Published : 07 Mar 2018 11:21 AM
Last Updated : 07 Mar 2018 11:21 AM

டிங்குவிடம் கேளுங்கள்: வவ்வால் மோதாமல் பறப்பது எப்படி?

எழுத்தாளர்கள் ஏன் புனைபெயர் வைத்துக்கொள்கிறார்கள், டிங்கு?

– ஹ. நேஹா, 7-ம் வகுப்பு, எஸ்.ஜே.எஸ்.வி. சிபிஎஸ்சி பள்ளி, கோவை.

நம் பெயரை நாம் தேர்ந்தெடுக்க முடியாது. அதனால் சிலர் அவர்களுக்குப் பிடித்த பெயரை, எழுதும்போது புனைபெயராகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். சிலர் தங்களின் அடையாளம் தெரியக் கூடாது என்று நினைப்பார்கள். அதனால் வேறு பெயரில் எழுதுவார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் பெண்கள் எழுதியதை யாரும் பொருட்படுத்தவில்லை.

அதனால் அவர்கள் ஆண் பெயர்களில் எழுத ஆரம்பித்தனர். சிலருடைய பெயரில் ஏற்கெனவே எழுத்தாளர்கள் இருப்பார்கள். அதனால் அவர்களால் தங்களுடைய பெயரைப் பயன்படுத்த முடியாது. எனவே, அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புனைபெயரில் எழுத வேண்டிய அவசியத்தில் இருப்பார்கள்.

துப்பறியும் கதைகளை எழுதிப் புகழ்பெற்ற அகதா கிறிஸ்டி, காதல் கதைகளுக்கு மேரி வெஸ்ட்மாகொட் என்ற புனைபெயரைப் பயன்படுத்தினார். சிறுகதை எழுத்தாளர் ஓ ஹென்றியின் இயற்பெயர் வில்லியம் சிட்னி போர்டர். தமிழ் எழுத்தாளர்களில் கனகசுப்புரத்தினம் – பாரதிதாசன், முத்தையா – கண்ணதாசன், ரங்கராஜன் – சுஜாதா, விருத்தாசலம் – புதுமைப்பித்தன், சி.எஸ். லக்ஷ்மி – அம்பை, குழந்தை எழுத்தாளர்கள் வி. கிருஷ்ணமூர்த்தி – வாண்டு மாமா, கெளசிகன், ஈ.எஸ். ஹரிஹரன் – ரேவதி ஆகியோர் புனைபெயர் வைத்துக்கொண்டவர்களில் சிலர், நேஹா.

வவ்வாலுக்குக் கண் தெரியாவிட்டாலும் எப்படி எதன் மீதும் மோதாமல் பறக்கிறது, டிங்கு?

– ஆர். சாரதா, 9-ம் வகுப்பு, அரசினர் மேல்நிலைப் பள்ளி, திருவண்ணாமலை.

பூச்சியுண்ணும் வவ்வாலுக்குப் பார்வையே கிடையாது என்று சொல்லிவிட முடியாது, சாரதா. பார்க்கும் சக்தி மிக மிகக் குறைவாக இருக்கும். அதை வைத்துக்கொண்டு தெளிவாகப் பார்க்க முடியாது என்பதால் வவ்வால்கள் ஒலியை நம்பியிருக்கின்றன. இவை வெளிப்படுத்தும் மீயொலி (Ultra sound) அலைகள் அதிக அதிர்வெண்களைக் கொண்டதாக இருக்கிறது. மனிதர்களால் 80 முதல் 20 ஆயிரம் அதிவெண் அலைகளைத்தான் உணரமுடியும். ஆனால் வவ்வால்களால் 1,50,000 அதிர்வெண்களை உணர்ந்துகொள்ளமுடியும்.

அதனால் பறக்கும்போது ஒலிகளை எழுப்பிக்கொண்டே செல்கின்றன. இந்த மீயொலிகள் எதிரில் இருக்கும் பொருள், உயிரினம் போன்றவற்றில் பட்டு, பூச்சியுண்ணும் வவ்வாலுக்கு வேகமாகத் திரும்பிவருகின்றன. இதை வைத்து எதிரில் பொருளோ எதிரியோ இருப்பதை அறிந்து, திசையை மாற்றிக்கொண்டு, மோதாமல் பறந்துவிடுகின்றன. தென் அமெரிக்காவில் வாழும் மீன் பிடிக்கும் வவ்வால்கள், குளத்தின் மேல் பகுதியில் மீயொலி அலைகளைச் செலுத்தி, மீன்களைப் பிடித்துவிடுகின்றன.

பூமியில் ஏன் தேவையற்ற மரம், செடி, கொடிகள், புழு, பூச்சிகள் எல்லாம் இருக்கின்றன, டிங்கு?

– என்.கே. முரளி கிருஷ்ணா, புதுக்கோட்டை.

நமக்கு ஒரு தாவரமோ, உயிரினமோ பயன்படவில்லை என்பதால் அவை எல்லாம் தேவையற்ற உயிரினங்களாகி விடுமா, முரளி கிருஷ்ணா? எது தேவை, தேவையற்றது என்பதை நாம் எப்படி முடிவு செய்யமுடியும்? நமக்கு அறியாத, தெரியாத, பயன்படாத உயிரினங்களும் நம்மைப் போலவே இந்தப் பூமியில் வாழும் தகுதியைப் பெற்றுள்ளன. மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினங்களும் பூமியை இவ்வளவு மோசமாக மாசுப்படுத்திக்கொண்டிருக்கவில்லை. ஒருவேளை மற்ற உயிரினங்கள் எல்லாம் மனிதர்களாகிய நம்மை, தேவையற்ற / கேடு விளைவிக்கிற உயிரினங்களாகக் கருதினால் என்னாவது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x