Last Updated : 18 Jun, 2019 11:01 AM

 

Published : 18 Jun 2019 11:01 AM
Last Updated : 18 Jun 2019 11:01 AM

கட்டணமின்றி ஆங்கிலம் கற்பிக்கும் ஆசான்

எப்போது வந்தாலும், எத்தனை பேர் வந்தாலும் சரளமாக ஆங்கிலம் பேசுவதற்காக ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’ வகுப்பை இலவசமாக நடத்திவருகிறார் ஆங்கில ஆசிரியர் அந்தோணி.

புதுக்கோட்டையைச் சேர்ந்த இவர்  பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், வேலைக்கு முயற்சிப்போர் என பலதரப்பட்டவர்களுக்கு கடந்த 21 ஆண்டுகளாக ஆங்கிலம் கற்பித்து சிறந்த வேலைவாய்ப்பு வழிகாட்டியாகத் திகழ்கிறார்.

வேலை தரும் மொழி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்திமாநகரைச் சேர்ந்தவர் அந்தோணி. கிராமப் புறத்தைச் சேர்ந்த பள்ளியில் படிக்கும்போதே ஆங்கிலத்தில் அழகாக எழுதுவது, சரளமாக வாசிக்கும் திறனால் சக மாணவர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

அதே ஆர்வத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை பட்டம் பெற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார். புதுக்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியரானார்.

ஒரு நாள் சுற்றறிக்கை ஒன்றை ஆங்கிலத்தில் தயாரிக்கும் பொறுப்பை பள்ளி நிர்வாகம் அந்தோணிக்கு தந்தது. கடும் முயற்சிக்குப் பிறகு அதை நேர்த்தியாகத் தயாரித்துக் கொடுத்திருக்கிறார். அந்தச் சம்பவமே பாடத்துக்கு அப்பால் யோசிக்க அவரைத் தூண்டியதாகச் சொல்கிறார்.

ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் 2002-ல் வெற்றி பெற்று 7 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்றுநராகவும், அதன்பிறகு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை ஆங்கில ஆசிரியராகவும் பணிபுரிந்து வருகிறார்.

“மொழி ஆசிரியர் என்பதால் அனைத்து வகுப்புகளுக்கும் நான் செல்வதுண்டு. அப்போது சம்பிரதாயத்துக்காக எந்த வகுப்புகளையும் நடத்த மாட்டேன். பாட வேளையில் பாடத்திட்டத் தில் உள்ளதை நடத்தியது போக மீதி நேரம் ‘ஸ்போக்கன் இங்கிலிஷ்’தான் நடத்துவேன். எழுத்து, உச்சரிப்பு, வாசிப்பில் சிறப்பு கவனம் செலுத்துவேன்.

ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டால் உலகில் எந்த மூலைக்குச் சென்றாலும் வேலைவாய்ப்பைப் பெற்றுவிடலாம். தாய்மொழியான தமிழ் அவசியம். அதன் வழியே வருமானத்துக்காக ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வது அவசியம். இதனால், ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆங்கில இலக்கிய மன்ற விழாவில்கூட மாணவர்களை முழுமையாக ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ச்சிகள் நடத்தச் சொல்கிறேன்.

சிறப்பு விருந்தினர்களைக்கூட ஆங்கிலத்திலேயே உரை நிகழ்த்த வைப்பேன். மாணவர்களுக்குப் புரியாது என்றாலும் அவரைப்போன்று நாமும் பேச வேண்டும் என்ற எண்ணத்தைத் தோன்றச் செய்யவே அவ்வாறு செய்வது” என்கிறார் அந்தோணி.

ஏட்டுச் சுரைக்காய் உதவாது!

தினமும் காலையிலும் மாலையிலும் இவருடைய வீட்டிலேயே இலவச வகுப்புகள் நடைபெறுகின்றன. கோடை விடுமுறை நாட்களில் புதுக்கோட்டையில் எந்த இடத்தில் மண்டபம் குறைந்த வாடகைக்குக் கிடைக்கிறதோ அங்கு ஷிஃப்ட் முறையில் ஆங்கில வகுப்புகளை நடத்துகிறார். இலவச வகுப்பு என்றாலும் இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக விளம்பரம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

“நான் எழுதி பிரசுரித்த Western book, Student’s sparks, Stay positive, Dream big, General knowledge உள்ளிட்டப் புத்தகங்களை மாணவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளேன். ஆனால், ஒருபோதும் ‘இந்தப் புத்தகத்தைப் படித்தால் 60 நாட்களில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம்’ என்பதுபோன்ற புத்தகங்களை நான் பரிந்துரைப்பதில்லை. அதை வாங்கிப் படித்தாலே ஆங்கிலத்தை தங்குதடையின்ற பேச முடியுமென்றால், இந்நேரம் லட்சக்கணக்கானோர் ஆங்கில வித்தகர்களாகி இருப்பார்களே!

என்னை நாடி வந்தோர் ஆங்கிலத்தை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் புலமையோடு இருப்பவர்கள் யாரும் வேலைவாய்ப்பு இல்லாமல் ஊருக்குள் சுற்றித் திரிவதில்லை. ஆனால், ஆங்கிலம் பட்டம் பெற்றுவிட்டு, அதில் புலமையில்லாததால் வேலை இன்றி தவிப்பவர்கள் பலர்.

மாணவர்களுக்காக ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் செலவு செய்து வருகிறேன். கடந்த 21 ஆண்டுகளில் பள்ளி மாணவர்கள் உட்பட 10,000 பேருக்கு வகுப்பு எடுத்துள்ளேன். அதில் நூற்றுக்கணக்கானோர் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்” என்கிறார் அந்தோணி.

எல்லாமே வணிகமயமாகப் பார்க்கப்படும் சூழலில் தான் பட்ட கஷ்டத்தைப் பிறர் படக்கூடாது என்பதற்காக ஆங்கிலத்தைக் கற்றுக்கொடுத்து வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் அந்தோணி, நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு ஏணியாகச் செயல்படுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x