Published : 21 Jun 2019 11:22 AM
Last Updated : 21 Jun 2019 11:22 AM

ஒரு பொம்மை காருக்கு ஏங்கினேன்! - தனுஷ் பேட்டி

பன்னாட்டு நடிகர்களுடன் முதன்மைக் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்த ஆங்கிலப் படம் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’. கென் ஸ்காட் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இந்தப் படத்தின் தமிழ் மொழி மாற்றுப் பதிப்பு ‘பக்கிரி’ என்ற தலைப்பில் இன்று வெளியாகும் நிலையில் ‘இந்து தமிழு’க்கு தனுஷ் அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி…

ஹாலிவுட் படத்தில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

புதிய பள்ளிக்கூடத்துக்குப் போய் இதுவரை கற்றுக்கொள்ளாத புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்ட அனுபவப் பாடமாக அமைந்துவிட்டது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நடிகர்கள், நடிக்கும் முறையில் அவர்கள் காட்டிய வெவ்வேறு அணுகுமுறைகள் என நான் பலவற்றைக் கற்றுக்கொண்டேன்.

படப்பிடிப்புக்கு முன் ஒரு ஹாலிவுட் தயாரிப்பு எப்படித் திட்டமிடப்படுகிறது என்பதைப் பார்த்து வியந்துபோனேன். அவர்களைப் போல் நாம் திட்டமிட்டால் படத் தயாரிப்புச் செலவில் பாதியைக் குறைத்துவிடலாம்.

நீங்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் எத்தகையது?

மொழி, இனம் கடந்து எல்லோராலும் தங்களைத் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளக்கூடியது. விளிம்பு நிலையில் வாழும் ஓர் இந்திய இளைஞன். நமக்கு இது இல்லையே என ஏங்குகிற மனநிலையும் தேடலும் கொண்டவன்.

இது வேண்டும், இது இருந்தால் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அவனை, வாழ்க்கை முற்றிலும் வேறொரு பாதையில் அனுப்பிவைக்கிறது. அந்தப் பயணத்தில் உண்மையாகவே எது மிகவும் முக்கியம் என்பதை வாழ்க்கை  கற்றுக்கொடுக்கிறது.

இந்தப் படத்தின் திரைக்கதையைப் படித்தபோது எனது பால்ய வாழ்க்கையின் நினைவுகள் வந்துபோயின. ஒரு ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்க வேண்டும் என்பதுதான் சின்ன வயதில் எனது கனவாக இருந்தது.

இந்தப் படத்தின் திரைக்கதைக்காகத் தழுவப்பட்ட நாவலை, நடிப்பதற்குமுன் வாசித்தீர்களா?

இல்லை. ஒரு நாவலைத் திரைக்கதையாக்கும்போது சில பகுதிகள் வேண்டாம் என்ற முடிவுக்கு வருவார்கள். நாவலில் இல்லாத சில விஷயங்களும் உள்ளே வரும். அது திரைக்கதை ஆசிரியரின் கிராஃப்ட். அதுதான் சினிமாவுக்குத் தேவை. அப்படியிருக்கும்போது நாவலைப் படித்துவிட்டு நடிக்கப்போனால், இவையெல்லாம் நாவலில் நன்றாக இருந்ததே.

ஏன் திரைக்கதையில் வரவில்லை என்ற மனத் தொந்தரவு உருவாகலாம். அதற்காகவே தவிர்த்தேன். திரைக்கதையை வாசித்துவிட்டு, அதில், நான் ஏற்ற அஜா கதாபாத்திரத்தை என் மனம் எப்படி எடுத்துக்கொள்ளுமோ அப்படித்தான் வெளிப்படுத்தினேன். இயக்குநர் கனடா நாட்டைச் சேர்ந்தவர். எனது கதாபாத்திரத்தை வடிவமைக்கும்பொருட்டு, இந்தியாவில் வந்து ஐந்து மாதங்கள் தங்கியிருந்து ஆய்வு நடத்திருக்கிறார்.

ஆனாலும், நம்முடன் பிறந்த இந்தியத் தன்மை என்பதை என்ன என்பதைப் புரிய வைப்பதில் அவருக்கு நானும் உதவினேன். அதேநேரம் எனது நடிப்பில் சில காட்சிகளில் வெளிப்பட்ட ‘மெலோடிராமாடிக்’ தன்மையின் அளவைக் கட்டுப்படுத்துவதில் அவர் ஆளுமை மிக்கவராக இருந்தார். மொத்தத்தில் இது கூட்டுழைப்பாக வெளிப்பட்டது.

இந்தியாவைக் கதைக்களமாகக் கொண்டு வெளிநாட்டவர்கள் எடுக்கும் ஆங்கிலப் படங்கள் பெரும்பான்மையும் இந்தியாவின் ஏழ்மையைக் கேலி செய்வதாகத்தானே இருந்து வந்திருக்கின்றன. இதுவும் அப்படியொரு படமா?

நானும் அப்படி நினைத்துக்கொண்டுதான் இந்தப் பட வாய்ப்பு வந்ததுமே மறுத்தேன். ஆனால், திரைக்கதையை ஒருமுறை படித்துவிடுங்கள் என்றார் இயக்குநர். திரைக்கதையைப் படித்தபிறகுதான் இந்தியாவின் உண்மையான ஆன்மாவை, அதன் பாரம்பரியத்தை, வரலாற்றை அந்தக் கதாபாத்திரம்  கர்வத்துடன் பேசுகிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். அதற்காகவே சர்வதேசப் பார்வையாளர்களால் வரவேற்கப்பட்ட அந்தப் படத்தைத் தமிழ் ரசிகர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தமிழில் கொண்டு வருகிறோம்.

கடந்த பதினேழு வருடங்களில் தரமான ‘ஆஃப் பீட்’ படங்கள், பக்கா கமர்ஷியல் படங்கள் என மாறி நடித்து வந்திருக்கிறீர்கள். எந்த வகைப் படம் உங்களை அதிகம் திருப்திப்படுத்தியிருப்பதாக நினைக்கிறீர்கள்?

இந்தப் படத்தில் நடிப்புக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறது, ரொம்பவே தரமான படம் என்று நினைப்போம். ஆனால், அது அவ்வளவாக நம்மைத் திருப்திப்படுத்தியிருக்காது.

அதேபோல இதுவொரு மசாலா படம், இதில் நமக்கு என்ன பெரிய சவால் இருக்கப்போகிறது என்று நினைத்தால், அதில் மலை மாதிரி

சவால் நிற்கும். உதாரணத்துக்கு ‘வடசென்னை’ படத்தின் அன்புவைவிட ‘மாரி’ கதாபாத்திரம் பண்ணுவதுதான் கடினமாக இருந்தது.

காரணம், மாரி, இந்தப் பக்கம் வந்தால் நல்லவனாக ஆகிவிடுவான், அந்தப் பக்கம் சாய்ந்தால் ரொம்ப கெட்டவனாக ஆகிவிடுவான். அந்த அளவுக்குக் கத்திமேல் நடக்கும் கதாபாத்திரம் அது. மாரியைத் திரையில் கொண்டுவர ரொம்பவே சிரமப்பட்டேன்.

எந்தவகைப் படமாக இருந்தாலும் அதற்கு எப்படிப்பட்ட வரவேற்பு கிடைக்கிறது என்பதுதான் ஒரு நடிகனைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது என நினைக்கிறேன்.

‘வடசென்னை’ விமர்சனரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படம். அதன் இரண்டாம் பாகத்தை நிறுத்திவிட்டு, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறீர்களே?

‘வடசென்னை’ இரண்டாம் பாகத்தின் திரைக்கதை தயாராக இருக்கிறது. நான் உட்பட அதில் நடித்த நடிகர்களும் எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறோம்.

ஆனால், இயக்குநர் வெற்றிமாறன் ‘வடசென்னை’ எனும் உலகத்திலிருந்து வேறொரு நிலப்பரப்புக்குப் போய்விட்டுவந்தால் ஒரு ‘ரிலீஃப்’ ஆக இருக்கும் என்று நினைத்தார். அதற்காகத்தான் ‘அசுரன்’ படத்தை உடனே தொடங்கிவிட்டோம். ‘வடசென்னை 2-ன் 30 நிமிட ஃபுட்டேஜ் ஏற்கெனவே எங்கள் கையில் இருக்கிறது.

‘அசுரன்’ படத்தில் இரட்டைக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகச் செய்திகள் வருகிறதே?

இல்லை. ஒரே கதாபாத்திரம்தான், வெவ்வேறு காலகட்டத்தின் நான்கு வெவ்வேறு தோற்றங்களில் வருகிறேன். வயதான தோற்றமும் அதில் ஒன்று. ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் வெற்றிமாறன் அதை வடிவமைத்திருக்கிறார்.

முன்பு ‘கொலவெறி’ பிரபலமானதைப் போல இப்போது ‘ரவுடி பேபி’ பாடல் எல்லைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அனிருத் போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து தனி ஆல்பம் வெளியிடும் எண்ணம் இருக்கிறதா?

எனக்கோ அனிருத்துக்கோ இப்போதைக்கு நேரமில்லை. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு அமையலாம். ‘கொலவெறி’ பாடலுக்குக் கிடைத்த வரவேற்பு காரணமாகத்தான் இங்கே ‘வைரல்’ என்ற வார்த்தையே பிரபலமானது. ‘கொலவெறி’ வழியாகக் கிடைத்த புகழ் எனது அதிர்ஷ்டம்தான்.

அது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், எனக்கு நடந்துவிட்டது. அந்தப் பாடல் வெளியான நேரத்தில் யூடியூப் அத்தனை பிரபலம் கிடையாது. இன்றைய ஸ்மார்ட்போன் காலத்தில் ‘கொலவெறி’ வெளியாகியிருந்தால் ‘ரவுடி பேபி’ பாடலை அது மிஞ்சியிருக்கலாம்.

ஒரு ரிமோட் கண்ட்ரோல் கார் வாங்குவதுதான் கனவு என்றீர்கள். இப்போது ரோல்ஸ்ராய் கார் வைத்திருக்கும் வெகுசில பிரபலங்களில் நீங்களும் ஒருவர். அந்த காரை வாங்கியபோது எப்படி உணர்ந்தீர்கள்?

ஆர்வக்கோளாறில் அதை வாங்கிவிட்டேன் என்று தோன்றுகிறது. கோஸ் சீரிஸ் 3 ரக கார் அது. அதன் விலையில் கால்வாசித் தொகைக்கே

இன்று சிறந்த கார்கள் வந்துவிட்டன. அதை ரீசேல் செய்யவும் முடியாது. யானை கட்டித் தீனிபோடுவது என்பார்களே அப்படிதான். ரொம்பப் பெரிய காராக இருப்பதால் அதை நினைத்த மாதிரி வெளியே எடுத்துக்கொண்டு போக முடியவில்லை.

தற்போது நடித்துவரும் படங்களைப் பற்றிக் கூறுங்கள்?

‘அசுரன்’ 90% முடிந்துவிட்டது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் பாதிப் படம் நடித்து முடித்துவிட்டேன். அடுத்து மாரி செல்வராஜ், ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் இயக்கங்களிலும் நடிக்க இருக்கிறேன். அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதும் உண்மைதான். ஆனால், அது தொடக்க நிலையில் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x