Last Updated : 16 Mar, 2018 11:40 AM

 

Published : 16 Mar 2018 11:40 AM
Last Updated : 16 Mar 2018 11:40 AM

துயரிலிருந்து மீட்ட எழுத்து

பெ

ரும் துயரிலிருந்து நம்மை மீட்டெடுக்கிற கருவி எப்போதும் இருக்கவே செய்கிறது. அதைக் கண்டடைவது மட்டுமே நமது பணியாக இருக்க முடியும். விபத்தில் சிக்கி, இடுப்பின் கீழே பகுதி முழுமையாகச் செயலற்றுப்போன நிலையில், அத்துயரிலிருந்து மீண்டு வந்திருக்கிறார் எழுத்தாளர் லக்‌ஷ்மி சிவக்குமார். ‘இப்படிக்கு கண்ணம்மா’ என்னும் நாவலையும் ‘லங்கூர்’ என்னும் சிறுகதைத் தொகுப்பையும் எழுதியுள்ள அவர், “தன்னை அத்துயரிலிருந்து மீட்டது வாசிப்புதான்” என்கிறார்.

முடக்கிய விபத்து

1996-ல் தஞ்சாவூரில் பேருந்து நடத்துநராகப் பணியாற்றினார் லக்‌ஷ்மி சிவக்குமார். அவர் குடும்பமே அவரது வருவாயை நம்பித்தான் இருந்தது. 2003-ம் ஆண்டு நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தபோது கடலூரில் விபத்தில் சிக்கினார் அவர். அந்த விபத்தில் அவரது முதுகுத் தண்டுவடத்தில் அடிபட்டு இடுப்புக்குக் கீழே உள்ள பகுதிகள் செயல்படாமல் போயின. அந்தத் துயரமான தருணத்திலிருந்து அவர் மீண்டதற்கு இலக்கியம்தான் காரணமாக இருந்திருக்கிறது.

“விபத்துக்குப் பிறகு எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியல. அதைத் தெரிஞ்சிக்கிறதுக்கே ஒரு மாதம் ஆச்சு. அதுவரைக்கும் நினைவு திரும்பாம இருந்தேன். இனி, நடக்கவே முடியாம ஒரே இடத்தில் கிடக்க வேண்டியிருக்கும் என்று தெரிஞ்சதும், அதை நம்பிக்கையோட அணுக ஆரம்பிச்சேன். மருத்துவத் தீர்வு நிச்சயம் இருக்கும்னு தோணுச்சு. அதுக்காக நிறைய முயற்சிகள் பண்ணேன்.

ஆனா, மருத்துவர்கள் இனி நடக்கவே முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டாங்க. அதன் பிறகும் பல முயற்சிகள் செஞ்சு பார்த்தும், ஏமாற்றம்தான் கிடைச்சுது. நாளுக்கு நாள் மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்துகிட்டே வர்றப்போ இதுக்கொரு தீர்வு இல்லாமலா போயிடும்ங்கிற ஒரு பாசிட்டிவ் எண்ணம் மட்டும் இருந்துச்சு.

ஓடியாடித் திரிஞ்சிட்டு ஒரே இடத்தில் முடங்கிப்போனது அவ்வளவு சாதாரண விஷயமில்லைதான். என் கவனத்தைத் திசைதிருப்ப புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிச்சேன். பாலகுமாரன், சுஜாதாவில் தொடங்கி தி.ஜா, ஜெயகாந்தன், முரகாமி, ஆல்பெர் காம்யு, தஸ்தாயெவ்ஸ்கி என எனது வாசிப்பு விரிஞ்சுகிட்டே போச்சு.

lakshmi sivakumar (2)

அப்போ அதுதான் என் மன வலிக்கு மருந்தா இருந்துச்சு. வாசிப்பு, வாழ்க்கையைப் புரிதலோட அணுக உதவியாவும் இருந்துச்சு. நான் என் பிரச்சினையையும் சரியான புரிதலோடு அணுகி வெளியே வர அதுதான் காரணம்” என்கிறார் லக்‌ஷ்மி சிவக்குமார்.

எழுத்தாளர் அவதாரம்

எழுத்தாளர் ஆகும் எண்ணம் வந்தது எப்படி வந்தது என்று கேட்டதும், அதன் பயணத்தை அவர் பகிர்ந்துகொண்டார்.

“வாசிக்க வாசிக்க எழுதணும்னு தோணுறது இயல்பான விஷயம்தான். அதுவும் போக மனசுல இருக்கிற வலியை எழுத்தின் வழியா வெளியேற்றிட முடியும். தொடக்கத்துல கவிதைகள் எழுதிக்கிட்டிருந்தேன். பிரசுரத்துக்கு எங்கேயும் அனுப்பாம, அது எனக்குள்ள மட்டுமே இருந்துச்சு. அடுத்ததா நாவல், சிறுகதைன்னு நகரலாம்னு யோசிச்சப்பதான் ‘இப்படிக்கு கண்ணம்மா’ உதயமாச்சு.

சினிமா ஆர்வம் இருக்கிறதால முதல்ல அதைத் திரைக்கதையாகத்தான் எழுதினேன். இரண்டாவது பாதியை எழுதினதும் இயக்குநர் ராமுக்கு அதோட கதைச் சுருக்கத்தை அனுப்பியிருந்தேன். அவர் அதைப் பார்த்துட்டு சீக்கிரமே கூப்பிடுறேன்னு சொன்னார். அந்த ஊக்கத்துலதான் அதை நாவலா எழுத ஆரம்பிச்சேன். இந்த நாவல் என்னுடைய வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. அதன் முக்கியக் கதாபாத்திரம் நான்தான்.

சொந்தக் கதையை எழுதுறதுல ஒருவிதத் தாழ்வு மனப்பான்மையும் இருந்துச்சு. வாசிப்புதான் அந்தத் தயக்கத்தை உடைச்சது. எழுத்தாளன் தன்னுடைய ரகசியங்களைத் தன் படைப்புக்குள் புகுத்திடுவான்ங்கிற புரிதல் எனக்கு வந்ததும், அந்த நாவலை முழுமூச்சா எழுதி முடிச்சேன்.

விபத்துக்குள்ளானவங்களை எப்படிக் கையாண்டு மருத்துவமனைக்குக் கூட்டிட்டு வரணும்ங்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துறதும் என்னுடைய நாவலின் நோக்கமாக இருந்துச்சு. விபத்துக்குள்ளானவரை முறையா கையாளவில்லைன்னா அவருடைய வாழ்க்கையே போயிடும். மருத்துவர்கள் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், எழுத்தாளனுக்கும் அந்தக் கடமை இருக்குன்னு தோன்றியதால அந்த முறைகளைப் பத்தியும் எழுதினேன்.

2013-ம் ஆண்டு எழுத ஆரம்பிச்ச நாவலை, 2015-ம் ஆண்டுதான் முடிச்சேன். 2016-ம் ஆண்டு பூராவும் சிறுகதையில் கவனம் செலுத்தி பத்து சிறுகதைகள் எழுதினேன். சிற்றிதழ்கள் சிலவற்றில் அந்தக் கதைகள் பிரசுரமாகி ‘லங்கூர்’ங்கிற தொகுப்பா வந்திருக்கு” என்கிறார் லக்‌ஷ்மி சிவக்குமார்.

தற்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டதும், “ஒரு நாவல் எழுதி முடிச்சிருக்கேன். தலைப்பு இன்னும் வைக்கலை. அதில் சில திருத்தப்பணிகள் போய்க்கிட்டிருக்கு. எப்படியும் இந்த ஆண்டு வெளியாகிவிடும்” என்றவர், “ கைவிடப்பட்ட ஒவ்வொருவரும் யாரையும் சார்ந்து வாழக் கூடாதுங்கிற எண்ணத்தை வளர்த்துக்கணும். இந்த உறுதியை வாசிப்பு நமக்குக் கொடுக்கும்.

‘இலக்கியம் என்பது மரணத்தை ஒத்திப் போடுவதற்கான பயிற்சி அல்லது முயற்சி’ன்னு என்னுடைய சிறுகதைத் தொகுப்பில் குறிப்பிட்டிருப்பேன். இலக்கியம்ங்கிறது மரணத்துக்குப் பிறகும் மனித வாழ்வை அர்த்தப்படுத்திவிடும்னு முழுமையா நம்புறேன்” என்கிறார் லக்‌ஷ்மி சிவக்குமார்.

எழுத்து மீது அவர் கொண்ட நம்பிக்கைதான் அவரைத் தொடர்ந்து எழுத வைத்துக்கொண்டிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x