அரசு மாற்றியமைத்ததுகூட இத்தகைய தவறான அளவீடுகளுக்கு வழிகோலியுள்ளது என்பது பல பொருளியல் வல்லுநர்களின் கருத்தாகும்.

தேசிய மாதிரி அளவீட்டு நிறுவனத்தையும் (NSSO) மைய புள்ளியியல் நிறுவனத்தையும் (CSO) இணைத்து தேசிய புள்ளியியல் நிறுவனத்தை (NSO) நிறுவிட மைய அரசு முனைந்துள்ளதைக் குறைகூறியுள்ள பொருளியல் வல்லுநர்கள் மேற்கூறிய கருத்தை வெளியிட்டுள்ளனர்.

மேலும் மொத்த தேசிய உற்பத்தி என்கிற அளவையை அதிகப்படுத்துவது என்கிற இலக்கை மட்டுமே கொண்டு செயல்பட்டால், சமுதாய நல்வாழ்வின் பிற அம்சங்களான மக்களிடையேயான பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்வதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு. மேலும், மொத்த தேசிய உற்பத்திதான் பொருளாதார வளர்ச்சி என்றோ சமுதாய நல்வாழ்வின் சிறந்த அளவுகோல் என்றோ கூறவும் முடியாது.

நவீனப்பொருளியலின் தந்தை எனப்படும் பால் ஏ. சாமுவேல்சன் என்னும் பேராசிரியர், மொத்த தேசிய உற்பத்தியின் குறைபாடுகள் பற்றிக் குறிப்பிடும்போது "ஒருவன் தன்னுடைய சமையல்காரியை மணந்து கொண்டால் நாட்டின் ஜிடிபி குறைந்துவிடுகிறதே" என்று நகைச்சுவையாக நடைமுறை உண்மையைக் குறிப்பிடுகிறார்.

இது மட்டுமல்லாமல், மொத்த தேசிய உற்பத்தியைக் கணக்கிடும்போது இயற்கை வளங்களை அழிக்கின்ற மற்றும் சூழலியல் சீர்கேடுகளை உண்டாக்கும் தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை அப்படியே கணக்கிலெடுத்துக் கொள்வதுடன், நிறுவனம் உண்டாக்கிய சீர்கேடுகளைச் சரிசெய்யும்  சாதனங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியும் அத்துடன் சேர்த்துக் கணக்கிடப்படுகின்றன.

இதேபோல முற்றிலும் தவிர்க்கப்படக்கூடிய நோய்கள் மற்றும் விபத்துகளினால் பாதிக்கப்படுவோர்க்கு அளிக்கப்படும் மருத்துவச்சேவைகள் மட்டுமல்லாமல், ஊழல் புகார், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு ஆளானவர்கள் மீது தொடுக்கப்படும் வழக்குகளை நடத்தும் வழக்கறிஞர்களின் சேவைகள் போன்ற பொருளாதார உற்பத்திசாராத சேவைகளும், மொத்த தேசிய உற்பத்தியின் ஒரு பகுதியாகக் கணக்கிடப்படு கின்றன.

அதே சமயம் அண்மைக்காலத்தில் அதிகரித்துவரும் டிஜிட்டல் சேவைகளான இணையம், முகநூல் போன்ற சமூக வலை தளங்கள், இணைய வானொலி போன்ற பல சேவைகள் பல்வேறு பொருளாதாரப் பயன்பாடு களைக் கொண்டிருந்தாலும் அவை விலையில்லாமல் இலவசமாகப் பெறப்படுவதால் மொத்த தேசிய உற்பத்தியில் சேர்க்கப்படுவதில்லை.

மேலும் நாளுக்கு நாள் பன் மடங்கு அதிகரித்துவரும் பண்டங்கள் மற்றும் சேவைகளின் எண்ணிக்கை, அவற்றின் தரம் மற்றும் குணாம்சங்களில் மிகக் குறுகிய கால இடைவெளியில் ஏற்பட்டுவரும் பெரும் மாற்றங்கள் ஆகியன மொத்த தேசிய உற்பத்தியைச் சரியாகக்கணிப்பதில் பெரும் சவால்களை உண்டாக்கிவிடுகின்றன.

ஆக, சமூக நல்வாழ்விற்கும் மொத்த தேசிய உற்பத்தி என்கிற அளவைக்குமிடையில் பெருத்த இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. சுருக்கமாகச் சொன்னால் தேவைக்கேற்ற உற்பத்தி என்றில்லாமல் இலாபத்திற்கான உற்பத்தி என்ற அடிப்படைக் கோட்பாடுகூட வெறும் பொருளாதார வளர்ச்சி என்கிற ஒற்றைப் பரிமாண அளவையின் அடிப்படையில் அளவிடப்படுவதால் ஏற்படும் பிரச்சினையாகும்.

எனவே, ஒரு தொழில் நிறுவனம் அல்லது கல்வி நிறுவனம் அல்லது நாட்டின் பொருளாதாரம் ஆகிய எதுவானாலும் அவற்றின் வளர்ச்சி அல்லது செயல்திறனை அளவிட ஒற்றைப் பரிமாண அளவைகளுக்குப் பதிலாக பல்பரிமாண அளவைகளைப் (multi-dimensional performance measures) பயன்படுத்த வேண்டும்.

மனித வளர்ச்சிக் குறியீட்டெண் (Human Development Index), உண்மையான முன்னேற்றக் குறியீடு (Genuine Progress Indicator), மொத்த தேசிய மகிழ்வுக் குறியீட்டெண் (Gross National Happiness Index) ஆகியன மொத்த தேசிய உற்பத்திக்கு மாற்றாக முன்வைக்கப்படும் அளவைகளாகும். உண்மையான வளர்ச்சியும் மாற்றமும் வேண்டுமெனில், நம்முடைய இலக்குகளும் அளவைகளும் மாற வேண்டும்.

- பேராசிரியர் ரு.பாலசுப்ரமணியன்

rubalu@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x