Published : 26 Jun 2019 10:42 am

Updated : 26 Jun 2019 10:42 am

 

Published : 26 Jun 2019 10:42 AM
Last Updated : 26 Jun 2019 10:42 AM

டிங்குவிடம் கேளுங்கள்: அதிகாலைக் கனவு பலிக்குமா?

அதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்கிறார் என் பாட்டி. அது உண்மையா, டிங்கு?

- வி. அனீஸ் சங்கர், 8-ம் வகுப்பு, கமலாவதி உயர்நிலைப் பள்ளி, சாகுபுரம், தூத்துக்குடி.


கனவுகள் குறித்து நீண்ட காலமாக ஆராய்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டே வருகின்றன. இன்னும்கூட பல விஷயங்களுக்கு உறுதியான விடை கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் கனவு குறித்த அத்தனை கேள்விகளுக்கும் பதில் கிடைக்கலாம். அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் நம் நினைவுப் பகுதியில் அதிக வேலைகள் நடைபெறுகின்றன. அப்போது கனவு தோன்றுகிறது.

விழிப்புக்குச் சற்றுமுன் காணும் கனவு என்பதால், இது நம் நினைவில் இருக்கிறது. நள்ளிரவில் ஏற்படும் கனவுகள் நமக்கு அவ்வளவாக நினைவில் நிற்பதில்லை. அதிகாலையில் ஏற்படும் கனவு மகிழ்ச்சியாக இருந்தால் மகிழ்வதும் துன்பமாக இருந்தால் வருத்தப்படுவதும் மனிதர்களின் இயல்பு.

அதில் ஏதாவது ஒன்றிரண்டு நிகழ்வுகள் தற்செயலாக நிகழ்ந்திருக்கலாம். ஆனால், அதிகாலைக் கனவு பலிக்கும் என்பதற்கு அறிவியல்ரீதியான ஆதாரம் இல்லை, அனீஸ் சங்கர். கனவைக் கனவாக நினைத்து மறந்துவிட்டு, அடுத்த வேலையைப் பார்க்கலாம்.

பெர்முடா முக்கோணம்போல் உலகில் வேறு ஏதாவது இடம் இருக்கிறதா, டிங்கு?

– ஹான்சென். எஸ். ஜெரோம், 10-ம் வகுப்பு, எஸ்.பி.ஓ.ஏ. பதின்ம மேல்நிலைப் பள்ளி, மதுரை.

பஹாமஸ் நாட்டுக்கு அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் பெர்முடா முக்கோணம் இருக்கிறது. இந்தப் பகுதிக்கு மேலே செல்லும் விமானங்கள், கடந்து செல்லும் கப்பல்கள் மாயமாகிவிட்டதாகச் சொல்லப்படுவதால், இதைச் ‘சைத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கிறார்கள். இந்தப் பகுதியில் நடைபெற்ற சில விபத்துகள் மனிதர்களின் தவறுகளால் நடந்திருக்கின்றன.

கடற்கொள்ளையர்களாலும் காணாமல் போயிருக்கின்றன. உலகப் போர்களின்போது கப்பல்களையும் ஆயுதங்களையும் இங்கே போட்டிருக்கிறார்கள். ஒரு சில விபத்துகள் சூறாவளி, பேரலை போன்ற இயற்கைப் பேரிடர்களால் நிகழ்ந்திருக்கின்றன. பெர்முடா முக்கோணம் குறித்து வெளிவந்திருக்கும் ஏராளமான செய்திகளுக்கு ஆதாரம் இல்லை, ஜெரோம். பெர்முடா முக்கோணம் போன்று அமானுஷ்யம் நிறைந்ததாக இன்னும் சில இடங்களைச் சொல்கிறார்கள்.

மிதவைத் தாவரங்களும் மின்னோட்டமும் அதிகமுள்ள சார்கோசா கடல், பசிபிக் பெர்முடா முக்கோணம் என்று அழைக்கப்படும் ஜப்பானின் ‘சைத்தான் கடல்’, அமெரிக்காவின் மிச்சிகன் ஏரியில் உள்ள ‘மிச்சிகன் முக்கோணம்’ போன்றவை பெர்முடா முக்கோணம்போல் அமானுஷ்யம் நிறைந்ததாகக் கூறப்படுகின்றன.

அணைகளில் இவ்வளவு டிஎம்சி தண்ணீர் இருக்கிறது, இவ்வளவு டிஎம்சி. தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று சொல்கிறார்களே, டிஎம்சி என்றால் என்ன, டிங்கு?

- எஸ். ஹரிஹரசுதன், 10-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சமயபுரம்.

அணைகளில் இருக்கும் தண்ணீரின் கொள்ளளவை, டிஎம்சி என்ற அளவில் கணக்கிடுகிறார்கள். ஆயிரம் மில்லியன் க்யூபிக் அடி (Thousand Million Cubic Feet) நீரை ஒரு டிஎம்சி தண்ணீர் என்று குறிப்பிடுகிறார்கள். 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்துக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கு, 1 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும் என்கிறார்கள், ஹரிஹரசுதன்.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

weekly-updates

சேதி தெரியுமா?

இணைப்பிதழ்கள்

More From this Author

x