Last Updated : 03 Sep, 2014 12:16 PM

 

Published : 03 Sep 2014 12:16 PM
Last Updated : 03 Sep 2014 12:16 PM

பஸ்ஸில் கம்பியைப் பிடிக்காமல் நிற்கலாமா?

நிலா டீச்சர் குடும்பத்தினர் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்கள். பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்தது. கிடைத்த இரண்டு இருக்கைகளில் அம்மாவும் அப்பாவும் உட்கார்ந்திருந்தார்கள்.

கவினும் ரஞ்சனியும் அவர்கள் பக்கத்தில் நின்றுகொண்டு வந்தார்கள். பஸ் வேகமாகப் போய் கொண்டிருந்தது. டிரைவர் திடீரென பிரேக் போட்டார்.

பஸ்ஸில் நின்றுகொண்டிருந்த பலர் தடுமாறிக் கீழே விழுந்தனர். கம்பிகளை இறுகப் பிடித்துக்கொண்டவர்கள் கீழே விழாமல் தப்பித்தனர். கம்பியைச் சரியாகப் பிடிக்காமல் நின்றுகொண்டிருந்த கவின், இரண்டடி தள்ளிப்போய் கீழே விழுந்தான். அருகில் இருந்தவர்கள் அவனைத் தூக்கி விட்டனர்.

கவின் கீழே விழுந்த காட்சியைப் பார்த்த ரஞ்சனி வழக்கம் போல விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ரஞ்சனி, சிரிப்பை நிறுத்து. அவனுக்கு எங்காவது அடிபட்டிருக்கான்னு பாரு” என அப்பா அதட்டினார்.

“எங்கேயும் அடிபடலைப்பா” என்று கூறிக் கொண்டே அப்பாவிடம் வந்தான் கவின்.

“எப்போதும் கவின் மட்டும் ஏன்பா விழுறான்?” என்று கேட்டு மீண்டும் சிரித்தாள் ரஞ்சனி.

அதற்குள் அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்து விட்டது. பஸ்ஸிலிருந்து இறங்கினார்கள்.

“பஸ் பிரேக் போட்டவுடன் ஏன்மா நான் கீழே விழுந்தேன்?” என்று கேட்டான் கவின்.

உறவினர் வீட்டுக்கு நடந்தபடியே பஸ்ஸில் கவின் விழுந்ததற்கான காரணங்களை விளக்கத் தொடங்கினார் நிலா டீச்சர்.

“நியூட்டனோட முதல் இயக்க விதியை நீங்க படிச்சிருப்பீங்க. அதாவது புதுசா ஒரு விசை தாக்காத வரையில இயக்கத்துல உள்ள ஒரு பொருள் இயங்கிகிட்டேதான் இருக்கும் இல்லையா? அதேபோல் நிலையா உள்ள பொருள் நிலையாவே இருக்கும். இதை நிலைமம் என்றும் சொல்லுவாங்க.

பஸ் 40 கிலோ மீட்டர் வேகத்துல போய்கிட்டு இருக்கும்போது, அந்த பஸ்ஸுக்குள்ள இருக்கிற எல்லா பொருளுமே 40 கிலோ மீட்டர் வேகத்துலதான் பயணம் செஞ்சுகிட்டு இருக்கும். பஸ்ஸுக்குள்ள இருக்குற நாமும் அதே வேகத்துலேதான் பயணம் செய்வோம்.

திடீர்னு பிரேக் போடுறப்ப பஸ் என்னவோ உடனே நின்னுடும். ஆனா நாம தொடர்ந்து அதே 40 கி.மீ. வேகத்துலேயே பயணம் செய்துகிட்டு இருக்கறதாலதான் தடுமாறி முன் பக்கமா விழுறோம். அதைச் சமாளிக்கத்தான் கம்பியைப் பிடிக்கறோம்.

இது மட்டுமில்ல. ஓடற பஸ் நிக்கிறதுக்கு முன்னாடியே சிலர் படியிலேர்ந்து இறங்கறதையும், அப்படி இறங்கும்போது கீழே விழந்து காயமடைவதையும் பார்த்திருப்போம். அதுக்கும் இதுதான் காரணம். 40 கி.மீ வேகத்துல இயங்கிட்டு இருக்கற உடம்பு, திடீர்னு தன் இயக்கத்தை நிறுத்தும்போதும் தடுமாற்றம் ஏற்படும்.

அதனாலதான் ஓடுற பஸ்ஸில் இருந்து இறங்குறவங்க பஸ் எந்த திசையில ஓடுதோ அதே திசையிலே கொஞ்ச தூரம் ஓடினா பெரும்பாலும் கீழே விழ மாட்டாங்க. ஆனா இதெல்லாம் தெரியாத பலர், பஸ் ஓடற திசைக்கு எதிர் திசையில இறங்கி, தடுமாறி கீழே விழுந்துடறாங்க” என்றார் நிலா டீச்சர்.

“சரி, நின்னுக்கிட்டு இருக்கற பஸ், திடீர்னு ஸ்டார்ட் ஆனதும் ஏன் நாம எல்லாம் பின் பக்கமா விழுறோம்?” என்று ரஞ்சனி கேட்டாள்.

“சரியான கேள்வி” என்று பாராட்டிய நிலா டீச்சர், அதற்கான விளக்கத்தையும் கொடுத்தார்.

“பஸ் ஓடாம இருக்கும்போது, அதோட சேர்ந்து நாமும் ஓய்வு நிலையில்தான் இருப்போம். பஸ் திடீர்னு ஓட ஆரம்பிச்சதும் நம்மளோட கால்கள் பேருந்துடன் சேர்ந்து இயக்க நிலைக்கு மாறும். அப்போ உடலின் மற்ற பகுதிகள் ஓய்வு நிலையிலேயே இருக்க முயற்சிக்கும். அதனாலதான் பின்னோக்கி விழறோம்” என்றார் நிலா டீச்சர்.

“கண்டக்டர் கம்பியைப் பிடிக்காமதானே நமக்கெல்லாம் டிக்கெட் தர்றாரு. அவர் மட்டும் ஏன் கீழே விழறதில்லை?” என்று கேட்டான் கவின்.

இந்தமுறை கவினுக்குப் பாராட்டு கிடைத்தது. “இதுவும் சரியான சந்தேகம்தான். நன்றாகக் கவனித்தால், கண்டக்டர் தன் இரு கால்களையும் அகற்றி வைத்து நின்றிருப்பது தெரியும். நாம் படகில் போகும்போது ஏற்கனவே நான் சொன்ன தகவல் இங்கேயும் பொருந்தும்.

உங்களுக்கு நினைவிருக்கிறதா? சொல்லுங்கள் பார்க்கலாம்” என்று கவினையும் ரஞ்சனியையும் பார்த்துக் கேட்டார் நிலா டீச்சர்.

“நம் உடலின் புவியீர்ப்பு மையத்தில் இருந்து வரையப்படுகிற செங்குத்துக்கோடு கால்களுக்கு இடையே விழுந்தால் நாம் விழ மாட்டோம். அது கால்களைத் தாண்டி வெளியே விழுந்தால் நிலை தடுமாறிவிடுவோம். சரிதானே” என்று பட்டென்று பதிலைச் சொன்னாள் ரஞ்சனி. கவினுக்கும் அது நினைவு வந்துவிட்டது.

“நிலைமம், நியூட்டன் போன்ற வார்த்தைகளை பல முறை பாடப் புத்தகத்துல படிச்சிருக்கோம். அப்போ ஓரளவுக்குப் புரிஞ்சது, இப்போ அதை அனுபவமா படிக்கறப்போ இன்னும் நல்லா புரியுதும்மா” என்றான் கவின்.

மீண்டும் சிரித்தாள் ரஞ்சனி.

“இவளைப் பாருங்கம்மா” என்றான் கவின்.

“ஏம்மா சிரிக்கிறே?” என்று கேட்டார் அப்பா.

“வழக்கம் போலவே இன்னிக்கும் கவின் கீழே விழுந்ததாலதான் நாமெல்லாம் ஒரு விஞ்ஞான உண்மையைத் தெரிஞ்சிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதை நினைச்சா சிரிப்பு வருது” என்றாள் ரஞ்சனி. அதைக் கேட்டு நிலா டீச்சர், கவின் உள்பட அனைவருமே சிரித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x