Published : 14 Jun 2019 11:55 AM
Last Updated : 14 Jun 2019 11:55 AM

தரைக்கு வந்த தாரகை 17: காதலின் கைக்குட்டை

பானுமதி அம்மையாரின் நினைவுப் பகிர்தலில் காதலின் சுகந்தம் தொடர்ந்தது.

“வீடு திரும்பினோம். எப்போதும் ஏதோ ஒரு யோசனை. வீட்டின் மூலையில் தனித்து உட்கார்ந்திருந்தேன். என் வயது கொண்ட பெண்களுடன் விளையாட முடியவில்லை. தனிமையில் என் பொழுதுகள் கழிந்துகொண்டிருந்தன. என்னிடம் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை அம்மா கவனித்துவிட்டார்.

அப்பாவிடம் அவர் இதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்ததும் காதில் விழுந்தது. ‘வயதுக்கு வந்த பெண் ஏதாவது கல்யாணக் கனவில் மூழ்கிவிட்டாளோ.. அல்லது வேறு ஏதாவது சிந்தனையா?’ என அப்பா நினைத்திருப்பாரோ? ஆனால், அவர் எனக்கு வரன் தேடத் தொடங்கி விட்டார். அம்மா இதை என்னிடம் சொன்னபோது என் இதயம் நின்றே விட்டது.

தங்கை கொடுத்த தைரியம்

அப்பாவும் சரி, அம்மாவும் சரி நான் ராமகிருஷ்ணாவை காதலிப்பதை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அவர்கள் வருகிற வரன்களைப் பார்ப்பதில் மூழ்கிவிட்டார்கள். எனக்கு வந்த வரன்களில் அப்பாவுக்கு பிசப்பதி குடும்பத்தாரின் வரனைத்தான் பிடித்திருந்தது.

‘பையன் லட்சணமாக இருக்கிறான். பணக்காரன், நன்றாகப் படித்திருக்கிறான். அதுமட்டுமல்ல பையனின் தகப்பனார் என் சினேகிதர்’ என்று அம்மாவிடம் அப்பா சொல்லிக்கொண்டிருந்தது என் தங்கை காதில் விழுந்திருக்கிறது. கர்ம சிரத்தையோடு அவள் இதை என் காதில் போட்டுவிட்டாள். “இரவெல்லாம் தூக்கமில்லை. புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தேன். யாரிடம் சொல்வேன்..

எப்படிச் சொல்வேன்? என் தங்கைக்குப் புரிந்தது ‘இதோ பார் அக்கா… பயப்படாதே! அவங்ககிட்டே உன் விஷயத்தைச் சொல்லிடறேன்’ என்று அவள் சொன்னதும் திகைத்துப் போய் அவளைப் பார்த்தேன். ‘ஓ! ஆமாம் எனக்கு எல்லாம் தெரியும். நீ ராமகிருஷ்ணா மீது எவ்வளவு பிரியம் வைத்திருக்கிறாய்!. நீ அவரை அடிக்கடி பார்ப்பது எனக்கு முன்பே தெரியும்’ என்றதும், என்னால் அவளை நேர்கொண்டு பார்க்க முடியவில்லை.

தலையைக் குனிந்து கொண்டேன். இப்போதும் நான் மெளனம் சாதித்தால், அது என்னையே ஏமாற்றிக் கொள்வதாகத்தான் இருக்கும். அவளைப் பார்த்து மெல்லிய குரலில் ‘நான் கல்யாணம் செய்து கொள்வதாய் இருந்தால், அவரைத்தான் பண்ணிக்கொள்வேன்’ என்றேன்.

தங்கைக்குப் புரிந்தது. ‘நீ கவலைப்படாதே. நான் அம்மாவிடம் பேசறேன்’ என்றாள். நான் தங்கையின் கையைப் பிடித்துக்கொண்டேன். அப்பாவுக்குத் தெரிந்தால் ஆத்திரப்படுவார். அவரை அப்பா ஏற்றுக்கொள்ள மாட்டார். அவரைப் பார்த்தால் ஏழை மாதிரிதான் தெரிகிறது என்று புலம்பினேன்.

‘ஆமாம், அக்கா ஒருநாள் மேக்கப் அறையிலிருந்து வரும்போது பார்த்தேன். வராந்தாவில் ஃபேனுக்கு கீழே நின்றுகொண்டிருந்தார். அவரது சட்டையின் காலர் ரொம்பவே சாயம் போயிருந்தது. அவர் ஏழைதான். சந்தேகமில்லை. ஆனால் நல்லவர்’ என்றாள்.

உண்மைதான். ‘நல்லவர், நல்லவர் என்று எல்லோரும் திரும்பத் திரும்ப இந்த வார்த்தையைத்தான் சொல்லுகிறார்கள். இந்த உலகத்தில் எனக்கு ஒன்றுமே வேண்டாம். அந்த நல்லவர் என் கணவராக வேண்டும்’ - இப்படி ஒரு சங்கல்பத்தை அந்தக் கணமே செய்துவிட்டேன்.

தங்கையிடம் அப்பா தேர்ந்தெடுக்கிற யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ளப்போவதில்லை என்றேன் தீர்மானமாக. ‘ஓ.கே. நீ அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளப் போகிறாய் அப்படித்தானே? அப்பாவிடம் சொல்லிவிடட்டுமா?’ என்றாள். நான் சிலையாக நின்றுவிட்டேன்.

அப்பாவுக்குக் கோபம் மூண்டு, அந்தப் படத்தில் நான் நடிப்பதை ரத்து செய்துவிட்டால்… ராமகிருஷ்ணாவுக்கு வேலை போய்விட்டால்… அல்லது வேறு ஏதேனும் விபரீதம் ஏற்பட்டுவிட்டால்? என் முகத்தில் படர்ந்த பீதியைத் தங்கை கவனித்துவிட்டாள். ‘சரி, நீ இப்படி மௌனமாகவே இருந்தால் அப்பா அவசரமாக ஒரு வரனைத் தேடி முடித்துவிட்டார் என்று வைத்துக்கொள்.

உன்னால் என்ன செய்ய முடியும்?’ நான் பதில் பேசாமல் நேராக சிவபார்வதி படத்துக்கு முன்னால் போய் உட்கார்ந்தேன். என் மௌனத்தைப் பிரார்த்தனையாகச் சமர்ப்பித்தேன். என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. குப்புறப்படுத்து வணங்கிய என் உடல் அழுகையால் குலுங்கியது. திடீரென்று என் தங்கை ஒரு மின்னலைப் போல ஓடிவந்தாள்.

‘அக்கா… அப்பாவிடம் ஒன்று பாக்கியில்லாமல் சொல்லிவிட்டேன்’ என்றாள். எனக்கு தூக்கிவாரிப் போட்டது. ‘ஏன் சொன்னாய்’ எனக் கோபத்தோடு கேட்டேன். ‘ஏன் என்ன தப்பு? நீதான் அவரைத் தவிர வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டியே?’ என்றாள்.

நானோ பரிதவிப்புடன் அப்பா என்ன சொன்னார் எனப் பட படத்தேன். ‘மெட்ராஸ் போகும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டார்’ என்று அவள் நிம்மதியாகப் பெருமூச்செறிந்து சொன்னாள். எனக்கோ மூச்சுவிடுவதே சிரமமாக இருந்தது.

காயத்துக்கான மருந்து

அப்பாவுடன் சகஜமாகவே பழக முடியவில்லை.முன்புபோல் நடந்து கொள்ள முடியவில்லை. அவரோடு பேசுவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன். குற்ற உணர்வு எனக்குள் குறுகுறுத்தது. அவரோடு மிகவும் ஜாக்கிரதையாய்ப் பேசினேன்.

அவரும் அந்த விஷயத்தைப் பற்றி எதுவும் பேசவில்லை. இரண்டு மாதம் கழித்து ராமையாவிடமிருந்து உடனே புறப்பட்டு வருமாறு தந்தி வந்தது. யுத்த பீதி குறைந்துவிட்டிருந்தது. இருட்டடிப்பும் விலக்கப்பட்டு விட்டது. படப்பிடிப்பை உடனே தொடங்க வேண்டியதுதான். இதுதான் தந்தியின் சாரம்.

எனக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி. என் தங்கை சொன்னாள் ‘உன் முகத்தில் திடீரென்று சந்தோஷம் தாண்டவமாடுது!’

சென்னைக்கு வந்ததும் நேராக ஸ்டார் கம்பைன்ஸ் அலுவலகம் சென்றோம். நடிகை கண்ணாமணி என்னைப் பார்த்துவிட்டு ‘ஐயோ பெண்ணே கொஞ்ச நாளில் இப்படி இளைச்சுப் போயிட்டியே’ என்றார். அத்தோடு விடவில்லை. ‘அடி.. கள்ளி! எனக்குத் தெரியும்! காதல்ல விழுந்துட்டேன்னு சொல்லு…

உன்னை விடமாட்டேன்… யார் அந்த அதிர்ஷ்டசாலி?’ என்று என் மோவாயை நிமிர்த்திக் கேட்டார். ‘சீச்சீ...’ என்று வெட்கத்தால் நிறைந்து முகத்தை மூடிக்கொண்டேன். எல்லோரும் என்னையே பார்ப்பது போலிருந்தது. இருப்பினும், வந்ததிலிருந்து என் கண்கள் அவரையே தேடிக்கொண்டிருந்தன.

அன்றைய படப்பிடிப்பில் என்னோடு சாந்தகுமாரி ராதையாக நடித்தது ஞாபகமிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காட்சியில் நான் ரோஜாப் பூக்களைப் பறித்து என்னைச் சுற்றி தூவ வேண்டும். அந்தக் காட்சியின்போது என் வலக்கை விரலில் ரோஜா முள் ஆழமாகக் குத்தி ரத்தம் சொட்டுச் சொட்டாக வழியத் தொடங்கிவிட்டது. அதைக் கண்ட இயக்குநர், ‘ரத்தம் கொட்டுது சீக்கிரம் முதலுதவி கொடுங்க… டிங்சர் எடுத்துட்டு வாங்க” என்று கத்தினார்.

திடீரென்று எங்கிருந்தோ ராமகிருஷ்ணா ஓடிவந்தார். அவர் கைக்குட்டையை எடுத்து என் விரலில் கட்டுப்போட்டார். பெண்களிடமிருந்து காததூரம் தள்ளி நிற்கிற மனிதர் இப்படிச் செய்தார். அப்படிப்பட்டவர் மிகச் சுதந்திரமாக என் விரலில் கட்டுப் போட்டபோது எல்லோருக்கும் அவர் ஒரு கதாநாயகனாகத் தோன்றினார். காயம்பட்ட என் விரலுக்குக் கட்டுப்போடுவது தன் கடமை மாதிரி அந்தக் காரியத்தைச் செய்தார். செய்துவிட்டு எதுவுமே நடக்காதது போல நடந்து சென்று தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்.

என் உதவியாளர் இந்தக் களேபரம் எல்லாம் முடிந்தவுடன் டிங்க்சருடன் வந்தார். நான் வேண்டாமென்று சொல்லிவிட்டேன். கைக்குட்டை சுற்றிய விரலைப் பிடித்தபடி வீடு திரும்பினேன். அந்தக் காலத்தில் என் சம்பளம் இரண்டாயிரம் ரூபாய். அவர் சம்பளம் 200 அல்லது 300 இருக்கலாம்.

அந்தக் கைக்குட்டை எங்கள் காதலை அழுந்தக் கட்டியது மட்டுமல்ல; அவர் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த அவரது உழைப்பின் துளி. அன்பின் பெருங்கடல். அதைத் துவைத்து அயன் செய்தேன். அதில் படிந்துவிட்ட ரத்தக் கறையில் ஒரு எளிய இதயத்தின் உருவம் தெரிவதுபோல் எனக்குத் தோன்றியது. பூஜை செய்யாத குறைதான். அவரது கைக்குட்டையைப் பத்திரமாக மடித்துக் கவனமாக என் பெட்டிக்குள் வைத்தேன். நீண்டகாலம் அது என்னிடம் பத்திரமாக இருந்தது.

(தாரகை ஒளிரும்)

தொடர்புக்கு:-

thanjavurkavirayar@gmail.com

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x