Published : 08 Apr 2014 01:35 PM
Last Updated : 08 Apr 2014 01:35 PM

பெயர் தெரியா பறவை: வாசகர் எதிர்வினை

தி இந்து 18.3.2014 உயிர்மூச்சு இணைப்பில் எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய ‘வீட்டைச் சுற்றும் விருந்தினர்' கட்டுரையைப் படித்தேன். அதேபோல எனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

அழகிய பெரியவன் அவர்களின் வீட்டருகே வரும் குருவிகள் தவிர இரட்டை வால் குருவி, மரங்கொத்தி, மீன்கொத்தி, மணிப்புறா உள்ளிட்ட பறவைகளும் எனது வீட்டருகே தினம் தினம் வருவதை நானும் என் குடும்பத்தினரும் கண்டு களிக்கிறோம். இதனாலேயே 1,500 சதுரஅடி கொண்ட ஒரு மனையில் கட்டடம் ஏதும் எழுப்பாமல், மரங்களை மட்டுமே வைத்திருக்கிறேன்.

தவிட்டுக் குருவி, மணிப்புறா, சிட்டுக் குருவி, தேன் சிட்டு ஆகியன மரக் கிளைகளில் கூடு கட்டி, குஞ்சுகளுடன் சென்றதைக் கண்டு உளம் மகிழ்ந்திருக்கிறோம்.

ஆனால், இவற்றைப் படம் எடுத்துச் சேகரிக்க இதுவரை முயற்சித்ததில்லை. அழகிய பெரியவனின் கட்டுரையைப் படித்த பிறகு, நாமும் பறவைகளைப் படம் எடுத்துச் சேகரிக்கலாமே என முனைந்தபோது, ஓர் அதிசயத்தைக் கண்டோம்.

ஏறக்குறையக் கருங்குருவி போன்ற உடல் அமைப்புடன் ஓர் அடிக்கும் மேலான நீளமுள்ள வாலைக் கொண்ட ஒரு குருவியைப் படம் எடுக்க நேர்ந்தது. எங்களுக்குப் பெயர் தெரியாத இந்தக் குருவிக்குக் கழுத்துக்கு மேல் கருமை நிறமும், கழுத்துக்குக் கீழே, வால் முனை வரை வெண்மை நிறமும் உள்ளது.

மிகவும் சுறுசுறுப்பான இந்தக் குருவி ஒரு நிமிடத்துக்கு மேல் எந்தக் கிளையிலும் தங்கவில்லை. பறக்கும் சிறு பூச்சிகளை அது பறந்தவாறே லாகவமாகப் பிடித்துத் தின்ற காட்சி அலாதியானது.

எங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பொறுத்தவரை வருத்தமான விஷயம் என்னவென்றால், நிழலில் ஒதுங்கும் தவளை, தேரைகளைப் பிடிப்பதற்கும், கூட்டில் உள்ள பறவைக் குஞ்சுகளை உண்பதற்கும், பல ரகப் பாம்புகள் வருகின்றன.

பாம்புகளைக் கண்டு நாங்கள் அஞ்சுவது இல்லை. எங்களைக் கண்டு அவையும் அஞ்சுவதில்லை என்பது வேறு விஷயம். அதேநேரம், மேலே கண்ட பறவையின் பெயரை அறிய ஆவலாக உள்ளேன்.

- ந.ச.நடராசன்

nattu28051971@gmail.com

(வாசகர் நடராஜன் சுட்டிக்காட்டியுள்ள பறவையின் பெயர், வேதிவால் குருவி அல்லது அரசவால் ஈப்பிடிப்பான் - Asian Paradise Flycatcher)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x