Last Updated : 11 Jun, 2019 12:46 PM

 

Published : 11 Jun 2019 12:46 PM
Last Updated : 11 Jun 2019 12:46 PM

சேதி தெரியுமா? - அஜித் தோவல்: தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்

ஜூன் 3:  தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார். இந்த முறை அவர், கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் பிரதமருக்கான தேசியப் பாதுகாப்பு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவரது பதவிக்காலம் நீடிக்கும்.

8 வழிச்சாலை: தீர்ப்புக்குத் தடையில்லை

ஜூன் 3: சேலம்-சென்னை எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்திருந்த தடையை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மனுதாரர்களான மாநில அரசு, விவசாயிகள் ஆகியோரை ஒரு மாதத்துக்குள் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பருவநிலை மாற்றம்: உணவு உற்பத்தி பாதிப்பு

ஜூன் 3: பருவநிலை மாற்றத்தால், உலகளாவிய உணவு உற்பத்தி பாதிக் கப்பட்டிருப்பதாக ஆக்ஸ்ஃபோர்டு, கோபன்ஹேகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. உலகின் முக்கிய பயிர்களான அரிசி, கோதுமை, சோளம், கரும்பு உள்ளிட்டவை பருவநிலை மாற்றத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

பாலினச் சமத்துவம்: 95-வது இடம்

ஜூன் 4: 129 நாடுகள் பங்கேற்ற உலகளாவிய பாலினச் சமத்துவத்துக்கான பட்டியலில் இந்தியா 95-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஏழ்மை, சுகாதாரம், கல்வி, எழுத்தறிவு, அரசியல் பிரதிநிதித்துவம், பணியிடத்தில் சமத்துவம் ஆகிய அம்சங்களை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான (SDG) பாலினப் பட்டியலை பிரிட்டனைச் சேர்ந்த ‘ஈகுவல் மெஷர்ஸ் 2030, என்ற அமைப்பு உருவாக்கியிருக்கிறது. இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை டென்மார்க், பின்லாந்து, ஸ்விடன் ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.

நீட்: 48.57% தமிழக மாணவர்கள் தேர்ச்சி

ஜூன் 5: நீட் தேர்வில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 59,785 மாணவர்கள் தேர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனால், சென்ற ஆண்டு பெற்ற 39.56 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 48.57 சதவீதமாக மாநிலத் தேர்ச்சி விகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் தரவரிசைப் பட்டியலில் முதல் 50 இடங்களைப் பிடிக்கவில்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த நலின் கன்டேல்வால் முதலிடம் பிடித்துள்ளார். தேசிய அளவில், 56.57 சதவீத மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சியடைந்திருக்கின்றனர்.

மறுசீரமைக்கப்பட்ட அமைச்சரவை

ஜூன் 5: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் எட்டு முக்கிய அமைச்சரவைக் குழுக்கள் மாற்றியமைக்கப்பட்டு இருக்கின்றன. பொருளாதார விவகாரம், நாடாளுமன்ற விவகாரம், பாதுகாப்பு உள்ளிட்ட எட்டு துறைகளின் அமைச்சரவைக் குழுக்கள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன. இதில், அனைத்துக் குழுக்களிலும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம்பெற்றிருக்கிறார். ஆறு குழுக்களில் பிரதமர் நரேந்திர மோடி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

s3jpg

தாய்லாந்தின் புதிய பிரதமர்

ஜூன் 5: தாய்லாந்தின் அடுத்த பிரதமராக பிரயூத் சன்-ஒ-சா தேர்ந்தெடுக்ககப்பட்டிருக்கிறார். ராணுவ ஆதரவு கட்சியான ‘பலங் பிரசாரத்’ சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் பிரயூத் சன்-ஒ-சா. இவர் தாய்லாந்தின் 29-வது பிரதமர்.

சர்வதேச விண்வெளி நிலையம் திறப்பு?

ஜூன் 7: சர்வதேச விண்வெளி நிலையம், அடுத்த ஆண்டு முதல் விண்வெளி சுற்றுலாவுக்குச் செல்ல விரும்பும் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என்று நாசா தெரிவித்திருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூபாய் மதிப்பில் 2.4 கோடி கட்டணம் நிர்ணயித்திருக்கிறது நாசா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x