Last Updated : 12 Jun, 2019 10:33 AM

 

Published : 12 Jun 2019 10:33 AM
Last Updated : 12 Jun 2019 10:33 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: பேயோடு ஒரு பேட்டி !

“வணக்கம் பேய்.

உன்னை நேரில் பார்க்க வேண்டும், பேட்டி எடுக்க வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. சில கேள்விகள் கேட்கலாமா?”

“பயப்படாமல் கேள். நான் இப்போதுதான் சாப்பிட்டு முடித்தேன். உன்னை விழுங்க மாட்டேன்.”

“உன்னைப் பார்த்தால் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது. பேய். உல்லாசமாக ஊர் சுற்றுகிறாய். படிப்பு, எழுத்து எதுவும் கிடையாது. நீ எப்போதும் இப்படித்தானா?”

(கடுப்புடன்) ”இப்படித்தான் எங்களைப் பற்றி என்னென்னவோ கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் படும் பாடு உனக்குத் தெரியுமா? எங்களுக்கும் பள்ளிக்கூடம் இருக்கிறது, நாங்களும் பாடம் படிக்க வேண்டும், தேர்வு எழுத வேண்டும், ஆசிரியரிடம் திட்டு வாங்க வேண்டும். இதெல்லாம் உனக்குத் தெரியாதா?”

“ஐயோ, தெரியாதே. கொஞ்சம் சொல்லேன்!”

“பேய் பள்ளி ஒன்று காட்டுக்கு நடுவில் இருக்கிறது. எங்களைப் போன்ற குட்டிப் பேய்களுக்கு அங்கே மூத்த பேய்கள் வகுப்பு எடுப்பார்கள். காலை ஆறு மணிக்கு ஓநாய் ஊளையிட்டதும் பள்ளிக்கு ஓடுவோம். காலை வணக்கம், சதுக்க பூதத்துக்கு. முதல் வகுப்பு தமிழ்.

புறநானூறு போர்க் காட்சிகளில் வரும் விதவிதமான பேய்களைத் தெரிந்துகொள்வோம். இளங்கோவடிகளின் இடாகினிப் பேயைப் படிக்கும்போது எனக்கே ‘திக் திக்’ என்று அடித்துக்கொள்ளும். பூதத்தாழ்வாரும் படிப்போம். அது ஆன பிறகு, ஆங்கிலம். ஷேக்ஸ்பியர், ஆஸ்கர் ஒயில்ட், சார்லஸ் டிக்கன்ஸ் என்று யாரெல்லாம் பேய் பற்றி எழுதியிருக்கிறார்களோ அவர்களை எல்லாம் உருப்போட வேண்டும்.

அடுத்து, வரலாறு. குட்டிச்சாத்தான் முதல் டிராகுலாவரை உலகம் முழுக்க எப்படிப் பேய்கள் தோன்றின, பரிணாம வளர்ச்சி அடைந்தன என்று படிக்க வேண்டும். இறுதியாக, பயிற்சி வகுப்புகள். இதெல்லாம் எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”

“அடப்பாவமே, எங்களைவிட அதிகம் படிக்கிறாயே! சரி, எதற்குப் பயிற்சி வகுப்பெல்லாம்?”

“ஒரு சிறந்த பேயாக மாற வேண்டுமானால் படிப்போடு சேர்ந்து கள அனுபவமும் அவசியம் என்கிறார் சாத்தான் சார். ஒட்டடைக் குச்சியின் மீது ஏறி எப்படிப் பறப்பது? குழந்தைகளை எப்படிப் பயமுறுத்தி அழ வைப்பது? நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருப்பவர்களின் கனவில் தோன்றி குலை நடுங்க வைத்து எழுப்பிவிடுவது எப்படி? ‘ஹாஹாஹா’ என்று பூமியே அதிரும்படி சிரிப்பது எப்படி? படீரென்று தோன்றுவது எப்படி? படாரென்று உன் கண் முன்னால் மறைவது எப்படி? கும்மிருட்டில் ஊர் சுற்றுவது எப்படி? இப்படி நிறைய, நிறைய இருக்கின்றன.”

“இதை எல்லாம்கூடவா சொல்லிக் கொடுப்பார்கள்?”

“பிறகு? போன வாரம் என்ன நடந்தது தெரியுமா? இந்தத் தெரு முனையில் இருக்கும் ஒரு குழந்தையைப் பயமுறுத்துவதற்காக என்னை அனுப்பி வைத்தார்கள். ஒட்டடைக்குச்சி மீது ஏறிப் பறந்து, திறந்திருந்த ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்துவிட்டேன்.

குழந்தை விழித்துக்கொண்டு என்னைப் பார்த்தது. பயங்கரமாகச் சத்தம் போட்டுச் சிரித்தேன். கூரான நகங்களால் குழந்தையின் தோளைப் பற்றி, என் வாயைத் திறந்து விழுங்குவதுபோல் பாசாங்கு செய்தேன். மருந்துக்காவது அந்தக் குழந்தை பயந்ததா? மாறாக, ஈ என்று என்னைப் பார்த்துச் சிரித்தது. ஹி... ஹி... நீ எல்லாம் ஒரு பேயா என்று என் வகுப்பே என்னைக் கிண்டல் செய்தது. எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது, போ.”

“அட, இதற்குப் போய் இப்படியா கண் கலங்குவது! சினிமாவிலும் புத்தகத்திலும் உன்னை எப்படி எல்லாம் காட்டுகிறார்கள் என்று நீ பார்க்க வேண்டும்.”

(கோபத்தோடு) “கொடுமையோ கொடுமை. ரத்தத்தை உறிஞ்சுவேனாம். கையை, காலை முறுக்குவேனாம். உயிரையே எடுத்துவிடுவேனாம்! கனவில்கூட நான் இப்படி எல்லாம் ஒருவரையும் செய்ததில்லை. நீங்கள் ஏன் இப்படி எல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. உங்களை எல்லாம் பயமுறுத்துவதற்கே எனக்கு விழி பிதுங்கிவிடுகிறது.

ஆனால், நீங்களோ நாங்களே பயந்து நடுங்கும் அளவுக்கு என்னென்னவோ செய்கிறீர்கள். இன்னும் சிறிது காலம் போனால், பேயைக் கண்டு நடுங்கும் மனிதர்களைவிட மனிதர்களைக் கண்டு நடுங்கும் பேய்கள்தான் அதிகம் இருக்கப் போகிறார்கள், பாருங்கள்.”

(சோகத்தோடு) “உண்மைதான். சரி, எதற்காக இப்படி மாய்ந்து மாய்ந்து எங்களைப் பயமுறுத்துகிறாய்?”

“இப்போதாவது இதைக் கேட்டாயே! சொல்கிறேன். இனி எல்லோரும் அவரவர் விருப்பப்படி வாழலாம், யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று ஆகிவிட்டால் என்னாகும்? எல்லோரும் சுயநலனோடு இருப்பார்கள். ஒருவரையும் மதிக்க மாட்டார்கள். தப்பு செய்யத் தயங்க மாட்டார்கள். நீதி, அநீதி பற்றி எல்லாம் யோசிக்க மாட்டார்கள்.

மரம், காடு, விலங்கு எல்லாவற்றையும் அழித்துவிட்டு இறுதியில் தங்களையும் அழித்துக்கொண்டு உலகையும் அழித்துவிடுவார்கள். அப்பொழுது நாங்கள் எங்கே போவோம்? ஆக, எங்களை நாங்கள் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமானால் உங்களை நாங்கள் காப்பாற்றியாக வேண்டும். எனவே, பயத்தை நாங்கள் கண்டுபிடித்தோம்.

ஐயோ, இப்படிச் செய்தால் அம்மா என்ன சொல்வார், ஆசிரியர் என்ன செய்வார், அக்கம் பக்கத்தினர் என்ன நினைப்பார்கள் என்று எல்லாம் நீங்கள் பயந்தால்தான் நீங்களும் நாங்களும் உலகமும் அமைதியாக இருக்க முடியும். உங்களுக்குப் பயம் போய்விட்டால் எல்லாம் காலி.”

“அடடா, உன் அருமை தெரியாமல் போய்விட்டதே, குட்டிப் பேய்! பாழடைந்த கட்டிடங்களிலும் காடுகளிலும் வசித்துக்கொண்டு எத்தனை அருமையான சமூகப் பணியை நீ செய்துகொண்டிருக்கிறாய்!”

(புன்னகையோடு) ”நான் என் கடமையைத்தான் செய்கிறேன். மனிதர்கள் அனைவரும் நல்லவர்களாக மாறிவிட்டால் பயம் தேவைப்படாது. அப்போது நாங்களும் மறைந்துவிடுவோம். சரி, இரவு 12 மணி நெருங்கிக்கொண்டிருக்கிறது. பயிற்சி வகுப்பு தொடங்கிவிட்டது. இன்றாவது அந்தக் குழந்தையைப் பயமுறுத்துவதில் வெற்றி பெறுகிறேனா என்று பார்ப்போம்!”

கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x