Published : 03 Jun 2019 11:29 AM
Last Updated : 03 Jun 2019 11:29 AM

அன்று ஆன்டெனா, இன்று டிஷ், நாளை?

வணக்கம். சென்னை தொலைக்காட்சி நிலையம். பாண்ட் ஒன்று சேனல் நான்கில் ஒளி அறுபத்தி ஐந்து புள்ளி மூன்று ஐந்து மெகாஹர்ட்சிலும் ஒலி அறுபத்தி ஏழு புள்ளி ஏழு ஐந்து மெகாஹர்ட்சிலும் இன்றைய மாலை ஒளிபரப்பு ஆரம்பம்.

மேற்கண்ட பத்தி புரியவில்லை எனில் உங்களுக்கு நிச்சயமாக நாற்பது வயது ஆகியிருக்காது. இல்லை, நீங்கள் ஒரு ஞாபக மறதி கேஸ். தமிழ்நாட்டில் 1975 சுதந்திர தினத்தன்று டிவி ஒளிபரப்பு துவங்கிய புதிதில் டிவி புரோக்ராம் பார்க்க ஊருக்கு முன்னால் டிவியை போட்டு அது ‘கூ’ என்று கத்தி நிறுத்தும் வரை காத்திருந்து பின் குழப்பமாய் டிடி உருண்டை தோன்றி பிளாக் அண்டு வொயிட்டில் ‘டேண் ட டேன் டேன்’ என்று ஒப்பாரி வைத்து உருண்டு முடிந்து தெளிவாய் தெரிந்து அதன் பின் ஸ்க்ரீனில் நபரோ நபியோ தோன்றி கை கூப்பி நம்மை தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்க கூறிய வார்த்தைகள்தான் முதல் பத்தியில் இருப்பவை.

எப்பேர்பட்ட நிகழ்ச்சிகள். அதன்பின்தான் எத்தனை மாற்றங்கள். உழைப்பவர் உலகில் மனைமாட்சி மலர வயலும் வாழ்வும் பார்த்து வொண்டர் பலூன் பறக்கவிட்டு அதன் எதிரொலியின் முன்னோட்டத்தில் ஞாயிறு மாலை அறுதல் பழசான பாடாவதி படத்தைப் பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்த அந்த பிளாக் அண்ட் வொயிட் வாழ்க்கை பின் டில்லியில் நடந்த ஆசியப் போட்டி தயவில் கலராகி பல காலம் பொறுமை காத்ததன் பலனாக ‘மெட்ரோ’ என்ற இரண்டாவது சேனலாய் மலர்ந்து அதன் பின் வேகமெடுத்து கேபிள், சாடிலைட், தனியார் டிவி, டிடிஎச் என்று குட்டிப்போட்டு கூட்டம் சேர்த்து…..சுதந்திர தினம் அன்று பிறந்த ஒளி/ஒலி மொத்தமாய் பின் நம் சுதந்திரத்தை பறித்த கதைச் சுருக்கம்தான் டெலிவிஷன்!

டவரில் பிறந்து, ஆண்டெனாவில் எழுந்து கேபிளில் வளர்ந்து டிஷ்ஷாக மாறி வான்வழி வீடு தேடி வரும் டிவியின் அடுத்த கட்டம் ஆரம்பமாகியிருக்கிறது. இன்டர்நெட் மூலம் வீடியோ ஒளிபரப்பப்பட்டு டிவியைத் தாண்டி கம்ப்யூட்டர், லேப்டாப், ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் விழிகளுக்கும் செவிகளுக்கும் ஃபுல் மீல்ஸ் பரிமாறும் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. இதை Over-the-top (OTT) என்கிறார்கள். சைலன்ட் சுனாமியாய் வளரும் இப்பொருள் பிரிவு நம் வாழ்க்கையை, வியாபாரத்தை புரட்டிப்போடப் போவது பலருக்கும் இன்னமும் புரிந்தபாடில்லை!

டிவி கண்ணகியை கட்டிக்கொண்டு அழும் கோவலா, சரசுக்கு ரா ரா என்று மலையாள பட போஸ்டர் கணக்காய் போதையோடு அழைக்கிறாள் ஓடிடி மாதவி. கோவலர்களும் அசுர வேகத்தில் அவளிடம் ஐக்கியமாகி வருகிறார்கள். இரண்டு வயது கூட ஆகாத ஓடிடி மார்க்கெட் இன்று 2,500 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல். இன்னும் மூன்று வருடத்தில் ஆறாயிரம் கோடியை தாண்டும் என்கிறார்கள்.

உலகின் டாப் டென் ஓடீடீ மார்க்கெட்டில் இந்தியா நிச்சயமாய் நுழையுமாம். ஆன் செய்த டீவியை ஆறு மணி நேரம் நேர்த்தி கடனாய் பார்க்கும் இந்தியத் திருநாட்டில் இது சாத்தியமே. அணைத்த டீவியையே அரை மணி நேரம் பார்க்கும் தமிழ்கூர் நல்லுலகம் இருக்கும் வரை டாப் டென் என்ன, டாப்பிற்கே போக முடியும். போகப் போகிறோம்!

ஓடீடீயில் இரண்டு வகை. சந்தா கட்டி பார்க்கும் ரகம். ‘அமேஸான் பிரைம்’, ‘நெட்ஃப்ளிக்ஸ்’ போன்றவை. அடுத்தது கொஞ்சம் சந்தா நிறைய விளம்பரத்தோடு பார்க்கும் கலவை. ‘ஹாட்ஸ்டார்’, ‘சோனிலைவ்’ போல. இரண்டு வருடம் முன்பு அகஸ்மாத்தாய் ஆரம்பித்த விஷயம் ஓடீடீ. இங்கு மட்டுமல்ல, உலகெங்கும்.

அசுரத்தனமாய் ஸ்மார்ட்ஃபோன் விற்பனை பெருக அதைவிட வேகமாக பிராட்பாண்ட் ஸ்பீட் அதிகரிக்க, ‘ஜியோ’ புண்ணியத்தில் ‘இண்டர்நெட் டேட்டா பேக்’ இங்க் பாட்டில் விலையை விட குறைய, புதிய பிராண்டுகள் புற்றீசல் போல் பிறக்க ‘ஓடீடீ விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்று பாரதி கூறியதை சற்று மாற்றி சப்ஜாடாய் பார்த்து மகிழப் பழகி வருகிறோம்!

ஒடீடீ மார்க்கெட் ஓட்டமாய் ஓட தொழில்நுட்ப வளர்ச்சியோடு மாறிவரும் நம் வாழ்க்கையும் ஒரு காரணம். விழித்திருக்கும் பொழுதின் பெரும் பகுதியை இன்று வீட்டுக்கு வெளியே செலவழிக்கிறோம். நம் டிராவல் டைம் அக்கிரமத்துக்கு அதிகரித்திருக்கிறது.

பைக்கில் ஏறி, பஸ்ஸில் சென்று, டிரெயினில் போய், ஓலாவில் பிரயாணித்து இதுவும் பத்தாது என்று நடந்து போய் வாழ்க்கையை வாழ்கிறோம். மீதி பொழுதை எதற்காகவாவது காத்திருப்பதில் கழிக்

கிறோம். நம் டீவி பார்க்கும் நேரம் குறைந்து வருகிறது. அதற்காக டிவி பார்க்காமல் இருக்க முடிகிறதா. சினிமா முதல் சீரியல் வரை, டான்ஸ் போட்டிகள் முதல் 20-20 மேட்சுகள் வரை பார்க்காமல் விட்டால் பாவம் வந்து சேராதா. ஆண்டவன் தந்த அழகான கண்களை அனாதையாக்குவதா. கடவுள் தந்த காதுகளின் கதவை அடைப்பதா.

அய்யஹோ என்று அலறிய நேரம் ஆபத்பாந்தவனாக அனாத ரட்சகனாக வந்து சேர்ந்திருக்கிறது ஓடீடீ. அது தான் பாத்ரூம் முதல் சகட்டுமேனிக்கு சப்ஜாடாக எல்லா இடங்களிலும் இன்டர்நெட் வசதி இருக்கிறதே. பத்தா குறைக்கு வைஃபை பரம்பொருளாய் பரவியிருக்கிறது.

கையில் இருக்கும் லேப்டாப்பை கனெக்ட் செய்தால் போயிற்று. இல்லை, பையில் இருக்கும் செல்லை ஆன் செய்தால் ஆயிற்று. டீவி ரெடி, வீடியோ ஆரம்பம். பார்த்து பரவசப்படவேண்டியது தான் பாக்கி. இதுதான் ஜுரவேகத்துடன் நாடு முழுவதும் வியாதியாய் வளர்ந்து வருகிறது.

ஓடீடீ வளர்ச்சிக்கு இதைவிட முக்கியாமான காரணம் நாம் டிவி பார்க்கும் விதம். இன்னும் சொல்லப்போனால் டீவியையே பார்த்துக்கொண்டிருக்கும் நம் பழக்கம். சினிமா, சீரியல் போன்றவற்றை பார்க்க ஆரம்பித்தால் ஒன்று மாற்றி ஒன்று விடாமல் பார்த்துக் கொண்டே இருப்பதில் இந்தியர்களை மிஞ்சபூலோகத்தில் ஆளில்லையாம். உலக ஆய்வுகள் கூறுகின்றன. இதை பின்ஞ் வாட்சிங் (Binge watching) என்கிறார்கள்.

மற்ற விஷயங்களில் வேண்டுமானால் நாம் அடித்தால் மொட்டை. ஆனால் டீவி பார்க்கும் விஷயத்தில் நாம் வைத்தால் குடுமி. இந்தியர்களுக்கென்றே அளவெடுத்து ஆர்டர் செய்த விஷயம் ஓடீடீ. அதனால்தான் ஆபீஸ் போகும்போது பார்க்க ஆரம்பிக்கும் படத்தின் மீதியை லஞ்ச் பிரேக்கில் பார்த்து வீட்டிற்கு திரும்பும் நேரம் க்ளைமாக்ஸோடு முடிக்கிறோம். சர்வம் ஓடீடீ மயம்!

ஓடீடீயில் இன்னொரு சவுகரியம் உண்டு. மொட்டை மாடியில் டிஷ் வைக்க இடம் தேடி அது இல்லையென்றால் எந்த ஜன்னல் மேல் சொருகுவது என்று பார்த்து அங்கிருந்து மலை பாம்பு போல் ஒயர்களை இழுத்து வந்து டிஜிகாம் பாக்ஸ் வைக்க இடம் பார்த்து வீட்டையே சினிமா ஷூட்டிங் போல மாற்றி ஹாலில் நடந்து தடுக்கி அடுக்களையில் விழுகிறோம்.

ஒயர், டிஷ் உபத்திரவங்கள் இல்லாத உபகரணம் ஓடீடீ. அதனாலேயே ஓடீடீ கட்சிக்கு காசு வாங்காமல் ஓட்டு போடுகிறோம். இதை விடுங்கள். டீவியில் நல்ல நிகழ்ச்சியின் போதுதான் ஆபீசில் வேலை வரும். இல்லை அந்நேரம் எந்த உறவுக்கார உபத்

திரவமாவது வந்து சேரும். இரண்டும் இல்லையா, கரண்ட் போய் தொலைக்கும். ஓடீடீயில் இந்த இம்சை இல்லை. நாமே ராஜா நாமே மந்திரி. நாம் பார்க்கும் நேரம் தான் பிரைம் டைம்!இந்தியாவில் மீடியா மூலம் பெறும் விஷயங்களில் இன்று பதினாறு சதவீதம் டிஜிடல் மீடியம் மூலம் பெறுகிறோமாம்.

அதுவும் இளைஞர்கள் டிஜிட்டல் மூலம் பெறுவது இருபத்தி ஐந்து சதவீதமாம். நம் ஜனத்தொகையில் ஏறக்குறைய பாதி இளைஞர்கள் என்பதை நினைவில் கொள்க. இது மேலும் அதிகரிக்கத்தான் போகிறது. டீவி பார்க்கும் நேரம் இன்னமும் குறையத்தான் போகிறது.

டீவியில் விளம்பரம் செய்து பிராண்டுகளை வளர்க்கும் கம்பெனிகள் இனி வேறு என்ன செய்து வாடிக்கையாளர்களைக் கவர்வது என்று சிந்திக்கத் துவங்கினால் தேவலை. லோக்கல் கேபிளில் விளம்பரப்படுத்துகிறேன் இனி வாடிக்கையாளர்களாக பார்த்து என் கடைக்கு வந்து கியூ கட்டி நிற்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு திண்டுக்கல் பூட்டும் திருப்பதிக்கு இலவச டிக்கெட்டும் வழங்கப்படும்.

இன்டர்நெட் தொழில்நுட்பம் வளர ஓடீடீ நம் ஒவ்வொருவரின் விருப்பத்துக்கேற்ப டார்கெட் செய்யப்படலாம்; படும். ஓடீடீயில் படம் பார்க்கிறீர்கள். உங்களுக்கு சோக க்ளைமாக்ஸ் பிடிக்காதென்றால் உங்களுக்கு மட்டும் சுபமாக முடியும்படி அப்படம் எடுக்கப்பட்டிருந்தால் அந்த முடிவை பார்க்கலாம்.

செய்ய முடியுமா என்று கேட்காதீர்கள். பேஷாக முடியும். இதை செய்ய முடியுமென்றால் நீங்கள் உபயோகிக்கும் பொருள், உங்களுக்கு பிடித்த பிராண்ட் விளம்பரங்கள் மட்டும் உங்கள் ஓடீடீயில் காண்பிக்க முடியும். காண்பிக்கத்தான் போகிறார்கள். பிரைவசி பறிபோகிறதே என்று பதைப்பவர்கள் லெட்ட்டர்ஸ் டு தி எடிட்டர் எழுதலாம்.

பிடித்ததோ பிடிக்கவில்லையோ நம் குடும்பத்தை ஒன்றாக்கி ஒரு ரூமில் ஒருசேர அமர வைத்து ஒன்றாய் பேசவைத்த, ரசிக்க வைத்த வாழ்க்கையின் கடைசி அம்சமான டீவி காணாமல் போய்கொண்டிருக்கிறது. இனிமேலும் அனைவரும் படம் பார்ப்போம், சீரியலை ரசிப்போம், மாட்சுகள் காண்போம்.

ஆனால் ஒவ்வொருவரும் அவரவர் ரூமில் அமர்ந்து. தனித்தனியாக. கம்ப்யூட்டரும் செல்ஃபோனும் தான் நம் ரத்த சம்பந்தங்கள் என்று மாறிய பிறகு குடும்பங்களை இணைத்த டீவியை பலர் இனி கண்டுகொள்ளப் போவதில்லை!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி போகும் திசையில், நம் வாழ்க்கை போகும் ஸ்பீடில், தனிவிருப்பங்கள் முக்கியத்துவம் பெறும் இக்காலத்தில், தொழில்நுட்பம் வளரும் இன்றைய நிலையில் இன்னும் கூட ஏகத்துக்கும் மாற்றங்கள் வரும். TV என்ற வார்த்தையின் முழு வடிவம் total video என்பார்கள். அது மொத்தமும் டிஜிடலாகி பைக்குள் மிச்சமாய் சுருங்கிவிட்டது.

எல்லாம் இருந்து என்ன, அறுபத்தி ஐந்து புள்ளி மூன்று ஐந்து மெகாஹர்ட்சில் ஒலி அறுபத்தி ஏழு புள்ளி ஏழு ஐந்து மெகாஹர்ட்சில் பார்த்த அந்த பிளாக் அண்ட் வொயிட் சுகம் இனி கிடைக்கப் போவதில்லை. வித்தியாசங்களை மறந்து குடும்பமாய் சேர்ந்து பார்த்த அந்த கலர்ஃபுல் வாழ்க்கை இனி திரும்பப் போவதில்லை!

-satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x